“பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை அறிவிக்கலாம்” - மல்லை சத்யா கருத்து.

“பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை அறிவிக்கலாம்” -  மல்லை சத்யா கருத்து.
பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை அறிவிக்கலாம் என மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ள கருத்து 
தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.


2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஜூரம் ஆரம்பித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் கட்சியான பாஜக நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமர் வேட்பாளர் என சொல்லாமல் சொல்லிவிட்ட நிலையில், தற்போது வரை யார் பிரதமர் வேட்பாளர் என எதிர்க்கட்சிகள் முடிவுசெய்யவில்லை.

2019ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகம் வந்த ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என மு.க.ஸ்டாலின் தான் முதன்முதலில் அறிவித்தார். இந்நிலையில் முதன்முதலாக மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் என்று பேசிய மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவின் பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.

யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசுகையில்:- 

முதலமைச்சராக மிகச்சிறப்பான முறையில் ஆட்சி செய்யும் மு.க.ஸ்டாலினை  எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி தேர்வு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் "இது என்னுடைய தனிப்பட்ட கருத்து;  மதிமுகவின் கருத்தல்ல ",  என்றும் கூறிய அவரின் பேச்சு இணையத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. பல முக்கிய புள்ளிகள் மதிமுகவிலிருந்து விலகியபோதும் தற்போதுவரை அக்கட்சியில் பணியாற்றி வரும் மல்லை சத்யா வைகோவின் பலம் என்றே கூறலாம். தற்போது அவரின் பேச்சு திமுகவில் இணைய போகிறாரா மல்லை சத்யா என்ற பேச்சும் எழுந்துள்ளது. 

- மா.நிருபன் சக்கரவர்த்தி.

இதையும் படிக்க    | ”3 வேளாண் திட்டங்கள் மூலம் உழவர்களை கொடுமைப்படுத்தியது மத்திய அரசு” - முதலமைச்சர் குற்றச்சாட்டு!