'பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' பேரரசின் பேச்சால் அதிர்ந்துபோன பார்வையாளர்கள்....

டிக் டாக்கில் ஆபாச வீடியோ போடும் பெண்களைக் கைது செய்ய வேண்டும் என்று இசைவெளிட்டு விழாவில் பேசிய பேரரசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' பேரரசின் பேச்சால் அதிர்ந்துபோன பார்வையாளர்கள்....

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ' என்ற படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. 

சீரியலில் தொடங்கி தற்போது திரைப்பட துறையில் கலக்கிக்கொண்டிருக்கும் தர்ஷா குப்தா நாயகியாக நடிப்பதால் இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு இருந்துவந்தது.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் விஜய்யை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது படவாய்ப்புகள் இன்றி தவித்து வரும் இயக்குநர் பேரரசுவும் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய பேரரசு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்த்து பேசும் படமாக ’’பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’’ இருக்கும் என்று கூறிய அவர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் தான் ஏற்படுகிறது என்றார்.

அத்துடன் நாட்டில் நடக்கும் பல கலாச்சார சீர்கேடுகளுக்குக் காரணம் செல்போன்கள் தான் எனவும் தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பின்னர் செல்போனில் ஃபுல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும், அளவில்லாமல் பேசும் வாய்ப்பு தான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது என்று மிக தெளிவாக பேசினார் பேரரசு.

அதனை தொடர்ந்து டிக் டாக் மூலம் நாட்டில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில கேவலமான பெண்கள் நடந்து கொள்ளும் விதமும் பேசுகிற பேச்சும் சகிக்க முடியவில்லை. குறிப்பாக இரண்டு பெண்கள் செய்யும் செயல்பாடுகள் மிகவும் அருவருப்பானவை, பார்க்க சகிக்க முடியவில்லை. 

அவர்களை எல்லாம் பிடித்து உள்ளே தள்ளவேண்டும் என்று ஆவேசமாக பேசினார். அத்தோடு நில்லாமல் சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதில் மக்களை சந்தோஷப்படுத்தும் பொழுதுபோக்கு அம்சங்கள் தான் இருக்க வேண்டும் அதை தவிர்த்து  கருத்து சொல்லவேண்டும் விழிப்புணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருந்தால் பொழுது போக்கு தளத்தை விட்டு சினிமா விலகிவிடும் என்று பல புரட்சி இயக்குனர்களை குத்திக்காட்டுவதுபோல பேசினார்.

பல நல்ல கருத்துக்களை பேரரசு பேசியிருந்தாலும் அதில் பெரும்பாலானவை பிற்போர்க்குத்தனமாக இருக்கிறது என்று இணையவாசிகள் பேரரசுவை பூமர் பேரரசு என்று கிண்டல் செய்து வருகின்றனர்.