வருங்காலத்தில் பாஜக தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் - திருப்பதி நாராயணன்!

வருங்காலத்தில் பாஜக தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் - திருப்பதி நாராயணன்!

பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணனிடம் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜகவின் செயற்குழு கூட்டம் குறித்தும், அதிமுகவில் நடைபெற்று வரும் ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்தும் மாலைமுரசு இணையத்தில் இருந்து தொலைபேசி நேர்க்காணல் நடத்தப்பட்டது. அந்த நேர்க்காணல் குறித்து தற்போது பார்க்கலாம்...

தமிழ்செல்வி: ஹைதராபாத்தில் நடந்த பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் என்னென்ன புதிய அஜெண்டாக்களை பாஜக திட்டமிட்டிருக்கிறது?

திருப்பதி நாராயணன்: தென்னிந்தியாவில் இனிமேல்  பலத்தை அதிக அளவில் அதிகரிக்க போகிறோம்...அதே மாறி வாரிசு அரசியல் இனி எடுபடாது...

தமிழ்செல்வி: மகாராஷ்ட்ராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை நீங்க எப்படி பாக்குறீங்க?

திருப்பதி நாராயணன்: மக்களுக்கு நடைபெற்ற ஒரு துரோகம் இப்போ சரிசெய்ய பட்டிருக்கு. தேசியவாத காங்கிரஸ்-க்கு எதிரான மக்களுடைய தீர்ப்பை மதிக்காமல் நடந்துக்கொண்ட சிவசேனாவுக்கு மக்களே தகுந்த தீர்ப்பை கொடுத்திருக்கிறார்கள் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. துரோகமும் ஒழிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்செல்வி: பாஜக அடுத்து ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில்  நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார் அது சாத்தியமா?

திருப்பதி நாராயணன்: இந்தியா முழுவதும் பாரதிய ஜனதாக்கட்சி மிகச் சிறப்பான முறையில் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் எங்கள் கட்சி அபரிவிதமான வளர்ச்சியை பெற்று வருகிறது. அதேபோல தமிழகம் மற்றும் தென் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. மக்களின் செல்வாக்கு பெருகிக்கொண்டு இருக்கிறது. அதனால் தான் நாங்கள் தமிழகத்தில் திரு. அண்ணாமலை ஐ.பி.எஸ் அவர்களின் தலைமையில் பாஜக எழுச்சி பெற்று வருகிறது. மக்கள் அதிகளவில் அலைகடல் என திரண்டு பாஜக நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள். பலதரப்பட்ட தரப்பினர்களும் பாஜகவில் இணைந்து தங்களுடைய ஆதரவினை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். மிக உற்சாகமான சூழ்நிலையில் வருங்காலத்தில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்பதில் எந்தவிதமான மாற்று கருத்தும் இல்லை என்பதையே தெரிவிக்கிறது. 

தமிழ்செல்வி: அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை கோஷத்தை பாஜக எப்படி பார்க்கிறது?

திருப்பதி நாராயணன்: அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை பிரச்சனை என்பது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் அதில் நாங்கள் தலையிடுவது சரிகிடையாது. நாங்கள் அதுகுறித்து பேசவும் மாட்டோம் என்று கூறிவிட்டார்.

தமிழ்செல்வி: மீண்டும் ஒற்றைத்தலைமை குறித்து நீங்க எப்படி பாக்குறீங்க?

திருப்பதி நாராயணன்: அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனையில் நாங்கள் எந்த பார்வையிலும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜகவின் தலைவர் அண்ணாமலை கூறுவதுபோன்றே கூறிவிட்டார்.

தமிழ்செல்வி: இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இவர்களில் பாஜக யாரை ஆதரிக்குது?

திருப்பதி நாராயணன்: பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துடன் மிக நெருங்கிய உறவை வைத்துக்கொண்டிருக்கிறது. அதிமுக கட்சியுடன் தான் நம்முடைய நெருக்கம் கூட்டணி என்பது. அவர்களுடைய கட்சி பிரச்சனையை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

தமிழ்செல்வி: அதிமுக பிளவுபட வேண்டும் என்று பாஜக விரும்புவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையா?

திருப்பதி நாராயணன்: தேவையற்ற, அநாவசியமான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி முடித்துவிட்டார்.