இந்திய காவல் துறையில் இவ்வளவு தான் பெண் காவலர்களா?

இந்திய காவல் துறையில் இவ்வளவு தான் பெண் காவலர்களா?

2010லிருந்து 2020 வரை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியக் காவலர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்திருந்தாலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்தப் காவலர்கள் எண்ணிக்கையில் 10.5 சதவீதம்  மட்டுமே பெண்கள் உள்ளனர் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதே சமயம் மூன்று காவல் நிலையங்களில் ஒரு காவல் நிலையத்தில் மட்டுமே. சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது என்று இந்திய நீதி அறிக்கை (ஐஜேஆர்) கண்டறிந்துள்ளது. 


2019ம் ஆண்டிலிருந்து இந்திய நீதி அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது.  2021ம் ஆண்டு அறிக்கையின்படி, 41 சதவீதம் காவல் நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையம் இன்றளவும் அமைக்கப்படவில்லை என தெரிவிக்கிறது.  திரிபுராவில் மட்டுமே அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் அருணாச்சலப்பிரதேசத்தில் பெண்கள் உதவி மையம் ஒன்றுகூட இல்லை என்பதும் கவலை அளிப்பதாக இருக்கிறது.

காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தால் வெளியிடப்பட்ட வருடாந்திர 'காவல் அமைப்பு அறிக்கை 2021' மற்றும்  இந்திய நீதி அறிக்கையின் அடிப்படையில் காவல் துறையில் பெண்களின் எண்ணிக்கையை 3.3 சதவீதத்திலிருந்து 10.5 சதவீதமாக அதிகரிக்க 15 ஆண்டுகள் (2000-2015) ஆகியிருப்பது தெரிகிறது.   இதனடிப்படையில் கணக்கிட்டால் ஒதுக்கப்பட்டுள்ள 33 சதவீதத்தை அடைய இன்னும் குறைந்தபட்சம் 33 ஆண்டுகளேனும் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

மாநிலங்களில் பெண் காவலர்கள் சதவீதம்: 


தமிழ்நாடு, பீகார் ,குஜராத் போன்ற பெரிய   மாநிலங்களில் பெண் காவலர்களின் எண்ணிக்கை  10.4, 17.4 மற்றும் 16 சதவீதமாக உள்ளது. ஆனால் அவர்களின் இலக்கான 30, 38, 33 சதவீதத்தை இன்னும் அடைய இயலவில்லை. யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் 22.1 சதவீதத்துடன் அதிக எண்ணிக்கையில் பெண் காவலர்களைக் கொண்டுள்ளது.
அதே சமயத்தில் ஆந்திரா 6.3 சதவீதத்துடன் கடைசியில் உள்ளது, ஜார்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் தலா 6.6 சதவீதம் பெண் காவலர்களைக் கொண்டுள்ளது. 
பீகார் மற்றும் இமாச்சலப்பிரதேசம் மாநிலங்கள் காவல்துறையில் பெண்கள் பங்களிப்பில் சரிவைக் கண்டுள்ளன.  2019ல் பீகாரில் 25.3 சதவீதமாக  இருந்த பெண்கள் பங்களிப்பு 2020ள்  17.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.  அதேபோல, இமாச்சலப் பிரதேசத்தின் 2019ல்,19.2 சதவீதத்தில் இருந்து 2020 இல் 13.5 ஆகக் குறைந்ததுள்ளது.  

காவல்துறையில் பெண் உயர் அதிகாரிகள் பிரதிநித்துவம் :

தேசிய அளவில் பெண் காவல் உயர் அதிகாரிகளின்  பங்களிப்பு 8.2 சதவீதம் என்றளவில்  மிகக் குறைவாகவே உள்ளது.  மேலும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்திய நீதி அறிக்கையின்  படி பெண் காவல் உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை 5 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக உள்ளது.

மாநிலங்களில் காவல்துறையில் பெண் உயர் அதிகாரிகள் பிரதிநித்துவம் :

தமிழ்நாடு மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக 20.2 சதவீத பெண் காவல் உயர் அதிகாரிகள் உள்ளனர்.  ஜம்மு & காஷ்மீரில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் 2 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். கேரளாவில் இந்த எண்ணிக்கை 3 சதவீதமாகவும், மேற்கு வங்கத்தில் 4.2 சதவீதமாகவும் உள்ளது. 18 காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட லட்சத்தீவில் ஒரு பெண் அதிகாரிகள் கூட இல்லை என்று அறிக்கை கூறுகிறது.

3 காவல் நிலையங்களில் 1 காவல் நிலையத்தில் மட்டுமே சிசிடிவி:

இந்தியாவில் உள்ள  காவல் நிலையங்களில் மூன்று காவல் நிலையங்களுக்கு ஒன்றில் மட்டுமே சிசிடிவி கேமராக்கள் இருப்பதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. 

சிசிடிவி பொருத்தப்படுவதற்கான பின்னணி:

2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், காவல்துறை அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான பரம்வீர் சிங் சைனி vs பல்ஜித் சிங்  வழக்கின் அடிப்படையில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்த  உத்தரவிட்டது .

மாநிலங்களில் சிசிடிவி:

இந்தியாவில் உள்ள 17,233 காவல் நிலையங்களில், 5,396 காவல் நிலையங்களில் ஒரு சிசிடிவி கேமரா கூட இல்லை என்று அறிக்கை கூறுகிறது. ஒடிசா, தெலுங்கானா  மாநிலங்களிலும்  புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டுமே ஒரு காவல் நிலையத்திற்கு  ஒரு சிசிடிவி உள்ளது.  அதே நேரத்தில் மணிப்பூர், லடாக் மற்றும் லட்சதீவு காவல் நிலையங்கள் ஒன்றில்கூட சிசிடிவி இல்லை. 894 காவல் நிலையங்களைக் கொண்ட ராஜஸ்தானில் ஒரு காவல் நிலையத்தில் மட்டுமே சிசிடிவி உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

எஸ்சி எஸ்டி ஓபிசி இடஒதுக்கீடு:

கர்நாடகாவைத் தவிர, பிற அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும  பட்டியல் சாதி, பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கான அவர்களின் இலக்கை  விட  குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது. காவலர்களுக்கான இடஒதுக்கீட்டில் இலக்கை அடைந்துள்ள ஒரே மாநிலம் குஜராத் மட்டுமே.

காவல்துறையில் 5.62 லட்சம் காலியிடங்கள்:

ஜனவரி 2021 நிலவரப்படி, இந்திய காவல்துறையில் 5.62 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக அறிக்கை 
மூலம் தெரிய வருகிறது.

2010 மற்றும் 2020 க்கு இடையில் ஒட்டுமொத்த காவல்துறையினரின் எண்ணிக்கை 32 சதவீதமாக அதிகரித்துள்ளது .  காவலர்கள் எண்ணிக்கை 15.6 லட்சத்தில் இருந்து 20.7 லட்சமாக. உயர்ந்திருப்பினும், காவலர் மற்றும் அதிகாரி பதவிகளில் உள்ள காலியிடங்கள் தேக்க நிலையிலேயே இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.