முடிவுக்கு வருகிறதா உத்தவ் தாக்கரேவின் அரசியல் பயணம் ?

முடிவுக்கு வருகிறதா உத்தவ் தாக்கரேவின் அரசியல் பயணம் ?

அடுத்தடுத்து சரிவுகளை சந்திக்கும் உத்தவ் தாக்கரே:

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மற்றொரு பின்னடைவாக, தானே மாநகராட்சியில் 66 கட்சி உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டே குழுவில் இணைந்துள்ளனர்.  இதனால், தானே மாநகராட்சி மீதான தனது அதிகாரத்தையும் இழந்துள்ளார் தாக்கரே.

நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை தக்க வைக்க உத்தவ் தாக்கரே போராடி வரும் நிலையில், தானே மாநகராட்சி இழப்பு பெரும் இடியாக அமைந்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டே எனும் அதிருப்தியாளர்:


பட்டகாலிலே படும் என்பதை போல அடி மேல் அடி வாங்கி வருகிறது உத்தவ் தலைமை குழு. முன்னதாக மகராஷ்ட்ராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிவசேனாவின் முக்கிய பிரமுகரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி உயர்த்தினார். இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று பாஜக உடன் கூட்டணி அமைத்து  புதிய அரசு அமைத்தார்.  இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்காத அனைத்து சிவசேனா எம்எல்ஏக்களுக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பை அனுப்பினார் ஷிண்டே அணியின் கொறடா பாரத் கோகவாலே.


பால் தாக்கரேவிற்காக தப்பிய ஆதித்யா: 


ஆனால் பால் தாக்கரே மீதான மரியாதையால் ஆதித்யா தாக்கரேவிற்கு நோட்டீஸ் அளிக்கவில்லை என ஷிண்டே ஆதரவாளர்கள் கூறியது குறித்து ஆதித்யா தாக்கரே கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அதாவது, சிவசேனா – காங்கிரஸ் – தேசிவாத காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றியானது சட்டரீதியான வெற்றி எனவும், அது நீதிமன்ற சட்டத்தின் முன் நிற்கும் எனவும் கூறினார். அதே சமயம், யாரிடமும் அனுதாபத்தை சிவசேனாவோ, நானோ எதிர்பார்க்கவில்லை என ஆவேசமாக பதிலளித்தார். இதனிடையே, இடைத்தேர்தல் வரும் போது நம்பிக்கையுடன் அதனை உறுதியாக எதிர்கொள்ள சிவசேனா தயாராக இருப்பதாகவும், ஷிண்டே ஆதரவாளர்களுக்கும் பாஜகவிற்கு அவர் சவால் விடுத்துள்ளார்.  இடைத்தேர்தலில் ஷிண்டேவின் பாசறையை உத்தவ் தாக்கரேவின் பாசறை இறுதியில் வெற்றிபெற்று தர்மத்தைக் காக்கும் எனவும் ஆதித்யா தாக்கரே கூறினார்.


நாடாளுமன்றத்தில் உத்தவிற்கு நெருக்கடி: 


சட்டமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்ட நிலையில் தற்போது நாடாளுமன்றத்திலும் உத்தவ் தாக்கரே கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  நாடாளுமன்றத்தில் மக்களவையில் 19 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 3 உறுப்பினர்களும் சிவசேனா கட்சி எம்.பிக்கள் உள்ளனர்.  இவர்களில் மக்களவை உறுப்பினர்களில் 12 பேர் ஷிண்டேவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிகிறது.  இந்நிலையில் அவர்களை தக்கவைத்துக்கொள்வதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார்.  

இடை தேர்தல் என்ற நம்பிக்கையில் உள்ள உத்தவ் தாக்கரே அணிக்கு தானே மாநாகராட்சி நிகழ்வு பெரும் ஏமாற்றம் அளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.