தமிழ்நாட்டின் டி.ஜி.பி பொறுப்பில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் ஜே.கே திரிபாதி...

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக டி.ஜி.பி-யாக பொறுப்பேற்ற ஜே.கே திரிபாதி தனது 3 ஆண்டுகால பொறுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று தனது டி.ஜி.பி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

தமிழ்நாட்டின்  டி.ஜி.பி பொறுப்பில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார் ஜே.கே திரிபாதி...

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜலத்.கே திரிபாதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றவராவார். இவர் 1985-ஆம் ஆண்டு பஞ்சாப் கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக முதன் முதலில் பொறுப்பேற்றார். 

தமிழ்நாடு உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பதவிகளில் இவர் பணியாற்றியுள்ளார். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஜாதி கலவரங்கள் அதிகம் நடைபெறும்  தென் மாவட்டங்கள் உள்ளிட்ட  9 மாவட்டங்களின் எஸ்.பி, காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை ஏற்று சிறப்பாக  பணியாற்றியுள்ளார்  ஜே.கே திரிபாதி.

குறிப்பாக திருச்சி மாவட்ட காவல் ஆணையராக இவர் பதவி வகித்தபோது, திறம்பட கையாண்டு குற்றங்களை குறைத்த காவல் துறையினருக்கு ஊக்கத் தொகை மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி கவுரவித்தார். இது காவல் துறைக்கும், மக்களுக்கும் இருந்த இடைவெளியைக் குறைத்தது. 

கடந்த 2005 -ஆம் ஆண்டு இவர் அறிமுகப்படுத்திக் கொண்டு வந்த பீட் ஆஃபீசர் திட்டம், சேரிகளை தத்தெடுக்கும் திட்டம் மற்றும் புகார் பெட்டித் திட்டம் ஆகியவை இவருக்கு பிரதமரின் சிறந்த பொது நிர்வாகத்திற்கான விருதினைப் பெற்றுத் தந்தது.

இதே போன்று கடந்த 2012 -ஆம் ஆண்டு ஜே.கே திரிபாதி சென்னை காவல் ஆணையராக பதவி வகித்தபோது, தனது குழுவினருடன் சேர்ந்து மாநகரைக் திணறடித்த இருபெரும் வங்கிக் கொள்ளைச் சம்பவங்களை திறம்பட கையாண்டு குற்றவாளிகளை கண்டறிந்தார். 


சாத்தான் குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது  தனது நேரடி மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள்  துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கையை எடுத்தார்.மேலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த இவர், காவல்துறை தகவல் பரிமாற்றம், அரசு முத்திரை, பெயர் பலகை, கையொப்பம் என அனைத்தும் தமிழில்தான்  இருக்க வேண்டும்  என உத்தரவிட்டார். 


கொரோனா பெருந்தொற்று காலத்தில் 55-வயதுக்கு மேற்பட்ட காவல்துறையினருக்கு இலகுவான பணிகளை வழங்குமாறு அறிவுறுத்தி உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கான பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஈடுப்படுத்த கூடாது என உத்தரவிட்டு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இத்தகைய பாராட்டத்தக்க பல்வேறு பணிகளை  சிறப்பாக ஆற்றி முடித்த ஜே.கே திரிபாதி ஐ.பி.எஸ் இன்று தனது தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுகிறார்.