அண்ணாமலை vs செந்தில் பாலாஜி: Excel ஷீட் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை..!

அண்ணாமலை vs செந்தில் பாலாஜி: Excel ஷீட் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை..!

அரவக்குறிச்சி தொகுதியில் முதல் மோதல்:

பாஜக மாநில தலைவரான அண்ணாமலைக்கும் திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜிக்கும் சொந்த ஊரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில்  இருவரும் கடந்த  2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலி போட்டியிட்டனர். அரவக்குறிச்சி தொகுதி அண்ணாமலையின் நட்சத்திர தொகுதி என்பதால் தேர்தலில் முழு முனைப்புடன் ஈடுபட்டார். அதேசமயம் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்பாலாஜியும் தேர்தலில் வெற்றி பெற்றால் காவிரி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்தார். ஆற்றில் மணல் எடுப்பது சட்டபடி தவறு என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இது தான் அவர்களுக்குள் ஏற்பட்ட முதல் மோதல். 

அமைச்சரானார் செந்தில் பாலாஜி:

சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலையை தோற்கடித்து, செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்து முதன்முறையாக தனது சொந்த ஊரில்  அண்ணாமலை நட்சத்திர தொகுதியில் அவருக்கு எதிராகவே போட்டியிட்டு, வெற்றி பெற்றார். ஆனால், செந்தில் பாலாஜியின் வெற்றியை விமர்சித்த அண்ணாமலை, திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றிருக்கிறது என்ற குற்றச்சாட்டை வைத்தார். தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை அமைச்சர் என்ற பதவியை வழங்கப்பட்டது. இதனையடுத்து, செந்தில் பாலாஜி மீது அண்ணாமலை தொடர்ந்து குற்ற சாட்டுகளை வைத்து வந்தார்.

எக்ஸ்சல் ஷீட்டில் சண்டையிட்டு கொண்ட அண்ணாமலை vs செந்தில்பாலாஜி:

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், வேறு யாரையும் விமர்சனம் செய்யாத அண்ணாமலை, செந்தில் பாலாஜி மீது மட்டும் தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார். செந்தில் பாலாஜியை தொடர்ந்து சீண்டி வந்த அண்ணாமலை ஒரு கட்டத்தில் ட்விட்டரில் அதுவும் எக்ஸ்சல் ஷீட்டில் சண்டையிட்டு கொண்டனர். மின்சாரத்துறையில் ஊழல் நடப்பதாக  அமைச்சர் செந்தில் பாலாஜி மீது  அண்ணாமலை குற்றம் சாட்டி ட்வீட் பதிவிட்டிருந்தார். அத்துடன் இந்த குற்றச்சாட்டு தொடர்பான புகைப்படத்தையும் பதிவிட்டு, ``இந்த வாரம் அனல், அடுத்த வாரம் சோலார், அடுத்த வாரத்துக்கு பின் தயாராகிக்கொண்டிருக்கும் ‘பெரிய' நிறுவனம்’ என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்த செந்தில் பாலாஜி, மின்வாரியத் துறையில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அண்ணாமலை கூறியதற்கு  'ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்' என்று பதிலளித்த செந்தில் பாலாஜி, 'ரூ. 29.99 கோடி என்று எழுதக்கூட தெரியாமல், அதிமேதாவிபோல் பேசக் கூடாது' என்று ட்விட்டர் மூலம் அண்ணாமலைக்கு பதிலளித்தார்.

செந்தில் பாலாஜியை விடாத அண்ணாமலை:

செந்தில்பாலாஜியின் பதிலுக்கு மீண்டும் அதிரடியாக  ட்வீட் செய்த அண்ணாமலை, ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 20 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யும் அனல் மின்சாரத்தின் உற்பத்திச் செலவைவிட, ஐந்து மடங்கு இது கூடுதலான விலை' என்று பதிவிட்டு, அதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். அதோடு, செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் பேசிய பழைய வீடியோ ஒன்றையும் பதிவிட்டார் அண்ணாமலை. இதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, ’இந்திய மின்சந்தையில் யூனிட்டின் குறைந்தபட்சம் மற்றும் அதிகப்பட்ச விலையை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இப்படியாக அண்ணாமலை மற்றும் செந்தில் பாலாஜியின் விவாதம் என்பது ட்விட்டர் பக்கத்தில் விறுவிறுப்பாக தொடர்ந்து.

மின் கட்டண உயர்வும்; அண்ணாமலையின் குற்றச்சாட்டும்:

தமிழக மின்சார வாரியத்தில் ஊழல் நடப்பாக குற்றம் சாட்டியது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக மின்துறையில் ஏற்பட்டுள்ள கடன் காரணமாகவும், மத்திய அரசின் அறிவுறுத்தல் காரணமாகவும் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக  சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இதற்கு அதிமுகவும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இதனிடையே, பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி  நிலக்கரி கொள்முதல் என்ற பெயரில் ஊழல் செய்வதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் வாரியத்தில் தவறு நடப்பதாக இருந்தால், அதற்கான ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள், அண்ணாமலை தைரியமுள்ளவராக இருந்தால்  வழக்கு பதியட்டும் என தெரிவித்திருந்தார். இருவருக்குமான கருத்து மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை ரெய்டு வருமா?:

செந்தில் பாலாஜி vs அண்ணாமலை இருவருக்குமான அரசியல் மோதலில், இன்று செந்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் செந்தில் பாலாஜி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை ”வெயிட் பண்ணுங்க, அமலாக்கத்துறை கொஞ்சம் பிசியா இருக்காங்க, ஃப்ரீ ஆகிட்டு வருவாங்க. அது வரைக்கும் வெயிட் பண்ணுவோம் “ என்று ஒரு பதிலை தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாராங்களில் மிகப் பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.

அமலாக்கத்துறை என்பது தனிச்சையாக செயல்படகூடியது, அவர்கள் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள் அதற்கு வெயிட் பண்ணுங்க என்று அண்ணாமலை கூறுவதற்கு காரணம் என்ன? ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா? அண்ணாமலை ஏன் செந்தில் பாலாஜியை மட்டும் குறி வைத்து  குற்றம் சாட்டி வருகிறார். இப்படியான கேள்விகள் அரசியல் வல்லுநர்களிடம் எழும்பி வருகிறது.

அண்ணாமலைக்கு தக்க பதிலடி கொடுத்த செந்தில்பாலாஜி:

அண்ணாமலையின் கருத்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள செந்தில் பாலாஜி, தனிச்சையாக செயல்படும் அமலாக்கத்துறை பற்றி அண்ணாமலை எப்படி பேச முடியும்? பாஜக ஏன் பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.  இப்படி மாறி மாறி கருத்து தெரிவித்து தொடர் மோதலில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை மற்றும் செந்தில் பாலாஜி இருவரும் அரசியல் வட்டாரங்களில் ஒரு பேசு பொருளாகவே மாறியுள்ளனர்.