"அதிகாரம் உள்ள காவிகளின் காலில் மட்டுமே விழுவார்" ரஜினியின் முகத்திரையை கிழித்த சாரு!

"அதிகாரம் உள்ள காவிகளின் காலில் மட்டுமே விழுவார்" ரஜினியின் முகத்திரையை கிழித்த சாரு!

திருவண்ணாமலையில் உள்ள காவிகள் காலில் ரஜினி விழ மாட்டார்.  காவியோடு அதிகாரம் கலந்து இருப்பவர் காலில் மட்டுமே ரஜினி விழுவார் என எழுத்தாளர் சாரு நிவேதிதா தெரிவித்துள்ளார். 

ஜெயிலர் திரைப்படத்தின் வெளியீட்டிற்கான வேலைகள் முடிந்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு பயணம் மேற்கொள்வதாக கூறிச் சென்றார்.  சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்வதை மறந்திருந்த ரஜினி தற்போது மீண்டும் இமயமலைக்கு சென்றது சிலரின் கவனத்தை பெற்றது. 

இமயமலைக்கு சென்ற அவரது ஆண்மீகப் பயணம் அங்கிருந்து உத்தர பிரதேசம் வரை சென்றது. ஆன்மீகப் பயணமாக இருந்த வரை அந்த பயணத்தை யாரும் சீன்டவில்லை. ஆன்மீக பயணம் ஒரு அரசியல் முகாமிற்கு பாதம்தாங்கி பயணமாக மாறியதால் இன்றுவரை ரஜினியை பலரும்  வறுத்தெடுத்து வருகின்றனர். 

உத்தர பிரதேசம் சென்ற ரஜினி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க சென்றார். யோகி ஆதித்யநாத்தை சந்திக்க சென்ற ரஜினி அவரை பார்த்தவுடன் அவரது திரைப்படங்களில் வரும் அதிரடிக் காட்சிகளை விட அதிவேகமாக அவரது காலில் விழுந்தார். இந்த காட்சி ஊடகங்களில் வெளியாகி பலருக்கும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலா திரைப்படத்தில் காலில் விழும் கலாச்சாரத்திற்கு எதிராக ஒரு மாபெரும் புரட்சியை நடத்தி முடித்த ரஜினிகாந்த் தானா இது என்று அனைவரும் ஆச்சர்யப்பட்டு போயினர். ரஜினி நடித்து முடித்ததும் அந்த காட்சிகளை மறந்து போகலாம் மக்கள் மறப்பார்களா? உடனே அனைவரும் சமூக வலைதளங்களில் ரஜினியை வசைபாடத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் தனது ஆன்மீக சாயம் வெளுத்துவிட்ட அரசியல் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை வந்தார் ரஜினி. அவர் வரப்போகும் தகவல் தெரிந்து அவரது ரசிகர்கள் படை விமான நிலையத்தை சூழ்ந்து இருந்தது (இந்த படை அவர் ஆன்மீக பயணம் போகும் போது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). ரசிகர் படை சூழ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி, "வயதில் சிறியவர்களாக இருந்தாலும், யோகிகளின் காலி விழுந்து வணங்குவது எனது வழக்கம் என பதிலளித்தார்.

 

இந்நிலையில் இதனை விமர்சிக்கும் விதமாக ரஜினி அதிகாரம் உள்ள காவிகளின் காலில் மட்டுமே விழுவார் என எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது வலைபக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பக்கத்தில் "பணக்காரர்கள் மீது ரஜினிக்குத் தனிப்பட்ட மரியாதை உண்டு"  என அவரது நண்பர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ள அவர், ரஜினியின் மரியாதைக்கு உரியவர் பட்டியலில் எந்த எழுத்தாளரும் வர மாட்டார் என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து எழுதியுள்ள அவர், "இது ஒரு பஸ் கண்டக்டர் மனோபாவம்.  இதில் தப்பே இல்லை.  ரஜினி கோடீஸ்வரர் ஆகி, பெரிய சூப்பர் ஸ்டார் ஆன பிறகும் கூட தன் கண்டக்டர் மனோபாவத்தை விடவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "ரஜினி 51 வயது ஆன யோகியின் காலில் விழுந்ததில் எந்தத் தவறும் இல்லை.  இந்தியாவில் காவிக்கு உரிய மரியாதை அது.  ஆனால் திருவண்ணாமலையில் ஆயிரம் காவிகள் அலைந்து கொண்டிருக்கின்றன.  அங்கே போய் ரஜினி யார் காலிலும் விழ மாட்டார்.  காவியோடு அதிகாரமும் கலந்து இருக்க வேண்டும்" என விமர்சித்துள்ளார். 

ஏற்கனவே ரஜினியை பலரும் சமூக வலைதளங்களில் துவைத்து காயப்போட்டு வரும் நிலையில், எழுத்தாளர்களும் அவரை பிழியும் படலத்தில் இப்போது சேர்ந்துள்ளனர். 

-ச.பிரபாகரன்

இதையும் படிக்க:இந்தி மொழித் தேர்வு கட்டாயம் - சு.வெங்கடேசன் கண்டனம்.