கோவை கார் விபத்து: திமுகவை குற்றம் சாட்டிய அண்ணாமலை...கடிதம் எழுதிய தமிழக பாஜக!யாருக்கு தெரியுமா?

கோவை கார் விபத்து: திமுகவை குற்றம் சாட்டிய அண்ணாமலை...கடிதம் எழுதிய தமிழக பாஜக!யாருக்கு தெரியுமா?

கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

கார் வெடி விபத்து:

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு பகுதியில், காருக்குள் சிலிண்டர் வெடித்து சிதறியதில் அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு தயாரித்தது அம்பலம்:

விசாரணையில், உயிரிழந்த நபரின் வீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையினர் ஆய்வு நடத்தியுள்ளதாகவும், தற்போது தனிப்படை நடத்திய சோதனையில் அவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரது செல்போனை மீட்டுள்ள போலீசார், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு:

இந்நிலையில், இந்த கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் உக்கடத்தில் நடைபெற்றது  சிலிண்டர் வெடி விபத்து அல்ல; தீவிரவாதிகளின் தற்கொலை படைத்தாக்குதல் என்று கூறியுள்ளார். இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன், தற்போது உயிரிழந்த  ஜமேஷா முபினுக்கு தொடர்பு இருந்ததாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: கோவை: கார் வெடித்து விபத்து... வெளியான சிசிடிவி காட்சி...5 பேரை கைது செய்த போலீசார்...!

சமீபகாலமாகவே, தீவிரவாதிகளின் கூடாரமாக கோவை மாறியுள்ளது என்பது 2019ல் தெரிந்தது. அந்த வகையில், தற்போது கோவை உக்கடத்தில் நடத்தப்பட்டது ஐஎஸ்ஐஎஸ் பாணியிலான தாக்குதல், அதனை மறைத்து சிலிண்டர் தாக்குதலாக போலீசார் மாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், உயிரிழந்த முபினின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பாணியில் உள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், 55 கிலோ அமோனியம் நைட்ரேட், பொட்டாசியம் போன்ற வெடி பொருட்கள் முபின் வீட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது, ஆனால், தகவல்களை காவல்துறை மறைப்பது ஏன் எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேசமயம், திமுக பொறுப்பேற்றதிலிருந்து தமிழக உள்துறை செயல் இழந்துவிட்டதாகவும், தமிழக உளவுத்துறை முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது எனவும், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் அண்ணாமலை பகீரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், கோவை உக்கடம்  கார் வெடித்த விபத்து தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.