அதிமுக கடிதம் குறித்த முடிவு எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்!

அதிமுக கடிதம் குறித்த முடிவு எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்!

அதிமுக கொறடா எஸ். பி.வேலுமணி கொடுத்த மனு மீது தாம் சென்னை திரும் பியவுடன், படித்துப் பார்த்து முடிவெடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் தலைமைக்கான மோதல்

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களால் ஜூலை 11 அன்று அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்தப் பொதுக்குழுவிற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் பொதுக்குழு நடத்திக் கொள்ளலாம் என வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சாதகமாக அமைந்தது.

ஓ. பி.எஸ் நீக்கம்

நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப் பினர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 17 அன்று நடந்த அதிமுக சட்டமன்ற உறுப் பினர்கள் கூட்டத்தில் ஓ. பி.எஸ் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்த கடிதங்களை அதிமுக கொறடா எஸ். பி.வேலுமணி சபாநாயகர் அலுவலகத்தில் வழங்கியுள்ளார்.

நீதிமன்றம் வேறு தேர்தல் ஆணையம் வேறு

 நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அப்பாவு “நீதிமன்றம் வேறு தேர்தல் ஆணையம் வேறு இதற்கும் சட்டமன்றத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. சட்டமன்ற ஜனநாயக முறைப்படி சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா கொடுத்த கடிதத்திற்கு முடிவு எடுக்கப்படும்.சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ். பி.வேலுமணி கொடுத்த கடிதத்தை இதுவரை நேரில் பார்க்கவில்லை. சென்னை சென்று கடிதத்தை பார்த்துவிட்டு  முடிவு எடுக்கப்படும். சட்டமன்றத்தில் இருக்கைகள் எப்படி ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் பரிசீலனையில் உள்ளது. முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜனநாயக ரீதியில் சட்டமன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத்தின் மர பிற்கும் சிறிதளவு கூட மாண்பை குறைக்காமல் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்” என சபாநாயகர் அப்பாவு கூறினார்.