ஆர்டிஐ கேள்விகளுக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதிலளித்தால்.....!!!

ஆர்டிஐ கேள்விகளுக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதிலளித்தால்.....!!!

சனாதன தர்மம் குறித்து தொடர்ந்து மேடைகளில் பேசி வரும் ஆளுநர் ரவி பாஜகவிற்கும் ஆர்எஸ்எஸ்ஸிற்கும் ஆதரவாக செயல்படுகிறாரா என்ற விமர்சனம் அரசியல் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது.  இந்துத்துவாதத்தை தமிழ்நாடு முழுவதும் விதைக்க முயல்கிறாரா என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.  அனைத்து தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பை சந்தித்து வந்த ஆளுநர் ஆர். என். ரவி மீது தற்போது தகவல் அறியும் சட்டம் மூலமாக பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

வழக்கறிஞர் எஸ்.  துரைசாமி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக ஆளுநர் ஆர். என். ரவிக்கு சில கேள்விகளை முன்வைத்து எழுதிய கடிதம் இணைய தளத்தில் பேசு பொருளாகியுள்ளது. அதில், ”நீங்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில்  சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து அதை பின்பற்றுவதே சிறப்பு என வலியுறுத்தி வருகிறீர்கள்.  இதைப் பார்க்கும் போது நீங்கள்தான் சனாதன தர்மத்தில் அதிகாரம் பெற்றவர் என தெரிகிறது.  தகவல்கள் உங்களிடம்  பிரத்தியேக அறிவில் இருப்பதால், நான் உங்களிடமிருந்து தகவல்களை பெற விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார். 

மேலும் படிக்க: ஆளுநருக்கே ஆர்டிஐயா?? பதிலளிப்பாரா ஆர். என். ரவி!!!!!

அவற்றில் சில கேள்விகளுக்கான பதில்களை ஆளுநர் ஆர். என். ரவி பேசிய மேடை பேச்சுகளலிருந்து அறிந்து கொள்ளலாம்.


முதல் கேள்வியாக சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்னென்ன?

பாரதம் என்பது சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டது. மரத்தில் உள்ள இலைகள், கிளைகள் ஆகியவற்றைப் போல நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் கொள்கைகளும் மாறுபடலாம். வேற்றுமையில் ஒற்றுமையைப் போன்று பரமேஸ்வரா என்பது ஒன்றே என சனாதனம் கூறுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத்தான் சனாதன தர்மமும் கூறுகிறது. நாட்டில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் போல ஆன்மிகத்திலும் வளர்ச்சி என்பது அவசியம். அதுவே இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்” என ஆளுநர் ரவி சனாதன தர்மத்தின் கொள்கைகள் குறித்து பேசியுள்ளார்.

இரண்டாவதாக சனாதன கொள்கைகள் குறித்த உரைகள் ஏதேனும் உள்ளனவா அல்லது செவிவழி மட்டும்தானா? 

திருக்குறளில் இவற்றைவிட மிக மிகப் பெரிய கருத்துகள் உள்ளது. அது தர்ம வேதத்தை உள்ளடக்கியது, திருக்குறளில் முதலாவது குறலே ஆதிபகவன் பற்றியது, அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று ஒரு மாணவர் படிக்கிறார், அதில் தொடர்ச்சியாக வரும் பத்து குறள்களில் அடிப்படையாக இருப்பவை அந்த ஆதிபகவன் மீதான பக்தியை பற்றியது, ஆதிபகவன் என்ற தமிழ்ச்சொல்லை மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், அஸ்ஸாமி என எல்லா இந்திய மொழிகளிலும் உணரலாம், அதைச் சொல்லும்போதே ஆதிபகவன் என்பது யார் என தெரிந்துவிடும், ரிக் வேதத்திலும் ஆரம்பத்தில் ஆதிபகவன் என்று தொடங்குகிறது, அந்த ஆதிபகவன் தான் ஆரம்பத்தில் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தார்.

பிறகு இந்த பூமியை படைத்து அதன் எல்லாவற்றையும் நிலை நிறுத்தினார். இதைத்தான் திருவள்ளுவர் சாமானிய மனிதனுக்கும் புரியும் வகையில் தமது குறளில் குறிப்பிட்டுள்ளார். நமது மொழிக்கு அடிநாதமாக இருப்பது எழுத்துக்கள், அந்த எழுத்துக்கள் இல்லை என்றால் நம்மால் எழுத முடியாது படிக்க முடியாது, எந்த ஒரு வார்த்தையும் பேச முடியாது, அந்த எழுத்துக்கள் தான் நமது எழுத்துக்கும் பேச்சுக்கும் அடிப்படை, அதுபோல ஆதிபகவன் தான் எல்லாப் படைப்புக்கும் தொடக்கமாக இருக்கிறார்” என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

மூன்றாவதாக சனாதன தர்மத்தை தோற்றுவித்தவர் அல்லது எழுதியவர் யார்? கேள்வியைக் குறித்து காணலாம்.  இதில் இரண்டாவது பகுதிக்கான விடையை காணலாம்.

திருக்குறளில் இவற்றைவிட மிக மிகப் பெரிய கருத்துகள் உள்ளது. அது தர்ம வேதத்தை உள்ளடக்கியது” என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

நான்காவதாக  சனாதன தர்மம் கிறிஸ்தவர்கள் மற்றும் மொகம்மதியர்களால் பின்பற்றப்படுகிறதா? கேள்விக்கான விளக்கத்தைக் காணலாம்.

சனாதன தர்மத்துடன் மதத்தை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. இவை இரண்டும் வேறு வேறானவை. ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை. அனைத்து கடவுள்கள் மற்றும் மதங்களுக்கு நமது நாட்டில் இடம் உள்ளது. இங்கு மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்கூட சனாதன தர்மத்தைப் பின்பற்றியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார் ஆளுநர் ரவி.

ஐந்தாவதாக  ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்(ஆர்எஸ்எஸ்) சங்கத்தின் உறுப்பினரா நீங்கள்? கேள்வியைக் குறித்து காணலாம்.  நேரடியாக பதில் இல்லையெனினும் மறைமுகமான பதிலாக உள்ளது.

ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை குறித்து பேசிய ஆளுநர்”இது மிகவும் ஆபத்தான இயக்கம். மாணவர்களைப் போலவும் மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்து கொண்டு நாட்டில் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக இயங்குகிறது' என்றார். மேலும், பல நாடுகளுக்கு தீவிரவாதத்துக்கு ஆள்களை அனுப்புவதாகவும்” ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது மறைமுகமாக ஆர்எஸ்எஸ்ஸை ஆதரிப்பதாகவே உள்ளது.

இறுதியாக தமிழ் இலக்கியங்களில் சனாதன தர்மம் குறித்து பேசப்பட்டுள்ளதா அல்லது திராவிடன் கலாச்சாரத்தில் கண்டறியப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கான பதிலைக் காணலாம்.  பின்பாதி கேள்விக்கான பதிலாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களுக்கு மிகப் பெரிய சக்தியை வழங்கினாலும், மிகப் பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டை நீண்டகாலமாக ஆங்கிலேயர்கள் ஆண்டதால் பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், கலாசாரரீதியாகவும் ஏராளமானவற்றை நாம் இழந்தோம். இந்தியாவைவிட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய பிறகு தர்மத்தின் விதிகளில் இருந்து மனிதர்களின் வாழ்க்கை திசைதிருப்பப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் வெளியில் சொல்லப்பட்ட மதச்சார்பின்மைக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது”  என ஆளுநர் கலாச்சாரத்திலிருந்து மறைந்து விட்டதாக குறிப்பிடுவதைக் காணலாம்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு ஆளுநர் ரவி பதிலளிப்பாரா என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிக்க: ஆர்எஸ்எஸ் பக்கம் சாயும் மம்தா...!!!! நிதின் கட்காரியை ஆதரிக்கும் நோக்கமா??