இறுதிமூச்சு வரையிலும் இவர்களுக்காகவே வாழ்ந்து முடித்த கருணாநிதி...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று, தமிழகத்திற்காக அவர் செய்த சாதனைகள் மற்றும் பல மக்கள் நல திட்டங்களை இந்த தொகுப்பில் பார்போம்.

இறுதிமூச்சு வரையிலும் இவர்களுக்காகவே வாழ்ந்து முடித்த கருணாநிதி...

தனிநபருக்கும், சமூகத்துக்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவை குறிப்பதுதான் சமூக நீதி. தனி நபர்களின் சமூக செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து, பாகுபாடற்ற நீதியையும், நியாயத்தையும் நிலை நிறுத்துதும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் சமூக நீதியாகும். அப்படி சமூக நீதியை சமமாக வழங்கியதில் தன்னிகரற்ற சாதனையை நிகழ்த்தியவர் கருணாநிதி. 

கலைஞர் கருணாநிதி இல்லாத தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும் என்று கேட்டால் ஆண்டான் அடிமை என்ற நிலைப்பாடும், சமுதாயத்தில் அடிமை விலங்கு அறுக்கப்படாமல் மேல்தட்டு மக்களின் குரலே ஒலித்திருக்கும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக போராடியதில் அண்ணல் அம்பேத்கருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ? சீர்திருத்தக் கொள்கைகளை மக்களிடம் புகுத்தச் செய்வததில் பெரியாருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே போல அவர்களின் வரிசையில் செயல்படுத்தியவர்தான் கருணாநிதி. சொல்லப்போனால் அம்பேத்கர், கருணாநிதி இந்த இரண்டுபேரின் கலவையாகவே கருணாநிதியைக் கூறலாம். 

ஆண் வர்க்கமே ஆண்டு கொண்டிருந்த நாட்டில் பெண்களுக்கும் சமஉரிமை கொடுக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் வெறும் பேச்சு வழக்கிலேயே இருந்த சமயத்தில் அதனை சட்டமாக்கினார் கருணாநிதி. இன்றைய 12-ம் வகுப்புக்கு இணையான அன்றைய காலத்தின் பி.யு.சி. வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்கச் செய்தவர் கருணாநிதி. கல்வி என்பது வியாபாரமாகி வந்த தமிழ்நாட்டில் கல்லூரி படிப்பு வரையிலும் இலவசமாக பயிலலாம் என்று ஆக்கப்பூர்வமான சட்டத்தினை பிறப்பித்தவர் கலைஞர். 

ஆணுக்குப் பெண் சமம் என்பதை நிரூபிக்கும் விதமாக, சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்பதை சட்டமாக்கி புரட்சி செய்தார் கலைஞர். 1989-ம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது இந்த சட்டம். பெற்றோர் சம்பாதித்த சொத்தில் மட்டுமல்ல, பூர்வீக சொத்திலும் பெண் குழந்தைகளுக்கும் பங்கு உண்டு என்பதை உரக்க சொல்லி, பெண்ணினத்தை தலைநிமிர வைத்தவர் கருணாநிதி. கருணாநிதி கொண்டு வந்த இந்த சட்டத்தையே 2006-ம் ஆண்டு மத்திய அரசு பின்பற்றி அதனை நாடெங்கும் கடைபிடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்தது. 

எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். பெண் குழந்தையின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் சகலத்துக்கும் சலுகைகளை வாரி இறைத்த கலைஞர், உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்தார். சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவற்றிலும் பெண்கள் குரலை ஒலிக்க வைப்பதற்கு தம் இறுதி மூச்சு வரையிலும் போராடி வந்தார் கலைஞர்.

தமிழ்நாட்டின் சென்னை மாகாணங்களில் முந்தைய காலத்தில் மனிதர்களை உட்கார வைத்து மனிதர்களே இழுக்கும் அவல நிலை இருந்து வந்தது. கூலிக்காக ஆசைப்பட்டு மனிதனை மனிதனே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷாவை அடியோடு ஒழிப்பதற்கு உத்தரவிட்டதோடு சைக்கிள் ரிக்ஷாக்களை இலவசமாக வழங்கி ஏழை மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றினார்  கலைஞர். 

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண் என்ற அண்ணாவின் கொள்கையை நூறு சதவிதம் கடைபிடித்தவர் கருணாநிதி. வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடிசை போட்டு வசித்தவர்களுக்கு, கான்கிரீட் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்க வைத்து குடிசை மாற்று வாரியம் திட்டத்தைக் கொண்டு வந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் 1971-ம் ஆண்டு தொழில்புரட்சியை வித்திட்டவர் கருணாநிதி. சிப்காட் போன்ற தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு அனுமதி வழங்கி, வேலையில்லாமல் தவித்து வரும் எண்ணற்ற தமிழர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கினார் கருணாநிதி. 

விவசாயம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு,. ஆனால் விவசாயத்தினை மேற்கொள்ள முடியாமல் பலரும் பரிதவித்து வந்த நிலையில், அவர்களுக்காக எண்ணற்ற சலுகைகளை வழங்கினார் கருணாநிதி. மின்சாரத்தின் தேவை அதிகரித்து வந்த காலத்திலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டிருந்தது. அந்த நேரத்தில் சீரிய கொள்கையான இந்திய உணவுக்கழகத்தை பின்பற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் என்று தொடங்கியிருந்தார். உணவுப் பொருட்கள் வசதியானவர்கள் வீட்டில்தான் இருக்கிறது என்ற நிலையை மாற்றும் விதமாக, ரேசன் கடைகள் மூலம் ஏழைகளின் வீட்டிலும் கிடைக்கச் செய்தார். 

உழைப்பே உன்னதமான ஒன்று. அப்படி உழைத்தே தேய்ந்து போன தமிழ் மக்களுக்கு உழைப்பின் பெருமையை வெளிப்படுத்துவதற்கு உழைப்பாளர் தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்தார் கருணாநிதி. மேலும் தொழிலாளர்கள் நலத்துறையையும் உருவாக்கி புரட்சி செய்தார் கருணாநிதி. நாட்டிலேயே போக்குவரத்துத்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதென்றால் அது கருணாநிதியால்தான்.

 1972-ம் ஆண்டு பேருந்துகளை எல்லாம் அரசுடைமையாக்கி, பெரு முதலாளிகளின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டினார். குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும்தான் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை பேருந்தில் ஏற்றாமல் கொடுமைப்படுத்தியதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, கருணாநிதி கொண்டு வந்த இந்த சட்டம் தமிழகத்தில் மாபெரும் புரட்சி பெற்றது. நல்ல சாலை கூட இல்லை என்பதை மாற்றி, தரமான சாலை அமைத்ததுடன்,  பேருந்துகளும், பெரிய பெரிய ஊர்களில் மட்டும்தான் ஓடுகிறது. கிராமங்களில் அப்படி எதுவும் இல்லையே என்று ஏங்கிய மக்களுக்கு தித்திப்பான செய்தியாக மினி பேருந்து திட்டத்தை கொண்டு வந்தார். ஏழை மக்களும், இன்பமாக செல்லும் விதமாக ஏராளமான மினிபஸ்களை அறிமுகப்படுத்தினார். 

பல ஊர்களிலும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே அதிக அளவில் வசிப்பதும், குறிப்பிட்ட சமுதாயத்தினரின் அடக்குமுறைகள் நடப்பதற்கும் முடிவு கட்டினார் கருணாநிதி. அனைத்து சாதியினரும், ஓரிடத்தில் கூடி வாழ வேண்டும் என்று கனவு கண்ட கலைஞர், அதை நிறைவேற்றும் விதமாக பெரியார் சமத்துவபுரங்களை அமைத்தார். அனைத்து சமுதாயத்தினரும் குடியேறும் திட்டத்தில் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட தலித் சமுதாயத்துக்கு 40 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி வரலாற்று சாதனை படைத்தார். 

தமிழ் மொழியிலும் பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு,, பலரது வாழ்க்கையிலும் மனம் புண்படும்படியான நிலையை தூக்கி எறிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். உடல் உறுப்புகள் குறை அடைந்தோரை ஊனமுற்றோர் என சொல்லி, மனதை வதைத்து வந்த நிலையை மாற்றும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் எனும் புதிய பெயர் சூட்டினார். கணவன் இறந்த பெண்களை விதவை என சொல்லி குத்திக்காட்டும் சமுதாயத்தில் அவர்களுக்கு கைம்பெண்கள் என பெயரிட்டார். 

மேலும் ஆண் பெண் இந்த இரண்டு இனத்தையும் போல மூன்றாம் பாலினத்தவர்களை அரவாணிகள் என்றும், பல கொச்சை வார்த்தைகளையும் பயன்படுத்தி இழிவு படுத்தியதை அறிந்த கருணாநிதி, அவர்களுக்கு திருநங்கை என்று பெயரிட்டு புனிதப்படுத்தினார். 

தனது வாழ்நாளில் இத்தனை சாதனைகளை செய்ததை விட, அதற்கு ஒரு படி மேலே போய், ஒன்றை அறிவித்திருந்தார். தனது வாழ்நாளுக்கு பின்பு, தயாளு அம்மாளுக்கு பிறகு தான் வசித்து வந்த கோபாலபுரம் வீட்டினை இலவச மருத்துவமனையாக மாற்றிக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்ததோடு, அஞ்சுகம் அறக்கட்டளைக்கு மாற்றி எழுதியிருந்தார். தனது வாழ்நாளில் பிறர் நலன் என்ற ஒன்றையே கருத்தில் கொண்டு, , இறுதிமூச்சு வரையிலும் சமூகத்துக்காகவே  வாழ்ந்து முடித்த கருணாநிதி ஏழைகளின் பங்காளன்.