அதிமுக செயற்குழு கூட்டம்...முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்...!

அதிமுக செயற்குழு கூட்டம்...முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்...!

தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரிப்பு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவிற்கு கண்டனம் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில் தலைமை அலுவலகம் வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக கட்சி அலுவலகம் முன்பு உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. மேலும் திமுக அரசிற்கு எதிராகவும், கட்சி தொண்டர்களின் சூளுரை குறித்தும் முக்கியமான 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

அந்த வகையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு நடத்தவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதாக கூறி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் வருகின்ற சட்டமன்ற , நாடளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது, அதிமுகவின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : நாளை முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...விழிப்புணர்வு பேரணி நடத்த உத்தரவு.!

அதேபோல் அதிமுகவின் ஐடி விங் நிர்வாகிகள் மீது திமுக அரசின் பொய் வழக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அத்துடன் தமிழ்நாட்டின் கடன் சுமை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, சொத்து வரி, மின் கட்டண உயர்வு போன்றவற்றிற்கு கண்டனம் தெரிவித்தும், சட்டமன்ற , ஜனநாயக மரபுகளை சீரழிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும் திமுகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளவர்களுக்கு தக்க பாடம் புகட்டிட அதிமுக தொண்டர்களுக்கு சூளுரை, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவிற்கு வெற்றியை தேடித்தர தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அதேபோல் நடந்தாய் வாழி காவேரி திட்டம் மற்றும் காவேரி-கோதாவரி திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கோரியும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை கண்டுகொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய காரினை வழங்கினார்.