சூப்பர் ஸ்டார் என்னும் அதிசய பிறவிக்கு இன்று பிறந்தநாள்..!

ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் மாபெரும் நடிகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

சூப்பர் ஸ்டார் என்னும் அதிசய பிறவிக்கு இன்று பிறந்தநாள்..!

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக்குழந்தையும் சொல்லும்.. சினிமாவில் கதாநாயர்களுக்கு அவர்களது குணாதிசயங்களை வைத்தே பாடல்கள் எழுதுவது வழக்கம். ஆனால் குணாதிசயங்களுக்கான பாடலும், பாடல் வரிகளுக்கு ஏற்ப தன் குணாதிசயங்களை மாற்றிக் கொள்வது என்றால், அதை 100 சதவீதம் நிறைவேற்றியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்தபோது சில்லறை காசுகள் சிலவற்றை மட்டும் வழிச்செலவாக கொண்டு, திறமையை மட்டுமே தம்முள் வைத்தவாறே வந்து இறங்கியவர் தான்  சிவாஜி ராவ்கெய்வாட், கோடம்பாக்கத்தில் நுழைந்து சினிமாவில் தனக்கென புதிய அடையாளத்தை ஏற்படுத்த எண்ணியவர், இன்று சினிமாவுக்கே அடையாளமாய் இந்திய அளவில் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று யாரும் தொட முடியாத உச்சத்தை அடைந்திருக்கிறார். உழைப்பினாலும், விடா முயற்சியாலும் கலைத்துறையில் வெற்றியை முகர்ந்தவர்.  கோடான கோடி ரசிகர்களால் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டு வரும் மாபெரும் நடிகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒவ்வொரு வருடத்திலும் தீபாவளி எப்போது வரும் என்று காலண்டரில் தேதியை தேடி வருபவர்கள் அதிகம் என்றால், எங்களுக்கு ரஜினியின் பிறந்தநாள் தான் தீபாவளி என்றே பல ரசிகர்களும் இன்றளவும் அன்பு மழையை பொழிந்து வருவார்கள்.

ஸ்டைல் செய்வதில் மட்டுமல்லாமல் காதல் காட்சிகள், நகைச்சுவை, வில்லன் கதாபாத்திரம் என்று அனைத்திலுமே முத்திரை பதித்தவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாரை விட நடிகர் ரஜினி அதிகம் கொண்டாடப்பட வேண்டியவர். இன்று ரஜினி தூக்கிச்சுமக்கும் இந்த சூப்பர் ஸ்டார் அடையாளம் அவரது உண்மையாகவே மாறிப்போனது. வெறும் பிழைப்புக்காக நடிக்க வந்த ஒரு நடிகன் உழைப்பால் உயர்ந்து பிழைகளே தம் பக்கம் இல்லாத வகையில் பார்த்துக் கொண்டவர். தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தனக்கு கைவந்த கலையை அவர் திரையில் செய்தார். ரஜினிக்கு வயதாகிவிட்டது  நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினாலும் மக்கள் மனதில் ரஜினி என்றுமே கதாநாயகனாக வாழ்ந்து வருகிறார். 

அமிதாப் பச்சன் கேரக்டர் ரோல்களில் நடிக்கத் தொடங்கினாலும் ரஜினியை கதாநாயகனாகத்தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். காய்த்த மரத்தில்தான் கல்லடி விழும். அப்படி விழுந்த கற்களை வைத்து கோட்டையே கட்டி சாம்ராஜ்யம் நடத்தியவர் ரஜினிகாந்த். எம்.ஜி.ஆர். முதல் நாகேஷ் வரை திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் கலராக இருப்பார்கள். சுமாராக இருந்தாலும், அழகு பொருட்களால் மேலும் பொலிவடைய வைத்து திரையில் தோன்றி வந்தார்கள். ஆனால் கருப்பு நிறத்தில் இருந்த ரஜினி, மேக்கப் மீது, அழகு மீது நம்பிக்கை வைக்காமல், திறமை மீது நம்பிக்கை வைத்தார். அதுதான் அவரது வெற்றியாக உணரப்பட்டது. எவன் ஒருவன் தன்னை  நம்புகிறானோ அவன் மதிக்கப்படுகிறான் என்ற வர்ஜிலின் கூற்றுப்படி, ரஜினி அவர் மேல் கொண்ட நம்பிக்கையை கடுகளவு கூட குறைந்ததில்லை. 

ஒவ்வொரு படத்திலும், அது சிறிய கேரக்டரானாலும், தோன்றும் காட்சிகளின் அவரது ஸ்டைல்களால் பார்க்கும் கண்களை தன் பக்கம் திருப்பி ரசிக்க வைத்தார் ரஜினி. மிடுக்கான நடையும், மனதை பிளந்து பார்க்கும் அவரின் பார்வையும், சிகரெட்டை தூக்கி போட்டு வாயில் பிடித்து புகைக்கும் ஸ்டைலும், படம் பார்ப்பவர்களுக்கு கூடுதல் எனர்ஜியை கொடுத்தது. மிடுக்கான உடையில், துடிப்பான நடையில் தனது ஒவ்வொரு அசைவுகளின் மூலமும், ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி எனும் பேரதிசயம். திரையில் இவர் தோன்றினாலே போதும். ஒரு வித உற்சாகம் உண்டாகும். சோகம் நிறைந்த நெஞ்சம் இந்த மூன்றெழுத்து பெயரைக் கேட்டால் திமிரி எழுந்து வீறுநடைபோடும் என்பது உண்மை. ரஜினி எனும், அதிசயம், ரஜினி எனும் அபூர்வம், ரஜினி எனும் ஆச்சர்யம் என்றைக்குமே தனது பங்களிப்பை குறைத்துக் கொள்ளாமல், ரசிகர்களை இன்னும் பல காலம் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.