”முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டேவைப் போல் என்னையும் கொல்ல மோடியும் அமித்ஷாவும் திட்டமிடவில்லை என நம்புகிறேன்” சுப்பிரமணியன் சுவாமி கூற காரணம் என்ன?! யார் அந்த ஹரேன் பாண்டியா?!!

”முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டேவைப் போல் என்னையும் கொல்ல மோடியும் அமித்ஷாவும் திட்டமிடவில்லை என நம்புகிறேன்” சுப்பிரமணியன் சுவாமி கூற காரணம் என்ன?! யார் அந்த ஹரேன் பாண்டியா?!!

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது 2002ல் ஹரேன் பாண்டியா உயிரிழந்தார். அது அரசியல் கொலை எனவும் மோடி, அமித்ஷா பின்னணியில் உள்ளதாகவும் ஹரேன் பாண்டேவின் மனைவி ஜக்ருதி குற்றம்சாட்டி இருந்தார்.

ஹரேன் பாண்டே:

பாஜக சட்டமன்ற உறுப்பினராக அகமதாபாத் நகரின் எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் ஹரேன் பாண்டியா. அவர் தனது சிறு வயதிலிருந்தே ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்தார், மேலும் அகமதாபாத் நகரத்தின் பால்டி பகுதியில் இருந்து முனிசிபல் கவுன்சிலராகவும் இருந்தார்.  

அமைச்சரான பாண்டியா:

குஜராத்தில் 1998 இல், கேசுபாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த போது, பாண்டியா உள்துறை அமைச்சரானார்.  நரேந்திர மோடி முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர் வருவாய்த் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.  ஆகஸ்ட் 2002 இல் பாண்டியா அவரது பதவியை ராஜினாமா செய்தார்.  2002 சட்டமன்றத் தேர்தலில் நிற்க வாய்ப்பு மறுக்கப்படும் என்று அஞ்சி , அவர் தேர்தல் களத்தில் இருந்து விலகினார்.  அதன் பின்னர், பாண்டியா பாஜகவின் தேசிய செயற்குழுவில் நியமிக்கப்பட்டார்.

மனைவியின் குற்றச்சாட்டு:

பாண்டியாவின் மனைவி ஜக்ருதி பாண்டியா 2012 ஆம் ஆண்டு குஜராத் பரிவர்தன் கட்சி சார்பில் தனது கணவரைக் கொலை செய்யும் சதியில் மோடி அரசு ஈடுபட்டதாகக் கூறி போட்டியிட்டார். "எனது கணவரின் படுகொலை ஒரு அரசியல் கொலையாகும். கடந்த 10 ஆண்டுகளாக, அவருக்கு நீதி கிடைக்க நான் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன், ஆனால் பலனில்லை, இருப்பினும், நான் தொடர்ந்து போராடுவேன்" என்று அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசினார். 

மேலும் "நான் ஒருபோதும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை, யாரையும் பெயரிட்டதில்லை. எனவே நரேந்திர மோடி அல்லது அமித் ஷாவுடன் எனக்கு தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. விசாரணை நடத்தப்பட்ட விதத்தை குறித்தே நான் கேள்வி எழுப்பினேன்," என்றும் அவர் அப்போது கூறினார். 

2002 குஜராத் கலவரம்:
 
குஜராத்தின் கோத்ரா கலவரத்திற்குப் பிறகு, நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அகமதாபாத்திற்குக் கொண்டுவருவதை பாண்டியா எதிர்த்ததாகத் தெரிவிக்கப்பட்டது.  பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்களுக்காக சந்திப்புகளை ஏற்பாடு செய்யக்கூடிய ஒரே நபர் அவர்தான் என்ற நிலையில் சில அமைச்சர்களால் அவர் கூட்டத்தில் எதிர்க்கப்பட்டார். 

பாண்டியா கொலை:

26 மார்ச் 2003 அன்று, காலை 7:40 மணியளவில், அகமதாபாத்தில் உள்ள லா கார்டனில் தனது காலை நடைப்பயணத்தை முடித்த போது, ​​பாண்டியாவை அடையாளம் தெரியாத இரண்டு ஆசாமிகள் ஐந்து தோட்டாக்களால் அவரைச் சுட்டுக் கொன்றனர்.  அவரது உடல் இரண்டு மணி நேரம் காரிலேயே கிடந்தது.  

அவர் வீடு திரும்பாததால் பாண்டியாவின் குடும்பத்தினர் கவலைப்படத் தொடங்கினர். அவரைப் பார்த்து வர அவரது தனிப்பட்ட உதவியாளர் நிலேஷ் பட்டை அனுப்பினர் பாண்டியா குடும்பத்தினர்.  அப்போது பாண்டியா காரில் இறந்து கிடப்பதைப் ப்ட் கண்டார்.

குற்றவாளிகள்:

2007 ஆம் ஆண்டில், சிறப்பு  நீதிமன்றம் ஹைதராபாத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான அஸ்கர் அலிக்கு ஆயுள் தண்டனையும், ஏழு பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது.  

சர்ச்சைகள்:

அவரது கொலையைத் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன.  ஹரேன் பாண்டியாவை ஓரங்கட்டியதற்காகவும், அவருக்கு முறையாக பாதுகாப்பு வழங்காததற்காகவும் பொது மக்களிடம் இருந்து முதலமைச்சர் நரேந்திர மோடி அப்போதைய இந்திய துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி போன்ற பாஜக உயர்மட்டத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பினர்.  

விலக்கப்பட்ட பாதுகாப்பு:

அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் அவருக்கு ஏன் முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் கேள்வியெழுப்பினர்.  ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் , பாண்டியாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்திருந்த நிலையிலும்  ஏன் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை எனவும் கடுமையாக விமர்சித்தனர்.

என்ன நடந்தது சுப்பிரமணிய சுவாமிக்கு?:

குஜராத்தில் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டேவைப் போல் என்னையும் கொல்ல மோடியும் அமித்ஷாவும் திட்டமிடவில்லை என நம்புகிறேன். அப்படி இருந்தால் எனது நண்பர்களை நான் எச்சரிக்க வேண்டியிருக்கும். எனக்கு கிடைக்கும் நல்லவற்றை நான் தருகிறேன் என்பதை நினைவில் வையுங்கள். மோடி – அமித்ஷா இருவரும் ஆர்.எஸ்.எஸ். உயர் அதிகாரத்தை வெட்கப்படுத்தியுள்ளனர்.

சுவாமி கூறும் காரணம் என்ன?:

பாஜகவின் முன்னாள் எம்.பியான சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட வீடு திரும்ப பெறப்பட்டதும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த இசட் ப்ளஸ் பாதுகாப்பும் விலக்கப்பட்டதும் சுவாமியின் விமர்சனத்திற்கான  காரணமாக கூறப்படுகிறது.

-நப்பசலையார்

மேலும் தெரிந்துகொள்க:     நேருவின் ஐந்து தவறுகளால் 70 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட இந்தியா...!!! ஒரே திட்டத்தால் தவறுகளை சரி செய்தாரா மோடி??!!