பாஜகவை ஓரம் கட்டிய ஆம் ஆத்மி...15 ஆண்டுகால ஆதிக்கத்தை முறியடித்து சாதனை!

பாஜகவை ஓரம் கட்டிய ஆம் ஆத்மி...15 ஆண்டுகால ஆதிக்கத்தை முறியடித்து சாதனை!

டெல்லி மாநகராட்சியில் 126 வார்டுகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 

டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல்:

டெல்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு கடந்த 4 ஆம் தேதி டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (MCD) தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவியது. ஏனென்றால், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தாலும், நகராட்சி பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாகவே பாஜக தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனை முறியடிக்கவே, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 

சட்டசபை தேர்தல்:

இதற்கிடையே, குஜராத் மற்றும் இமாச்சல மாநிலம் இரண்டிற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, பாஜகவின் கோட்டையான குஜராத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.  

வாக்கு எண்ணிக்கை:

இந்த இரண்டு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையானது நாளை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை முதலே நடைபெற்றது. 

வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி:

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே இழுபறி நீடித்து வந்தது. மொத்தம் 250 வார்டுகளில் 126 வார்டுகளை கைப்பற்றினால் வெற்றி பெற முடியும் என்ற பட்சத்தில், கடைசி சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய ஆம் ஆத்மி கட்சி வெற்றிக்கு தேவையான 126 வார்டுகளை கைப்பற்றியது. இதன்மூலம் 250 வார்டுகளை  கொண்ட டெல்லி மாநகராட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. டெல்லி மாநகராட்சி பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த பாஜக, இந்த முறை 97 வார்டுகளில்  மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மியிடம் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னணியில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றியை சந்தித்துள்ள நிலையில், நாளை நடைபெறவுள்ள குஜராத் மற்றும் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே, பாஜக தான் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியான நிலையில் , இன்றைய ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.