சிங்கார சென்னையின் முக்கிய அடையாளங்களின் வரலாறு...!

சிங்கார சென்னையின் முக்கிய அடையாளங்களின் வரலாறு...!

சென்னை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் மக்கள் மனதில் நிற்கும் சென்னையின் சில முக்கிய கட்டடங்களின் வரலாற்றை பார்க்கலாம்...

சென்னை தோன்றிய அதே நாளில் தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் உருவானது. 1639ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோட்டை தான், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டையாகும். இதனால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அதன்படி, ஆங்கிலேயர் காலத்தில் அங்குதான் நிர்வாகம் நடைபெற்றது. இதே போல், தமிழ்நாடு அரசின் நிர்வாகமும் வரலாற்று சிறப்புமிக்க ஜார்ஜ் கோட்டையில் தான் செயல்பட்டு வருகிறது.

மருத்துவத்துறையில், சென்னை அப்போதிருந்தே சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. இதற்கு உதாரணமாக இங்குள்ள மருத்துவமனைகளை சொல்லலாம். அதன்படி, ராஜீவ்காந்தி மருத்துவமனை 1664-ஆம் ஆண்டும், ராயப்பேட்டை மருத்துவமனை 1911-ஆம் ஆண்டும், ஸ்டான்லி மருத்துவமனை 1938-ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்று தான் சென்னை உயர்நீதிமன்றம். தொடக்கத்தில், 'சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், 1862ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் 'மெட்ராஸ் ஹை கோர்ட்' என்ற பெயர் மாற்றம் பெற்றது. பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன் உயர்நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, தற்போதைய உயர்நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் வெகுவிமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா...! 

1832-ஆம் ஆண்டு அப்போதைய ஆளும் பிரிட்டிஷ் உயரடுக்கை சேர்ந்தவர்களால், மவுண்ட் சாலையில் கட்டடப்பட்ட கட்டடம் தான், அடையாறு கிளப். இதுமுதலில் ஐரோப்பியர்களுக்கு மட்டுமேயான கிளப்பாகத் தொடங்கப்பட்டது. 1960-ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் உறுப்பினர்களாக அனுமதிக்கப்பட்டனர்.

விக்டோரியா ஹால் என்பது சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு கட்டடம் ஆகும். விக்டோரியா மகாராணியின் பொன்விழாவின் நினைவாக கட்டப்பட்ட இக்கட்டடம், பிரிட்டிஷ் கட்டிடக்கலையில், சென்னையில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக உள்ளது. 

நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரில் திப்பு சுல்தானை ஆங்கிலேயர் வெற்றி பெற்றதன் நினைவாக கட்டப்பட்ட மண்டபம் தான், ராஜாஜி மண்டபம். இம்மண்டபமானது கிரேக்கத்தின் பார்த்தினன் கோயிலின் சாயலில் அமைக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்பு ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை மாகாண சட்டமன்றக் கூட்டங்கள் இந்த அரங்கிலேயே நடத்தப்பட்டன. அதன் நினைவாக ராஜாஜி காலத்துக்குப் பின்பு, இந்த இடத்துக்கு ராஜாஜி அரங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களுள் ஒன்று. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம், சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்த இரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. இதுவே இந்திய துணைக்கண்டத்தில் மிகப் பழமையான ரயில் நிலையமாகும்.