மதனின் பெண் தோழிகளையும் தேடும் போலீஸ்....ஆபாச கும்பலை கூண்டோட தூக்க ப்ளான்!!

பெண்கள் குறித்து தனது யூ-டியூப் சேனலில் ஆபாசமாக பேசி வந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரது பெண் தோழிகளையும் தேடி வருகின்றனர்.

மதனின் பெண் தோழிகளையும் தேடும் போலீஸ்....ஆபாச கும்பலை கூண்டோட தூக்க ப்ளான்!!

பெண்கள் குறித்து தனது யூ-டியூப் சேனலில் ஆபாசமாக பேசி வந்த பப்ஜி மதனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரது பெண் தோழிகளையும் தேடி வருகின்றனர்.

நாட்டில் தடை செய்யப்பட்ட விளையாட்டான பப்ஜி-யை வி.பி.என் சர்வரை பயன்படுத்தி விளையாடும் யூ-டியூபரான மதன், சமீப காலமாக தனது வீடியோக்களில் ஆபாசமாக பேசி யூட்யூபில் நேரலை ஒளிபரப்பு செய்து வந்தார். தொடர்ந்து  பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து தகாத வார்த்தையால் பேசிய மதன் மீது சமூக வலைத்தளங்களில்  கண்டனங்கள் கிளம்பியது.

குறிப்பாக மதன் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரி  புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போலீஸாரிடம் யூ-டியூபர் அபிஷேக் ரபி மற்றும் ஜோ மைக்கல் ஆகியோர் மூலம் 2 புகார்கள் அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சென்னை மத்திய குற்றப் பிரிவிலும் மதன் மீது புகார் ஒன்று அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து புளியந்தோப்பு சைபர் கிரைமில் அளிக்கப்பட்ட 2 புகார்கள் தொடர்பான வழக்கும் சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டு மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்  அவரை வலைவீசித் தேடி வந்தனர். ஆனால் மதன் வி.பி.என் சர்வரை பயன்படுத்தி செல்போன் உபயோகிப்பது, நேரலை வீடியோ பதிவிடுவது என்றிருப்பதால் போலீசார் அவனது இருப்பிடம் அறியாமல் அவனை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

யூ-டியூபர் மதன் மீது தமிழகம் முழுவதும் இணைய வழியில் சுமார் 160 க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்ட நிலையில், மதனின் தந்தை மாணிக்கம், அண்ணன் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோரை அழைத்து வந்து சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீசார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மதனின் யூ-டியூப் சேனலுக்கு அவன் மனைவி கிருத்திகாதான் அட்மினாக இருந்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தது தெரியவந்தது. மேலும், மதன் யூ-டியூப் மூலம் மாதம் 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் பார்ப்பதாகவும், இதன் மூலம் பலகோடி ரூபாய் சொத்து சேர்த்து 2 சொகுசு பங்களாக்கள் மற்றும் சொகுசுக் கார்களை வாங்கியிருப்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மதனுக்கு உடந்தையாக இருந்ததாக கிருத்திகாவையும் வழக்கில் சேர்த்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

தொடர்ந்து மதன் தர்மபுரி, பெங்களூர் மற்றும் சேலம் ஆகிய இடங்களில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளதை அறிந்த மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த 3 தனிப்படை போலீசார் அம்மூன்று இடங்களுக்கும் சென்று மதனின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரின் வீடு மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மதன் தர்மபுரி மாவட்டம் மதக்கூன் பாளையம் என்ற ஊரில் உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர் மதனைச் சுற்றி வளைத்தனர். இதற்கிடையில் தன்னை கைது செய்ய வந்த போலீசாரிடம் மதன் தான் செய்தது தவறுதான் என்றும் தன்னை மன்னித்து விடுமாறும், இனி இதுபோல் செய்யமாட்டேன் எனக் கூறி காலில் விழுந்து கதறி அழுததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மதனை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடமிருந்த செல்போன், லாப்டாப் மற்றும் டாப் அவரது கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பிடிபட்ட மதனை விரைவில் சென்னை அழைத்து வரவுள்ள தனிப்படை போலீசார் அடுத்தகட்டமாக அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தவுள்ளனர். அதனைத் தொடர்ந்து மதனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள போலீசார் அவரின் வாக்குமூலங்களை வீடியோ பதிவாக்கி ஆதாரங்களை சேகரிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் மதன் தொலைபேசியில் பேசிய ஒரு ஆடியோ மற்றும் வீடியோ போலீசாரிடம் சிக்கியுள்ளதாகவும் அதில் அவரின் பெண் தோழிகள் சிலர் உரையாடுவது தெரியவந்துள்ளது என்பதால் அவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.