ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை மு.க.ஸ்டாலினிடம் நாளை தாக்கல்...

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை மு.க.ஸ்டாலினிடம்  நாளை தாக்கல்...

ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கையை, ஆறுமுகசாமி ஆணையம் நாளை காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்கிறது.

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஆணையம் அமைக்கப்பட்டது.

விசாரணை நடத்திய ஆணையம்:

இந்த ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அவரது உறவினர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, இந்த விசாரணையானது நிறைவு பெற்றுவிட்டதாக ஆணையம் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவிக்கப்பட்டது. 

எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை தாக்கல்:

இதன் இறுதி அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஆணையம் தீவிரம் காட்டி வந்த நிலையில்,   ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆவணங்களை ஆய்வு செய்து, எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.  அதில் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க: https://malaimurasu.com/posts/cover-story/Kallakurichi-case---Bail-for-5-people

இறுதி அறிக்கை தயார்:

இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது. சுமார் 600 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நாளை காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க உள்ளார்.

முன்னதாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஆணையத்துக்கு 14 முறை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நாளைய அறிக்கையின் எதிர்பார்ப்பு:

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியதையடுத்து, அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு அறிக்கையில் மருத்துவ சிகிச்சையில் எவ்வித தவறும் இல்லை என்று இருப்பதால், நாளை ஆறுமுகசாமி ஆணையம் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கபோகும் அறிக்கை எவ்வாறு அமைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.