முள் படுக்கையில் அவதரித்த நாகராணி அம்மையார்!!நேரில் ஆசி பெற்றால் வேண்டியது நடக்கும்...திரளும் மக்கள் கூட்டம்...

திருப்புவனம் அருகே நாகராணி அம்மையார் முள் படுக்கையில் அமர்ந்து அருள்வாக்கு கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

முள் படுக்கையில் அவதரித்த நாகராணி அம்மையார்!!நேரில் ஆசி பெற்றால் வேண்டியது நடக்கும்...திரளும் மக்கள் கூட்டம்...

தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி ஒரு கடவுளும், அந்த கடவுளின் அவதாரமும் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றன. தங்களது கஷ்டங்களையும், நஷ்டங்களையும் இந்த புதிய  கடவுளாவது நிறைவேற்றுமா என்ற ஏக்கத்துடன், இந்த மக்களும் அவர்களை நம்பி, கடவுள்களின் அவதாரமாக நினைத்து மனிதர்களை கடவுளை பாவிக்கும் வகையில் பாவித்து வழிபடுகின்றனர்.

ஏற்கனவே நித்யானந்தா தான் ஒரு சிவனின் அவதாரம் எனக் கூறி, கைலாசா என்ற தனி நாட்டையே உருவாக்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது திருப்புவனம் அருகே நாகராணி அம்மையார் முள் படுக்கையில் அமர்ந்து அருள்வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தில் அருள்மிகு பூங்காவனம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பெண் சாமியார் நாகராணி அம்மையார் என்பவர் முள் படுக்கையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் தற்போது 45ஆவது மண்டல பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. அந்த பூஜையில்  45 நாட்கள் விரதமிருந்து, பின்னர் உடைமுள். இலந்தை முள். இலைக்கற்றாழை முள் மற்றும் பல வகை முட்களின் மேல் அமர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்து காட்சி தந்தார் நாகராணி அம்மையார்.

இந்நிலையில், நாகராணி அம்மையார் அமரும் படுக்கை லாடனேந்தலைச் சுற்றியுள்ள காடுகளில் இருந்து உடைமுள், கற்றாழை முள், இலைக்கற்றாழை முள், உள்ளிட்ட பல்வேறு வகை முட்களை கொண்டு சுமார் நான்கு அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்படுகிறது. அதில் நாகராணி அம்மையார்  45 நாட்கள் கடும் விரதமிருந்து முத்துமாரியம்மன், விநாயகர் உள்ளிட்டோரை தரிசனம் செய்த பின் முள்படுக்கைக்கு சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்தபின் அதில் ஏறி நின்று சாமியாடி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் நாகராணி அம்மையார் அப்படியே முள்படுக்கையில் சுமார் ஒரு மணி நேரம் படுத்தபடியே காட்சியளித்தார். மேலும், குழந்தை வரம், திருமணம் வரம், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு வரம் வேண்டி வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 

சாதாரணமாக காலில் சிறிய முள் குத்தினாலே மூன்று நாட்களுக்கு வேதனை இருக்கும் ஆனால் நாகராணி அம்மையார் பல வருடங்களாகவே முள்படுக்கையில் தவம் செய்து வருகிறார். அதுவும் மார்கழியன்று முள்படுக்கையில் தவம் செய்து அருளாசி வழங்கும் அன்று நேரில் ஆசி பெற்றால் வேண்டியது நடக்கும், என்பது கிராம மக்களின் நம்பிக்கை. தொடர்ந்து அவர் படுக்கும் முள் படுக்கை சாம்பலை எடுத்து வந்து பூஜை செய்து பலரும் திருநீராக பூசுவதும் வழக்கம். முள் படுக்கையில் அமர்ந்து தவம் செய்யும் நாகராணி அம்மையாரிடம் ஆசி வாங்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் லாடனேந்தல் கிராமம் மற்றும் திருப்புவனம் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் மானாமதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.