"நெற்பயிரா, நிலக்கரியா?...என்ன நடக்கிறது என்.எல்.சி.யில்?" விரிவான தகவல் உள்ளே!!

"நெற்பயிரா, நிலக்கரியா?...என்ன நடக்கிறது என்.எல்.சி.யில்?" விரிவான தகவல் உள்ளே!!

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம், தனது சுரங்க விரிவாக்கப் பணிக்காக விளை நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்களை ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அழித்துள்ளது. இந்த காட்சி விவசாயிகளை மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்து விரிவாக காணலாம் இந்த பதிவில்.

மத்திய பொதுத்துறை நிறுவனத்தின் மிகப் பெரிய நிறுவனங்களுன் ஒன்று,  "நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடட்" நிறுவனம். இதுவே சுருக்கமாக N.L.C. என்று அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்காக பல நூறு கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பூமிக்கு அடியில் உள்ள நிலக்கரிகள் வெட்டி எடுக்கப்பட்டு அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.  

ஆண்டுக்கு 36 புள்ளி 6 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு அதன் மூலம் ஆண்டுக்கு, 5 ஆயிரத்து, 192 புள்ளி 56 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. என்.எல்.சி. நிறுவனத்தின் மொத்த வருமானம் 8 ஆயிரத்து, 672 புள்ளி 84 கோடியாக இருக்க, இதன் நிகர லாபம், 2 ஆயிரத்து, 368 புள்ளி 84 கோடியாக உள்ளது. 

இந்த என்.எல்.சி. நிறுவனம் செயல்படுவதற்கு நெய்வேலியில், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் ஏராளமான விளைநிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நிலங்களை வழங்கிய கிராம மக்களுக்கு, அந்த நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையுடன், மாற்று குடியிருப்பும், குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் வேலையும் வழங்கப்படும் என என்.எல்.சி. நிறுவனம் தெரிவித்தது.

இதையும் படிக்க || குப்பைத்தொட்டியில் பெண் சிசுக்களின் உடல்!!

அப்பாவி கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அரசு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிலங்களை என்.எல்.சி. நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர். இதற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என புகார் கூறும் கிராம மக்கள், என்.எல்.சி. நிறுவனத்தில் பணியும் வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். 

ஆரம்ப காலத்தில் கடினமான சுரங்கம் தோண்டும் பணிகள் வழங்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் 1996க்குப் பின் நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்த பணி வழங்கப்படவில்லை என்றும், இறுதி வரை ஒப்பந்த அடிப்படையிலேயே பணி வழங்கப்படுவதாகவும் வடமாநில தொழிலாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கிராம மக்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், என்.எல்.சி. நிறுவனத்தில் 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி உள்ளது என்.எல்.சி. நிறுவனம். இதற்காக, சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், சாத்தப்பாடி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏற்கனவே பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை என்எல்சி நிறுவனம், கையகப்படுத்தியது. 

இப்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அந்த நிலங்களில் விவசாயிகள் சாகுபடிப் பணிகளை செய்ய விவசாயிகள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே என்எல்சி நிறுவனம் தான் ஏற்கனவே வாங்கிய நிலங்களில் சுரங்கத்திற்கான கால்வாய் வெட்டும் பணியினை தொடங்கியது.

இதையும் படிக்க || RTE மாணவர்களுக்கு சீருடை வழங்கும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை!!

நெல் சாகுபடி செய்திருந்த நிலத்தில், அறுவடைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் விளைந்த பயிர்களை ஜே.சி.பி. பொக்லைன் இயந்திரங்களை விளை நிலத்தில் இறக்கி, கொஞ்சம் கூட இறக்கம் இன்றி மொத்தமாய் உழுது தள்ளியது என்.எல்.சி. நிறுவனம். 

இதனைக் கண்ட விவசாயிகள், குழந்தைகளைப் போல் வளர்த்த நெற்பயிர்கள் அழிக்கப்படுவதைக் கண்டு, கண்ணீர் விட்டுக் கதறினர். விவசாயிகள் இப்படி கொதித்தெழுந்த நிலையில், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

இதனிடையே விளை நிலங்களை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் போராட்டத்தில் ஈடுபட்டார். என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பா.ம.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் கைது செய்யப்பட்டனர். 

தொழிற்சாலை, சாலை விரிவாக்கம், குடியிருப்புகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருதால், இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற ஐ.நா.வின் எச்சரிக்கை வெகு விரைவில் பலித்துவிடும் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது.  

இன்றைய நிலையில், மின் மிகை மாநிலமாக திகழும் தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி. தேவையா என்ற கேளவியே அனைவரின் மனிதிலும் விஞ்சி நிற்கிறது. 

இதையும் படிக்க || "முதலமைச்சர் ராமேஸ்வரத்தில் நீராடி பாவத்தை கழுவிக்கொள்ள வேண்டும்" அண்ணாமலை காட்டம்!!