பாஜகவுக்குச் சென்றால் மட்டும் ராஜேந்திர பாலாஜியை விட்டுவிடுவோமா என்ன? அமைச்சர் நாசர் எச்சரிக்கை...

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்குச் சென்றாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரித்துள்ளார்.

பாஜகவுக்குச் சென்றால் மட்டும் ராஜேந்திர பாலாஜியை விட்டுவிடுவோமா என்ன? அமைச்சர் நாசர் எச்சரிக்கை...

கடந்த அதிமுக ஆட்சியில்  பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் உள்ளன. ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும், பால் விநியோகத்தில் பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி ஊழல் செய்ததாகவும், ஆவின் நியமனங்களில் ஊழல் செய்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரச்சாரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அவர் சொன்னதை போல ஊழல் குற்றச்சாட்டு உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் சோதனை செய்து வருகின்றனர். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார். இதனால் பயத்தில் உள்ள அதிமுக கூடாரத்தில் அடுத்த இலக்கு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என பரவலக பேசப்பட்டு வந்த நிலையில்  அண்மையில் டெல்லி சென்ற ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூரில் நேரடி கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்குச் சென்றால் மட்டும் விட்டுவிடுவோமா என்ன? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்துள்ளார். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்  என கூறினார்.

திமுக அரசின் திட்டங்களை சாதாரண மக்களும் பாராட்டுவதால், எல்.முருகன் பொறாமை காரணமாக அது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார் என்று விமர்சனம் செய்தார்.தொடர்ந்து பேசிய அவர் நேரடி கொள்முதல் விவசாயிகளிடம் மூட்டைக்கு அதிக கட்டணம் வசூலித்தால், தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 46 கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இது 62 ஆக உயர்த்தப்பட உள்ளது என்றார்.