குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : ஷௌர்ய சக்ரா விருது பெற்றவர் கேப்டர் வருண்சிங்..!

பாரஷூட் பயன்படுத்தாமல் சாதனை புரிந்தவர்..!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : ஷௌர்ய சக்ரா விருது பெற்றவர் கேப்டர் வருண்சிங்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது விபத்து தான் என இந்திய விமானப்படையே அதிகாரப்பூர்வமாக 
அறிவித்த நிலையில், நாள்தோறும் புதிய புதிய தகவல்கள் இந்த விபத்து குறித்து வெளி வந்து கொண்டே இருக்கின்றன. இந்த விபத்தில் நாம் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றால், ஹெலிகாப்டரை இயக்கிய கேப்டன் வருண் சிங் உயிருடன் பிழைத்தது தான். விபத்தில் இருந்து தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வருண் சிங்கிற்கு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

உயர் சிகிச்சைக்காக பெங்களூருவிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலத்தின் தேவரியா மாவட்டத்தை சேர்ந்த கேப்டன் வருண் சிங்கின் தந்தை கிருஷ்ண பிரசாத் இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வருண் சிங்கை பொருத்தவரை, கடந்த ஆண்டு ஒரு போர் விமானத்தை பயிற்சி ஓட்டத்திற்காக ஈடுபடுத்தி, பரிசோதனை அடிப்படையில் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது விமானி அமரும் அறையில் காற்றழுத்த கட்டுப்பாடு செயலிழந்தது. விமானம் மிக உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இந்த இக்கட்டான சிக்கலை வருண் சிங் எதிர்கொண்டார். நெருக்கடியான சூழலிலும் பிரச்சனையை சரியாக கண்டறிந்து விமானம் பறக்கும் உயரத்தை குறைத்தார். இந்த சமயத்தில் போர் விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழத் தொடங்கியது..

உயிருக்கு ஆபத்தான, உடல் மற்றும் மன அழுத்தம் மிகுந்த சூழலிலும் துணிச்சலோடு செயல்பட்டு விமானத்தை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது மீண்டும் அதன் கட்டுப்பாட்டை இழந்தது. இப்படியான ஒரு சூழலில் போர் விமானி விமானத்தை கைவிட்டுவிட்டு பாராசூட் மூலம் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சுதந்திரம் உள்ளது.ஆனாலும் துணிச்சலுடன் செயல்பட்டு மீண்டும் விமானத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பத்திரமாக தரை இறங்கினார். இதன்மூலம் விமானப்படைக்கு சொந்தமான விமானம் சேதமின்றி காப்பற்றப்பட்டது. வருண் சிங்கின் இத்தகைய துணிச்சலை பாராட்டும் வகையில் 2021 வருட சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவரால் ஷௌர்ய சக்ரா பட்டம் வழங்கப்பட்டது. இத்தனை திறமை வாய்ந்தவர் இயக்கி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது என்றால் யாராலும் நம்ப முடியவில்லை. இருப்பினும், சிகிச்சையில் இருக்கும் கேப்டன் வருண் சிங், உடல் நலம் தேறி வந்து விபத்து குறித்து கூறினால் ஒழிய நமக்குள் ஏற்படும் சந்தேகங்கள் தீரும். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிராத்திபோம்..