அரசு பள்ளி மாணவி முதல்,... ஆதித்யாவின் திட்ட இயக்குநர் வரை..! மீண்டும் ஒரு தமிழக விஞ்ஞானி..!

அரசு பள்ளி மாணவி  முதல்,... ஆதித்யாவின் திட்ட இயக்குநர் வரை..!   மீண்டும் ஒரு தமிழக விஞ்ஞானி..!

பல வளர்ந்த நாடுகளுக்கும் சவாலாக இருந்த நிலவின் தென் துறுவத்தினைக் குறித்த ஆராய்ச்சி முயற்சியை  இந்திய விண்வெளி நிலையமான  இஸ்ரோ சாதனையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. அதிலும், அந்த செயல்பாட்டின் திட்ட இயக்குநர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமுத்துவேல் என்பது கூடுதல் சிறப்பாக  அமைந்தது.

இவ்வாறிருக்க, தற்போது சூரியனை ஆய்வு செய்யவும் இஸ்ரோ நிறுவனம் திட்டமிட்டு அதற்காக   பி. எஸ்.எல்.வி.  - சி 7 ஏவுகணை மூலம்  ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இயக்கி சூரியனில் ஆய்வு செய்ய அனுப்ப உள்ளனர். அதற்கான நேர எண்ணிக்கையும் தொடங்கியுள்ளது.

இதில் சிறப்பு என்னவென்றால், தற்போது, இந்த ஆதித்யா செயல் திட்டத்திலும், திட்ட இயக்குநராக இருப்பவரும், தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியாவார் என்பதுதான். அதிலும், இவர் அரசு பள்ளி, அரசு கல்லூரியில்   கவ்வி பயின்றவர் என்பது பெருமைக்குரியது. 

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளால் செப்டம்பர் 2-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டோவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஆதித்யா எல் -1 என்ற செயற்கைக்கோள் விண்ணிற்கு அனுப்பப்பட உள்ளது.

அதற்கான கவுண்டவுன் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், ஆதித்யா எல் - 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த நிகர்ஷாஜி  என்னும் ஒரு பெண் விஞ்ஞானி பணியாற்றியுள்ளார். 

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியை சேர்ந்த சேக் மீரான் -சைத்தூன் பீவி தம்பதியினரின் 2-வது மகளான நிகர்சுல்தான் (தற்போதைய பெயர் -நிகர்ஷாஜி) என்பவர் தற்போது ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

 இவர், செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978-79-ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பயின்று 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். அதேபோல், 12-ம் வகுப்பில் 1980-81 ஆம் கல்வியாண்டில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார்.

தொடர்ந்து, நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்த நிகர்ஷாஜி 1987- ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்துள்ளார்.

தற்போது, பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இஸ்ரோ நிர்வாகத்தால் திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, நிகர்ஷாஜியின் அண்ணன் பேராசிரியராகிய ஷேக்சலீம் என்பவர் கூறும்போது,

" எனது தங்கை ஆதித்யா எல் - 1 திட்ட இயக்குனராக பணியாற்றி வருவது எனக்கும், எனது குடும்பத்திற்கும் நான் வாழும் செங்கோட்டை நகரத்திற்கும் மிகவும் பெருமையான தருணம் எனவும், இது நமது நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பு",  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிகர்ஷாஜியின் சகோதரரான இவர்,  ஐ.ஐ.எம்.மில் விஞ்ஞானியாகவும், தொடர்ந்து தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராகவும், தொடர்ந்து துறை தலைவராகவும் பணியாற்றியவர்.

மேலும், அவர் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவிக்கும்போது, தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பயின்ற பள்ளி மாணவி இன்று உலகமே போற்றும் வகையில் ஒரு செயற்கைக்கோளுக்கு திட்ட இயக்குனராக பணியாற்றி வருவது இந்த தருணத்தில் எனது பள்ளிக்கும், தமிழக பள்ளி கல்வித்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நிகர்ஷாஜியின் தங்கை ஆஷா என்பவர் கேரளாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், நிகர்ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், அவரது மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். மகள் தஸ்நீம் மங்களூரில் எம்.எஸ் மருத்துவம் பயின்று வரும் நிலையில், தற்போது நிகர்ஷாஜி தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

சந்திராயன் -3  விண்வெளி சாதனை மூலம் உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிப்பார்க்க வைத்த பெருமையை தமிழக விஞ்ஞானியான விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் அனும் விஞ்ஞானி நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அந்த வரிசையில் நாளை களமிறங்க உள்ளர் அடுத்த தமிழகத்தின் பெருமை...