101 வயதில் பழ வியாபாரம்...! தள்ளாடும் நிலையில் சுய கவுரவத்தை விடாமல் சிங்கப் பெண்ணாய் வலம் வரும் மூதாட்டி...!

101 வயதிலும் பழ வியாபாரம் செய்து சிங்கப் பெண்ணாய் வலம் வரும் மூதாட்டி...!

101 வயதில் பழ வியாபாரம்...! தள்ளாடும் நிலையில் சுய கவுரவத்தை விடாமல் சிங்கப் பெண்ணாய் வலம் வரும் மூதாட்டி...!

101 வயதிலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது,  சாலையோரம் பழ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார் மூதாட்டி ஒருவர். தள்ளாத வயதிலும் பிறரின் உதவியை நாடாமல், சொந்தக்காலில் நிற்கும் தஞ்சை மூதாட்டியின் தன்னம்பிக்கை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்  தொகுப்பு...

தஞ்சை மாவட்டம் பொட்டு வாசாவடியை சேர்ந்தவர் குழந்தையம்மாள். 101 வயதான இவர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சாலையோரம் குடை பிடித்தபடி  அமர்ந்து, நெல்லிக்காய், எலந்தம்பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை வியாபாராம் செய்து வருகிறார். 

அவ்வழியாக செல்லும் அனைவரின் கவனம் இவர் பக்கம் திரும்பாமல் இல்லை. "ஐயோ  இப்படி கொளுத்தும் வெயிலில் உட்கார்ந்து, வியாபாரம் செய்கிறாரே இந்த மூதாட்டி"  என்று பரிதாபத்துடன் பார்த்து செல்கின்றனர். ஒருசிலர் பாட்டிக்காக, அவரிடம் உள்ள பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். 

இந்த தள்ளாத வயதில் பாட்டிக்கு ஏன் இந்த நிலை... என்று அவரிம் கேட்ட போது அவர் கூறியது மனதை உருக வைத்தது.  

அதாவது குழந்தையம்மாளுக்கு 18 வயது இருக்கும் போது, ஆரோக்கியசாமி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கணவன், குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக 37 வயதில், குழந்தையம்மாள்,  வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன் பின்னர் யார் தயவிலும் வாழக்கூடாது, என்ற வைராக்கியத்தில்,  தஞ்சை, கீழவாசல் பகுதியில் சாலையோரத்தில், சீசனில் கிடைக்கும் பழங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இப்படியே கடந்த 70 ஆண்டுகளாக, சாலையோரத்தில் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார் இந்த மூதாட்டி.

இதற்கிடையில் அவரது கணவர் ஆரோக்கியசாமி இறந்துவிட தங்களுடன் வந்துவிடும்படி, பிள்ளைகள் அழைத்தும் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார். சுய கவுரவத்தை துளியும் விடாமல், 101 வயதிலும், கொளுத்தும் வெயிலில் வியபாரம்  செய்து வருகிறார். அரசு தனக்கு ஒரு பெட்டிக்கடை வைத்துக் கொடுத்தால், கடைசி காலம் வரை யார் தயவையும் நாடாமல், சொந்தக்காலில் நிற்பேன் என்று கூறுகிறார் இந்த சுய மரியாதை சிங்கம்...

வயதாகிவிட்டது என்று பலரும் மூலையில் முடங்கிக் கொள்ளும் நிலையில், 100 வயதைத் தாண்டியும் தன்னால் தன் சொந்தக்காலில் நிற்க முடியும் என்று கூறும் இந்த மூதாட்டி உண்மையிலேயே சிங்கப் பெண்தான்.