புத்துயிர் பெறும்  ரியல் எஸ்டேட்...!

புத்துயிர் பெறும்  ரியல் எஸ்டேட்...!

சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வளர்ச்சி பெற்று வருகிறது.

2020 முதல் 2021-ம் ஆண்டு வரை நாடெங்கும் கொரோனா பாதிப்பின் காரணமாக பெரும்பாலான தொழில்கள் முடங்கிப் போயின. அப்போது ரியல் எஸ்டேட் துறையும் கூட முடங்கியது. ஆனால் கொரோனா ஊரடங்குக்கு பிறகு மெல்ல மெல்ல வளரத் தொடங்கிய ரியல் எஸ்டேட் தொழில் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்தாலும் கூட 2023-ம் நிதியாண்டில் ரியல் எஸ்டேட் துறை வளர்ந்திருப்பதுதான் அதிசயம் கலந்த உண்மையாக உள்ளது. 

சென்னையில் நிலப் பதிவு தொடர்பாக மொத்தம் 63 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டு மட்டும் வெறும் 3,04,000 ஆயிரம் பத்திரங்களே பதிவானது. இதன் மூலம் அரசுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.

இந்நிலையில் 2023-ம் நிதியாண்டில் ரியல் எஸ்டேட் துறை மின்னல் வேக வளர்ச்சி கண்டுள்ளது. சென்னையில் 5,83,000 பத்திரங்கள் பதிவாகி இதன்மூலம் 7,727 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் சுமார் 34,41,000 பத்திரங்கள் பதிவாகி அதன் மூலம் மொத்தம் 17,296 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. 

இந்த வளர்ச்சியைப் பார்த்தால் வரும் காலங்களில் பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரியல் எஸ்டேட் தொழில், வளர்ச்சி கண்டதற்கு தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கையும் காரணம் என கூறுகின்றனர் பயனாளிகள். 

பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைந்ததும், முத்திரை தீர்வுக்கு வழங்கப்படும் 7 சதவீதத்தை உயர்த்தாமல் அதனை நடைமுறையிலேயே தொடர்வதும் இதன் வளர்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

சென்னை குன்றத்தூர், கூடுவாஞ்சேரி, சேலையூர், ஆவடி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரங்கள் பதிவாகியுள்ளன. அதிலும் குன்றத்தூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் மட்டும் இதுவரை 27,705 பத்திரங்களும், திருப்போரூரில் 25,941 பத்திரங்களும் பதிவாகியுள்ளன. 

ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சி என்பதே பொருளாதார நிபுணர்கள் சொல்லும் கருத்து. இதன்மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டால் நன்மையே.