மதமாற்ற தடைச்சட்டம்....மத்திய அரசின் வழக்கறிஞரை சராமரியாக கேள்வியால் தாக்கிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்....நடந்தது என்ன?!!

மதமாற்ற தடைச்சட்டம்....மத்திய அரசின் வழக்கறிஞரை சராமரியாக கேள்வியால் தாக்கிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்....நடந்தது என்ன?!!

மத மாற்றம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை:    

நாடு முழுவதும் கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டும் எனக்கோரி பா.ஜ.க.வை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அரசியல் உள்நோக்கம்?:

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் வழக்கறிஞர் குமணன் ஆகியோர் வாதம் வைத்தனர்," 

அப்போது, இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் மனுதாரரான அஸ்வினி உபத்யாய் தேசத்துரோக குற்றச்சாட்டு தொடர்பாக இதை அணுகுகிறார் எனவும் மேலும் மனுதாரர் அஸ்வினி உபாத்யாய் பா.ஜ.க கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளராக இருப்பதால் இந்த வழக்கு என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும் எனவும் தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 

தமிழகத்தை மட்டும்..:

மேலும் இந்த வழக்கின் மனுவின் சாராம்சத்தில் தமிழகத்தை தான் அதிகப்படியாக அஸ்வினி அதிகப்படியாக சுட்டிக்காடி உள்ளதாகவும் அதனால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எப்படி நீதிமன்றம் வழக்கினை நடத்த முடியும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அரசியல் வேண்டாம்:

அப்போது குறுக்கிட்ட நீதிபதி எம்.ஆர்.ஷா, இந்த வழக்கில் அரசியலை கொண்டு வர வேண்டாம் எனவும் மனுதாரர் அரசியல் கட்சியை சார்ந்தவர் என்பதால் அவர் தாக்கல் செய்த பொதுநல மனுவினை புறந்தள்ளிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு எதிர்க்கும்: 

அதற்கு பதிலளித்த தமிழ்நாடு வழக்கறிஞர் வில்சன், “மனுதாரர் அஸ்வினி உபாத்யாய் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கை தொடந்துள்ளார்.  அதனால் தான் இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக எதிக்கிறது.  குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2002ம் ஆண்டு மதமாற்றங்களை தடுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அது 2006ம் ஆண்டில் மாநில சட்டமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.’ என வாதிட்டுள்ளார்.

மேலும் ”இந்த விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்பாக மனுதாரர் அஸ்வினி உபாத்யாய் கூறியுள்ள அனைத்தும் அப்பட்டமான பொய்யாகும்.  கட்டாய மத மாற்றம் தொடர்பாக முடிவெடுக்க மாநில சட்டமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது.  மாநில சட்டமன்றத்திடம் ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய வில்சன், “தமிழகத்தை பொருத்தமட்டில் என்னென்ன சட்டங்கள் பொருத்தமானவை என்று அரசுக்கு தெளிவாக தெரியும்.  மக்கள் தேவையை அறிந்து சட்டமன்றத்தில் அது பிரதிபலிக்கிறது. 
மேலும் மாநில உரிமைகளை இதுபோன்ற செயல்பாடுகளால் பறிக்க முற்படுகின்றனர் என்பதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

நிலைப்பாடு என்ன?:

அப்போது நீதிபதிகள், இந்த மத மாற்ற தடை சட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கருத்து மற்றும் நிலைப்பாடு என்ன? என தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்  வில்சனிடம்  வினவினர்

அதற்கு  தமிழ்நாடு அரசு சார்பாக பதிலளித்த மூத்த வழக்கறிஞர்  வில்சன்,  ”இந்த விவகாரம் தொடர்பாக மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும் என்பதே தங்களது நிலைப்பாடு” என பதிலளித்தார்.

மேலும், ”இந்த வழக்கில் தங்களது கருத்தை கண்டிப்பாக நீதிமன்றம் கேட்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து நீதிபதிகள், "இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது.  எனவே இந்த வழக்கில்
உச்சநீதிமன்றத்திற்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.” என தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணியை ஆஜராகி வழக்கில் உதவ வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மாற்றப்பட்ட பெயர்:

இதனையடுத்து இந்த வழக்கின் தலைப்பை  கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான வழக்கு என்பதற்கு பதிலாக "மத மாற்றம் தொடர்பானது" என மாற்றப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அடிப்படை உரிமை:

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், “எந்த மதத்தை தான் பின்பற்ற வேண்டும் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை.  அதேவேளையில் கட்டாயப்படுத்தி ஒருவரை மதம் மாற்றம் செய்வது என்பது வேறு.  எனவே அவ்வாறு மதம் மாற கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்றால் என்ன செய்யலாம் ? அவ்வாறு நடக்காமலிருக்க என்ன வழிமுறைகளை கொண்டு வரலாம்?” என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் வினவியுள்ளனர்

அதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து பின்னர்  பதிலளிப்பதாக தெரிவித்தார்.

ஒத்தி வைப்பு:

இதனையடுத்து, இந்த மதமாற்றம் விவகாரம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மெக்சிகோ எல்லையை பார்வையிட்ட ஜோ பைடன்... காரணம் என்ன!!!