ஓபிஎஸ், அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி...!

எதிலும் சிக்காதவர் இதில் சிக்கி விட்டாரே..!

ஓபிஎஸ், அவரது மகன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி...!

எங்கும் சிக்காமல் இருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்த அளவு கவனம் செலுத்தி வருகிறதோ? அதை விட முன்னாள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களையும், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் மோசடிகளையும் வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதிலும் கவனம் செலுத்துகிறது. ஆட்சி பொறுப்பேற்ற மாதம் தொடங்கி. ஒரு ஒரு மாதமும் ஒரு ஒரு முன்னாள் அமைச்சர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஆட்சியில் இல்லாத போதே, அப்போது அமைச்சர்களாக இருந்த 8 பேர் மீது ஆதாரங்களுடன் அப்போதைய ஆளுநரை சந்தித்து புகார் மனு கொடுத்தவர் ஸ்டாலின். இப்போது ஆட்சிக்கு வந்தாயிற்று சொல்லவா வேணும்?

லிஸ்ட்டில் உள்ளவர்களை தூக்க ஆரம்பித்து விட்டார். முதலாவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணி, சி.விஜயபாஸ்கர் என வரிசையாக வி என்ற ஆப்ரேஷன் நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஒரு மாதம் விடுப்புக்கு பிறகு கடைசியாக தங்கமணி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் பல ஆவனங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும் கூட யாரும் கைது செய்யப்படவில்லை. அடுத்தது யாராக இருக்கும், யாராக இருக்கும் என்ற அச்சம் அனைத்து முன்னாள் அமைச்சர்களிடமும் இருந்தது. ஏன் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் லிஸ்ட்டில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஓ.பன்னீல்செல்வத்தின் பெயர் மட்டும் எதிலுமே அடிப்படவில்லை. காரணம் அவர் பிறரிடம் நடந்து கொள்ளும் விதம் எனக் கூறப்பட்டது. அதிமுகவில் அதிக பணம் புரளும் ஒரு நபர் என்றால் அது ஓபிஎஸ் தான் என கூறப்படுகிறது. அவர் மட்டுமின்றி அவரது மகனும் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் வேளையில், திமுகவின் அன்பு பார்வை மட்டும் தான் அவர் மீது இருந்து வருகிறது. 

விதி யாரை விட்டது? ஒரு கதவு திறக்கப்பட்டால், மற்றொரு கதவு அடைப்படும் என்பது போல, வருமான வரித்துறை விட்டாலும், மற்றொரு பக்கம் பிரச்னை எழுந்துள்ளது. அதாவது கடந்த 2019இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் திமுக வென்ற போதிலும் தேனியில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அதேபோல கடந்த சட்டசபைத் தேர்தலிலும் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில், தேர்தல் சமயத்தில் சொத்து உள்ளிட்டவை குறித்து உண்மையான தகவல்களை மறைத்து தவறான தகவல்களைக் குறிப்பிட்டுள்ளதாகவும் இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர் மிலானி குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தேனி எம்எல்ஏ மற்றும் எம்பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, CRPC-190,200 ஆகிய பிரிவுகளின் கீழ் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குத் தொடர போதுமான முகாந்திரங்கள் உள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ப.ரவிந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், உந்த வழக்கை தேனி மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பிப்.7ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இது தவிர வழக்கைத் தொடுத்த மிலானிக்கு சாட்சிய பாதுகாப்பு சட்டம் 2018-ன் படி உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அடடா என்னடா கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுறாங்களா? என்ற ஆத்திரத்தில் உள்ளதாம் அதிமுக தலைமை.