தமிழ்நாடு நாள் ஜூலை 18 கடந்து வந்த வரலாறு...!

தமிழ்நாடு நாள் ஜூலை 18  கடந்து வந்த வரலாறு...!

தமிழ்நாடு நாள் ஜுலை 18 ஆம் தேதி உருவான கதையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா மொழி வாரியாக பிரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதிலும் குறிப்பாக,  அந்த கோரிக்கையானது ஆந்திர மக்களிடையே வலுத்து காணப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதனை ஏற்க முதலில் மறுப்பு தெரிவித்ததால் கலவரங்கள் வெடித்தது. பிறகு மத்திய அரசு வேறுவழியின்றி, 1956, நவம்பர் 1 ஆம் தேதி இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. அதன்படி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என மொழிகள் வாரியாக சென்னை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பிரிந்தது. அந்தவகையில், தமிழருக்கென்று ஒரு மாநிலமாக சென்னை மாநிலம் அறியப்பட்டது.

அதன்பிறகு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்களில், மாநிலம் உருவான நாளை அந்தந்த மாநிலங்கள் அரசு விழாவாகவும், அரசு விடுமுறை நாளாகவும் அறிவித்து கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் அப்படியான விழாவானது அரசு சார்பில் கொண்டாடப்படாமலும், அதேசமயம் பழைய பெயரான சென்னை மாகாணமாகவே இருந்து வந்தது. அந்த சமயத்தில் தான், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடக்கோரி தனிநபராக சங்கரலிங்கனார் என்பவர் குரல் கொடுத்தார். ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகம், தமிழ்நாடு பெயருக்காக நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, 1956 ஜூலை 27 ஆம் தேதியன்று தன் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்டார். 76 நாட்கள் தொடர்ந்த போரட்டத்தில் உடல்நலக்குறைவால் சங்கரலிங்கனார் உயிரிழந்தார். 

’தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு முதன்முதலில் இன்னுயிரை விட்ட சங்கரலிங்கனாரின் மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன்படி, 1962 மார்ச்-சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. அதேசமயம், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக 1962 ல் பேரறிஞர் அண்ணா உரையாற்றினார். இதைத் தொடர்ந்து 1964 ஜனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில், தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, அத்தீர்மானமும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையும் படிக்க : ராகுல்காந்தி வழக்கு :தொடக்கம் முதல் உச்சநீதிமன்றம் வரை!

அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு, 1968 சூலை 18இல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவந்தது. பின்னர் 1968 நவம்பர் 23 -இல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து டிசம்பர் 1, 1968இல் தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, 1969 ஜனவரி 14 தைப் பொங்கலன்று தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வந்தது. 

தொடர்ந்து, தமிழ்நாடு அமைந்த நாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்பிறகு தான், பெரிய பிரச்சினையே ஆரம்பித்தது. ஏனென்றால், ஒரு மாநிலம் உருவான நாளை தான் தமிழ்நாடு அமைந்த நாளாக கொண்டாட வேண்டும் என்று பல தமிழ் அமைப்புகள் கூறிவந்தனர். அதன்படி தமிழ்நாடு மாநிலம் உருவான  நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு  கடந்த 2019 அக்டோபர் 25 ஆம் தேதியன்று வெளியிட்டது.

ஆனால், 2021 ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவான திமுக அரசு, சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, அன்றைய நாளான ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டது.

நவம்பர் முதல் நாளை மாற்றி ஜூலை 18 அன்று தான் தமிழ்நாடு நாள் என மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு பல்வேறு தரப்பினரும், கட்சித்தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தாங்கள் வழக்கம்போல நவம்பர் முதல் நாளன்று தமிழ்நாடு விழாவைக் கொண்டாடப்போவதாக பல தலைவர்கள் தெரிவித்தனர்.  முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையின் படி பார்த்தாலும் புதிய மாநிலம் பிறந்தநாளையோ அல்லது அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாளையோ, கொண்டாடலாம். அதை விட்டுவிட்டு இரண்டுக்கும் நடுவே சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளை எப்படி ஒரு மாநிலம் பிறந்த நாளாக கொண்டாட முடியும் என சர்ச்சைகள் எழுந்தன. இருப்பினும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை போலவே, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பல்வேறு போராட்டத்திற்கு பிறகு மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு என்று பெயரை கொண்டாடுவதற்கு நவம்பர் முதல் நாளா அல்லது ஜூலை 18ஆம் தேதியா என்று கடந்த ஆண்டு வரை சர்ச்சை எழுந்து வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூலை 18 ஆம் தேதியான இந்நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.