"தந்தை அன்பின் பின்னே"!

"தந்தை அன்பின் பின்னே"!

நீட் தேர்வினால் மகன் தற்கொலை செய்துகொண்ட சோகத்தில் தந்தையும் தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குரோம்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்த புகைப்படக் கலைஞர் செல்வ சேகர். இவர் இப்பகுதியில் பிரபல புகைப்பட கலைஞராக பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜெகதீஸ்வரன் என்கிற 19 வயது மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழும் செல்வ சேகர் தனது மகனை நான்கு வயதிலிருந்து ஒற்றை நபராக வளர்த்து வந்துள்ளார். மனைவியின் பிரிவிற்கு பிறகு வேறொரு திருமணம் செய்துகொள்ளாத இவர், தன் மகனுக்கு தந்தையாகவும் தாயாகும் வாழ்ந்து வந்தார்.

சிறியது என்றாலும், அதற்கே உரிய அழகியலோடு வாழ்ந்து வந்த இவர்களது வாழ்வைத் தான் நீட் எனும் அரக்கன் குடித்துள்ளது. தமிழ்நாட்டு மாணவ மாணவிகளின் இரத்தம் குடிப்பது நீட் எனும் ஓநாய்க்கு புதிதல்ல. ஆனால் இந்த முறை அதன் பெற்றோரின் உயிரையும் சேர்த்து குடித்தது தான் அவலம்.

தன் வீட்டிற்கு அருகிலேயே உள்ள புனித மார்க்ஸ் என்னும் சிபிஎஸ்சி பள்ளியில் படித்து வந்த ஜெகதீஸ்வரன் 12ஆம் வகுப்பு தேர்வில் 85 % மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்ய விரும்பிய தன் மகன் ஜெகதீஸ்வரனின் கனவை நிறைவேற்ற நினைத்த அப்பா செல்வசேகரன், அண்ணா நகரில் உள்ள ஆகாஷ் அகாடமி என்னும் தனியார் பயிற்சி மையத்தில் தன் மகனை சேர்த்து படிக்க வைத்துள்ளார்.  

இரண்டு முறை  நீட் தேர்வு எழுதிய மாணவர் ஜெகதீஸ்வரன் இரண்டாவது முறையும் சற்று குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவருக்கு அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ சீட் கிடைக்காமல் தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க சீட் கிடைத்துள்ளது. தனியார் பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படிப்பது அவ்வளவு எளிதான விடயமா என்ன?  குறைந்தது 25 லட்சம் முதல் 40 லட்சம் வரை கல்வி கட்டணமாக தேவைப்படும். மொத்த மருத்துவ படிப்பை படித்து முடிப்பதற்கு ஒன்றரை கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை செலவாகும் என தெரிய வந்தது.

எளிய புகைப்பட கலைஞராக இருக்கும் செல்வ சேகரிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லையே.. அதனால் மீண்டும் தன் மகனை தனிப்பயிற்சி நிலையத்தில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். அடுத்த முறை தேர்வில் நல்ல மதிப்பெண்ணை பெற்று விட்டால் அரசு கல்லூரியில் இடம் கிடைத்து விடும் என ஆறுதலும் கூறியுள்ளார்.

தந்தைக்கு என்னதான் தியாக உள்ளம் என்றாலும், மகனுக்கு அது  உறுத்தலாகவே இருந்துள்ளது. தன்னால்தான் தனது தந்தைக்கு வீண் சுமை என்று எண்ணத் தொடங்கினார். தன்னுடன் படித்த மாணவர்களில் சிலர் கல்லூரிகளில் சேர்ந்து இரண்டாம் ஆண்டு கல்லூரிக்கு செல்லும் வேளையில் தான் மட்டும் தந்தைக்கு பாரமாக இருக்கறோமோ என்ற எண்ணம் ஜெகதீஷ்வரனை துளைத்தெடுத்தது. இதனோடு தன்னுடன் நீட் பயிற்சிக்கு படித்தவர்களோ மீண்டும் படிக்க வராமல் கிடைத்த கல்லூரிகளில் சேரத் தொடங்கினர்.   

ஒருகட்டத்தில் நீட் தேர்வில் பணபலமும், அதிகார பலமும் படைத்த உயர் தட்டினரோடு போட்டியிட முடியாது என்பதை உணர்ந்த ஜெகதீஷ்வரன், மருத்துவராகும் தன் கனவுகளை தன்னுள்ளே வைத்துக்கொண்டு மண்ணுக்குள் செல்ல முடிவெடுத்துவிட்டார். இதனால் கடந்த சனிக்கிழமை அன்று தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் தன் வீட்டிலேயே தூக்கில் தொங்கி விட்டார். 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தன் மகனின் இறுதிச் சடங்கை நடத்தி முடித்த செல்வ சேகருக்கு சோகம் சோகமும் விரக்தியும் கட்டுக்கடங்கவில்லை. மனைவியின் பிரிதலுக்கு பின்னர் தன் மகனுக்காக மட்டுமே வாழ்ந்து வந்த தந்தைக்கு அவன் இறப்பிற்கு பின்னர் ஏன் வாழவேண்டும் என்ற என்னம் மேலோங்கியது. அதனால் நேற்று இரவு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுமணம் செய்து கொள்ளாமல் தன் மகனுக்காகவே வாழ்ந்த அவரது தியாகத்தையும், அவனுக்கு பிறகு வாழ விரும்பாத அவரது அன்பையும் பார்க்கும் போது சில ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மறைந்த ந முத்துக்குமார் எழுதிய "தாலாட்டுப் பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே" எனும் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.  

இந்த நாட்டில் நடக்கும் கொலைகளை விட தற்கொலைகளே அதிகம் என்கிறது கடந்த ஆண்டு வெளியாக மத்திய குற்றப்பதிவு ஆணையத்தின் அறிக்கை. இது மட்டுமல்ல இரண்டுக்கும் இடையிலான இடைவெளியும் அதிகம். இங்கு நடக்கும் தற்கொலை எதுவும் தற்கொலை அல்லவே அது சமூகம் செய்யும் கொலை. அதற்கு அனைவரும் தான் பொறுப்பு.

நீட் தேர்வால் இதுவரை அனிதா தொடங்கி ஜெகதீஸ்வரன் வரை பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால் தற்போது இது மாணவர்களின் பெற்றோர் வரை பரவி இருக்கிறது. இதற்கு பிறகாவது இந்த அரசு நீட் தேர்வை தடை செய்ய வேண்டும். அப்பொழுது தான் இந்த தற்கொலைகள் தடுக்கப்படும்.

-ச.பிரபாகரன்

இதையும் படிக்க:"மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார் ஆளுநர்" உதயநிதி குற்றசாட்டு!