ம.நீ.ம-விலிருந்து திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு!? விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்!

  மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணைத்தலைவராக இருந்து திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் முக்கிய பொறுப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ம.நீ.ம-விலிருந்து திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு முக்கிய பொறுப்பு!? விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஜூலை 8ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மகேந்திரன் திமுகவில் இணைந்தார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல முன்னாள் மாநில மற்றும் மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 78 நபர்கள் இணைந்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்தவர் மகேந்திரன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு 1.44 லட்சம் வாக்குகளை பெற்றார். அதன் தொடர்ச்சியாக அண்மையில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலிலும் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு 36 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். இருப்பினும், கட்சியில் உட்கட்சி பூசல் நடைப்பெறுவதால் ம.நீ.ம கட்சியில் இருந்து விலகுவதாக மகேந்திரன் அறிவித்தார். அவரைத்தொடர்ந்து பலரும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் மகேந்திரன் திமுகவில் இணைந்தார். அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் முக்கிய பொறுப்பு வழங்க திமுக தலைமை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது திமுகவின் தகவல் தொழில்நுட்ப செயலாளராக நிதித்துறை அமைச்சர் பி.டி ஆர்.பழனிவேல் தியாகராஜன் இருந்து வரும் நிலையில், அவருடன் இணைந்து கவனிக்கும் பொறுப்பு வழங்கப்படுமா? அல்லது தனிப்பொறுப்பு உருவாக்கப்படுமா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.