ஒன்றிய அமைச்சராகும் அண்ணாமலை... பாஜக மேலிடம் போடும் பழைய கணக்கு!!

ஒன்றிய அமைச்சராகும் அண்ணாமலை... பாஜக மேலிடம் போடும் பழைய கணக்கு!!

2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அப்போது தமிழகத்தில் பாஜக கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றிபெற்றது. கன்னியாகுமரியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணனும், தர்மபுரியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாசும் வெற்றிபெற்றனர். இவர்களில் பொன். ராதாகிருஷ்ணன் மத்திய இணையமைச்சராகப் பதவியேற்றார். 

இதே போல 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இரண்டாம் முறையாக வெற்றிபெற்றது. ஆனால் தமிழகத்தில் பாஜக சார்பில் யாரும் வெற்றிபெறவில்லை. பாஜக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றிபெற்றார். ஆனால், அவருக்கும் பாஜக சார்பில் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. 

அதன்பின் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரான வசந்தகுமார் மரணமடைந்ததால் அந்த தொகுதி காலியானது. இதன் காரணமாக அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் "எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றால் உங்களுக்கு வெறும் எம்.பி மட்டுமே கிடைப்பார். ஆனால் நான் வெற்றிபெற்றால் உங்களுக்கு ஒரு அமைச்சர் கிடைப்பார்" என்றே பிரச்சாரம் செய்தார். ஆனால் அவரின் பிரச்சாரம் எடுபடாத காரணத்தால் அவர் தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும், அதில் தமிழகத்திற்கு நிச்சயம் பிரதிநித்துவம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரியும், பாஜக உறுப்பினருமான அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது. 

கர்நாடகத்தில் பணிபுரிந்த காவல்துறை அதிகாரியான அண்ணாமலைக்கு நிச்சயம் நல்ல பதவி கொடுக்கிறோம் என்றே பாஜக அரசியலுக்கு அழைத்து வந்தது. சொன்னது போல அரவக்குறிச்சியில் அவரை வேட்பாளராகவும் நிறுத்தியது. ஆனால் அவர் தோற்றுப்போனார். அண்ணாமலையை முன்னிறுத்தியே இளைஞர் வாக்குகளை பெறலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. 

வெறும் அரசியவாதியாக அண்ணாமலை அரசியல் செய்தால் அது எடுபடாது என்றும் ஆகவே அவருக்கு தமிழகத்திலோ அல்லது பிற மாநிலத்திலோ அவரை மாநிலங்களவை எம்.பி யாக்கி மத்திய அமைச்சர் பதவி கொடுத்து இளைஞர்களை வசப்படுத்தலாம் என்றும் பாஜக திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரத்தில் தீவிரமாகப் பேசப்படுகிறது.