12 மணி நேர வேலை சட்ட மசோதா...! திரும்பப் பெறுமா? ஆளுநருக்கு அனுப்புமா?

12 மணி நேர வேலை சட்ட மசோதா...! திரும்பப் பெறுமா? ஆளுநருக்கு அனுப்புமா?

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திரும்ப பெறுவதற்கான விதிமுறைகள் இருப்பதால் தமிழக அரசு தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்குப் பின்பாக 12 மணி நேர வேலை சட்ட மசோதா குறித்து என்ன முடிவை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சட்டப்பேரவையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர்களின் பணி நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாகளை ஆளுநருக்கு அனுப்பும் முன்தாக சட்ட மசோதாக்களை திரும்ப பெற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.  அதற்கான சட்டப்பேரவை விதிகளும், சட்டவிதிகளும் கூட உள்ளன. எனினும் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் எனவும் அத்தோடு தேர்வுக்குழு அனுப்பி வைக்க வேண்டும் என்றும்  இந்திய பொதுவுடைமை கட்சி, இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) உட்பட எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

ஆனால் கூட்டணிக் கட்சியாக இருந்தும் கூட அவர்களின் கோரிக்கையை திமுக அலட்சியப் படுத்தி நிராகரித்தது. அந்த நிலையில்  12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இறுதியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பாக தொழிற்சங்களுடன் இந்த சட்ட மசோதா குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதால், அரசு என்ன முடிவு எடுக்க உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு தொழிற்சங்கங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதற்குப் பிறகு 12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்பப் பெற உள்ளதா அல்லது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளதா என்பது தெரிய வரும்.

ஏற்கனவே மத்திய அரசு 2020ஆம் ஆண்டு தொழிலாளர்கள் குறித்த 44 சட்டத் தொகுப்புகளை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றியமைத்தது. இதனை அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக எதிர்த்து வந்தது. ஆனால் எதிர்கட்சியாக இருந்தபோது திமுக எதை எதிர்த்ததோ அந்த சட்டத்தையே கிட்டத்திட்ட நகலெடுத்து சட்ட மசோதாவாக தற்போது நிறைவேற்றியுள்ளது. இதற்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மத்திய அரசோ ஆளுநரோ எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதில்லை என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் இச்சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. 

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டால் இச்சட்ட மசோதா சட்டமாகிவிடும். பிறகு திமுகவே நினைத்தால் கூட இதனை திரும்பப் பெற முடியாது என்பதே இன்றைய எதார்த்தம். இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் திமுக என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது சில மணி நேரங்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:மசோதா நிறைவேற்றிய கையோடு ...! வெளிநாடு செல்லும் தொழில்துறை அமைச்சர்...!!