இன்பநிதி பெயரில் பாசறை...சஸ்பென்ட் செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள்...!

இன்பநிதி பெயரில் பாசறை...சஸ்பென்ட் செய்யப்பட்ட திமுக நிர்வாகிகள்...!

திமுக மீதான வாரிசு அரசியல் அதிருப்தியை அதிகரிக்க செய்த புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் இரண்டு பேரை தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த திமுக, கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு அதிருப்திகளுக்கு ஆளாகி உள்ளது. அந்த பிரச்சினை முழுவதும் கட்சியில் உள்ளவர்களாலே வருவது தான் இதில் குறிப்பிடத்தக்கவை. அமைச்சர்கள் முதல் கட்சியில் உள்ள தொண்டர்கள் வரை செய்யும் ஒவ்வொரு செயலும் முதலமைச்சருக்கு எதாவது ஒருவகையில் தலைவலியை தான் தந்து வருகிறது. பிடிஆர் ஆடியோ விவகாரம், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சர்ச்சையான பேச்சு, செந்தில் பாலாஜி மீதான வழக்கு, தற்போது சென்னை துணைமேயர் மீதான மோசடி வழக்கு என அடுத்து அடுத்து வந்து கொண்டிருக்கும் சர்ச்சைகள் திமுக மீதான அதிருப்தியை அதிகரித்துக்கொண்டே போகிறது.

கட்சியில் இருக்கக்கூடியவர்கள் செய்வது ஒருபக்கம் என்றால், திமுக என்றாலே வாரிசு அரசியல் தான் என்ற பேச்சு ஒலித்துக்கொண்டு வருவது மறுபக்கம். ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதியும் அரசியலில் எண்ட்ரீ கொடுத்ததால் காங்கிரஸ் போலவே, திமுகவும் வாரிசு அரசியல் நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையில், அதற்கு டப் கொடுக்கும் வகையில் திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உதயநிதி மகன் இன்பநிதி தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறி இன்பநிதி அரசியல் பயணத்திற்கு அடித்தளம் போட்டனர். சும்மாவே, வாரிசு அரசியல் என்று சொல்லும் எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர்களின் இந்த கருத்து ஹாட் டாப்பிக்கா மாறியது. 

இதையும் படிக்க : முதல் முறையாக சேலத்தில் ”ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி...ஆரவாரம் செய்த பொதுமக்கள்!

இன்பநிதியின் அரசியல் பயணம் குறித்து உதயநிதியும், ஸ்டாலினும் இதுவரை எதுவும் கூறவில்லையென்றாலும், மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம் புதிய பொலிவுடன் திறக்கப்பட்ட நிகழ்ச்சியில் இன்பநிதி பங்கேற்றது அரசியல் எண்ட்ரீக்கு ஒரு அடித்தளம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. இதனைத்தொடர்ந்து தற்போது புதுக்கோட்டை நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டர் அடுத்த ஒரு பிரச்சினையை கிளப்பியுள்ளது.  இன்பநிதி பெயரில் பாசறை அமைத்து, வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சமூக வலைதளங்களில்  வைரலானதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியது.

இதனால் டென்ஷனான கட்சித் தலைமை, போஸ்டர் வெளியிட்ட புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் மணிமாறன் மற்றும் திருமுருகன் இருவரையும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 2024 தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளே திமுக மீதான வாரிசு அரசியல் அதிருப்தியை அதிகரிக்க செய்யும் வகையில் செயல்பட்டு கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.