கார்கே முன் உள்ள மூன்று சவால்கள்!!! பாஜகவை தேர்தலில் வெற்றி பெறுமா காங்கிரஸ்!!!

கார்கே முன் உள்ள மூன்று சவால்கள்!!!  பாஜகவை தேர்தலில் வெற்றி பெறுமா காங்கிரஸ்!!!

சோனியா காந்திக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம்.  காங்கிரஸ் கட்சியின் குடும்ப அரசியல் என்ற விமர்சனத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
 
புதிய தொடக்கம்:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே பதவியேற்றது அவருக்கும் கட்சிக்கும் ஒரு புதிய தொடக்கம்.  நிச்சயமாக பாஜக கார்கேவை சோனியா காந்தியின் கைப்பாவையெனவே தொடர்ந்து விமர்சனம் செய்யும்.  

உண்மையான விசுவாசி:

வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்கே, “காந்தி குடும்பத்தை எப்போதும் மதிப்பேன், அவர்களின் வழிகாட்டுதல்களையும் எடுத்துக் கொள்வேன்” என்று தெளிவாக கூறினார்.

குடும்ப அரசியல்:

மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சியை குடும்ப கட்சி என்றும் வாரிசு அரசியல் என்றும் கருத்து தெரிவித்து வந்தது.  இது தொடர்பான எந்த கிண்டலையும் விட்டு வைக்கவில்லை பாஜக.  பாஜகவின் இந்த தொடர் தாக்குதல்களை சந்தித்து வந்த காங்கிரஸ் தற்போது அதற்கு முற்று வைத்ததாக தெரிகிறது.

கார்கே முன்னுள்ள சவால்கள்:

காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகமான சவால்கள் அவர்முன் வைக்கப்பட்டுள்ளன.

  • கட்சி ஒருங்கிணைப்பு:

ஐம்பது ஆண்டுகளாக காங்கிரஸ் உறுப்பினரான கார்கே முன் உள்ள முதல் சவால் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைப்பதே.  அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து அதை சரிசெய்ய வேண்டும்.

  • ஜி23

கடந்த சில மாதங்களாகவே ஜி23யிலிருந்து கட்சியின் மூத்த தலைவர்கள் வெளியேறி வரும் சூழலில் இதன்பிறகு எவரும் வெளியேறாமல் கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டும்.  அனைத்து உறுப்பினர்களின் அதிருப்தியையும் நீக்க வேண்டும்.

  • தேர்தல்கள்:

2024ல் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆண்டு குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் நடைபயணத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.  இந்த இரு  மாநிலங்களின் தேர்தல் வெற்றியும் முதல் தேர்வு முயற்சியாக கார்கே முன் வைக்கப்பட்டுள்ளது.

சவால்களை சமாளிப்பாரா கார்கே?:

கட்சியின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஜி23 அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியிலேயே உள்ளனர்.  கட்சிக்கு தலைமை வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  

கார்கே ஜி23யின் மூத்த தலைவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை கட்சியுடன் ஒருங்கிணைப்பாரா?  மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை முன்னிலைப்படுத்துவாரா? மெல்லமாக அழிந்து வரும் கட்சியை மீண்டும் தூக்கி நிறுத்துவாரா? என்பதை அவரது செயல்பாடுகளின் மூலமும் திட்டங்களின் மூலமும் தான் தெரிந்து கொள்ள முடியும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

                                                                                                         -நப்பசலையார்

இதையும் படிக்க:  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூர் தோற்பதற்கான அந்த மூன்று காரணங்கள் என்ன?!!