அடுத்தக்கட்ட ஆளுமைகள்!

தமிழ் சமூகத்தின் அடுத்தக்கட்ட ஆளுமைகளோடு மாலைமுரசு செய்திகள் ஊடகத்தின் உரையாடல்...

அடுத்தக்கட்ட ஆளுமைகள்!

திருவண்ணாமலை மாவட்டம்,  ஜமுனா மரத்தூருக்கு அருகில் அமைந்துள்ள மலை கிராமமான அரசவெளியில் உள்ள 'பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி'யின் ஆசிரியர் மகாலட்சுமி. இவர் வந்த போது குழந்தைகளே இல்லாத பள்ளி தற்போது உயர்நிலைப்பள்ளியாக உயர்ந்து நிற்கிறது. செகண்டரி கிரேட் ஆசிரியராக பணியில் சேர்ந்து தற்போது கணித பட்டதாரி ஆசிரியராக இருக்கிறார். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான கல்வியை போதிக்க அவர்களுடன் சேர்ந்து நடனமாடிக்கொண்டே கற்பிக்க கூடியவர். பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளை குளிப்பாட்டுவது, அவர்களுக்கு முடிவெட்டி விடுவது என அவர்களின் இன்னொரு தாயாக இருக்கக் கூடிய ஆசிரியர். இவரது சேவைக்காக விகடனின் Top 10 மனிதர்கள்-2015, அவள் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பல்வேறு ஊடகங்களும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் வழங்கி அங்கீகரித்துள்ளன. இந்த வாரம் இவரோடு சில கேள்விகள்...    

1.பழங்குடி மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் இடையே கல்விக் கற்றலில் வேறுபாடுகள் ஏதேனும் இருக்கிறதா?

கல்வி கற்றலில் பழங்குடி மாணவர்கள், பிற மாணவர்கள் என வித்தியாசத்தைக் கடந்து, குழந்தையின் கற்றல் திறன் என்பது கற்பிக்கும் நபரைப் பொறுத்தது. ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்குக் கற்பிக்கும்போது அவர்களது நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி, வட்டாரச்சூழல்களோடு இணைத்துச்  சொல்லிக் கொடுத்தால் குழந்தைகள் அதனை எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.

சில நேரங்களில் தொழில்நுட்ப ரீதியானவை குறித்து கற்பிக்கும்போது நகரங்களில் வளரும் குழந்தைகளுக்கும், மலைப்பகுதிகளில் வளரும் குழந்தைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சென்னை மாதிரியான பகுதிகளில் வளரும் குழந்தைகளுக்கு தொழிற்நுட்பம் போன்றவை எளிதில் புரியும். மலைப்பகுதிகளில் வளரும் குழந்தைகளுக்கு அதற்குக் காலம் பிடிக்கும். எடுத்துக்காட்டாக ஒரு தொலைக்காட்சியைப் பற்றி விவரிக்கும் போது 'இத்தனை இஞ்ச் தொலைக்காட்சி, இந்த மாடல் தொலைக்காட்சி' என அங்கு எளிதில் அதனைச் சொல்லிக்கொடுக்க முடியும். ஆனால் இங்கு இருப்பதெல்லாம் கலைஞர் தொலைக்காட்சி மட்டும் தான். அதனால் தொலைக்காட்சி பற்றி இவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்குச் சற்று காலம் பிடிக்கும். இந்நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு இதுதான் செயற்கை நுண்ணறிவு என்று சொன்னால் அந்த குழந்தைகளால் புரிந்துகொள்ள இயலாது.  எனவே தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி கற்பிக்கச் சற்று காலம் பிடிக்கும். ஆனால் பாடம் சம்பந்தமானவற்றைச் சொல்லிக்கொடுக்கும் போது கற்பூர புத்தி என்று சொல்வது போல எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். No photo description available.


பொதுவாக அவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களைச் சார்ந்து அந்த குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் எனும்போது, அது சொல்லிக்கொடுப்பவர்களை பொறுத்துத்தான் உள்ளது.  ஒரு படித்த வசதியான பெற்றோரிடம் வளரும் குழந்தைக்கும், சாப்பாட்டிற்கே வழியில்லாமல் வளரும் குழந்தைக்கும் கற்றலில் இங்கு நிறைய வித்தியாசம் உண்டு. எனவே சூழலும் கற்றுக்கொடுக்கக் கூடிய நபர்களையும் பொறுத்துத் தான் குழந்தைகளுடைய கற்றல் திறன் நிர்ணயிக்கப்படுகிறது.

2.ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், கள்ளர் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்டவற்றை   பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க உள்ளதாக அரசு அறிவித்திருந்தது. அரசின் இந்த முடிவு சரியானது தானா?

மிகச்சரியானது. இது போன்ற நலத்துறை பள்ளிகள் உருவாக்கப்பட்டதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்கு கல்வி முழுமையாக சென்று சேரவேண்டும். பாகுபாட்டின் அடிப்படையில் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுவிடக் கூடாது போன்ற அடிப்படையில் நலத்துறை பள்ளிகள் உருவாக்கப்பட்டன.  ஆனால் தற்போது இந்த நலத்துறை பள்ளிகள் எப்படி இருக்கின்றன. உதாரணத்திற்கு மலை கிராமங்களில், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள், பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகள் மற்றும் வனத்துறை பள்ளிகள் என 3 விதமான பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதில் பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை பார்வை இடுவதற்கும் அங்கு நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்கும்  ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அதே வட்டாரக் கல்வி அலுவலர் அருகில் இருக்கக் கூடிய ஒரு பழங்குடிப் பள்ளியை பார்வையிட மட்டும் தான் முடியும். அந்த பள்ளிக்கு ஆசிரியர் வரவில்லை என்றால் கூட நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனென்றால் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை வருவாய்துறையினர்தான் மேற்பார்வை இடுவர். வருவாய்துறைக்கும் கல்விக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வருவாய்துறையினருக்கு கற்பித்தல் பற்றிய அடிப்படை அறிவு கூட கிடையாது. அவர்கள் அதிக பட்சம் கேட்கும் கேள்வி எல்லாம் குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டீர்களா? முட்டை கொடுத்தீர்களா? என்பது தான். ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு முறையாக வருகிறார்களா? வார்டன் விடுதியில் தங்குகிறார்களா? என எதைப்பற்றியும் கவலை இல்லை. No photo description available.

எனவேதான் கல்வி துறையின் கட்டுபாட்டில் எல்லாப் பள்ளிக்கூடங்களும் வரவேண்டும் என்று கூறுகிறோம். இதன் மூலம் குழந்தைகள் சிதறடிக்கப்படுவது குறைக்கப்படும். குழந்தைகளுடைய கல்வியானது ஒரே கட்டுப்பாட்டின் கீழ் வரும். 

ஆனால், நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தை பொதுவாக்கிவிடுவார்கள் என்பதாக இதனை திரிக்கிறார்கள். நலத்துறை பள்ளிகள் உருவாக்கப்பட்டதின் பெரிய வரலாறு அழிக்கப்பட்டுவிடும் என்றும் நினைக்கிறார்கள். ஒருபக்கம் இப்படி சொல்லிக்கொண்டிருந்தாலும், ஆனால் நாங்கள் கேட்பது ஒன்றுதான் ஊதியம் வழங்கும் அதிகாரத்தை மட்டும் பள்ளிக்கல்வி துறையிடம் வழங்கினால் போதும். ஏற்கனவே சீருடைகளும் புத்தகங்களும் பள்ளிக்கல்விதுறையின் மூலமாகத்தான் வழங்கப்படுகின்றன. அதேபோல நலத்துறை பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்றால் அவர்களுக்கு சம்பளம் இல்லை என்ற நிலை உருவானால் போதும் அவர்கள் தானாக பயந்துகொண்டு வேலைக்கு சென்று விடுவர். இதன் மூலம் பள்ளிக்கு செல்லாமல் தாசில்தார், திட்ட அலுவலர்கள்  போன்றவர்களுடன் சுற்றிக்கொண்டிருப்பதை தவிர்த்து விட்டு கல்வி கற்பிப்பதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த தொடங்குவர். இதற்காகதான் பள்ளிக்கு செல்லாத நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்குப்பிடி போடவேண்டும் என்றால் நலத்துறை பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் சொல்கிறாேம்.

3.தொலைதூர கிராமங்களில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் பணியாற்றும்  ஆசிரியர்களுக்கு உள்ள சிரமங்கள் என்னென்ன?

அரசு வேலைக்கு வரக்கூடியவர்களின் முதல் மனநிலை எங்கு வேலை கிடைத்தாலும் போவோம் என்பதாக உள்ளது. பின்னர் எனது மாவட்டத்திலேயே எனக்கு வேலை வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர்.  கடைசியாக எனது வீட்டிற்கு பக்கத்திலேயே எனக்கு வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். இந்த 3 வகையில்தான், அரசு வேலைக்கு செல்பவர்களின் மனநிலை உள்ளது. அது அவர்களின் உரிமை என்பதாக கூட வைத்துக்கொள்ளலாம். No photo description available.

சில மலைப்பகுதிகளில் வனவிலங்குகளின் தொல்லை அதிகம். ஆனால் அந்த பகுதிகளில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அரசு அங்கு ஒரு பள்ளியை அமைக்கிறது. வனவிலங்குகளால் இதுவரை எத்தனை ஆசிரியர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது?  பழங்குடியினர் பள்ளிக்கு வேலைக்கு வரும் ஆசிரியர்கள் பள்ளிகளில் தங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்துவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை. பழங்குடியினர் பள்ளி என்று சொன்னாலே அது தொலைதூர பள்ளிகள் தான் இதில் விடுதி இல்லாமல் எந்த பள்ளிகளும் கிடையாது.  இதில் சிரமங்கள் என்று சொன்னால் அந்த பகுதிக்கு செல்வதற்கு மட்டும் தான்.  அட்டை கடித்துவிடுமோ, வனவிலங்குகள் தாக்கிவிடுமோ என்று பயப்பட வேண்டும். ஆனால் மக்களும் அங்கு தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்கள் என்ன மக்கள் யாரும் இல்லாத பகுதியில் வாழும் செவ்வாய் கிரகவாசிகளா? இவர்களுக்கு எப்போது அரசு வேலை என்ற கொம்பு முளைக்கிறதோ அப்போதிலிருந்து அவர்கள் மக்களை வேறுமாதிரியாக பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.

அதுவும் இல்லாமல் மலைப்பகுதிகளில் வேலை செய்தாலே ஹில் அலவன்ஸ் என்று 6000 ரூபாய் தருகிறார்கள். இதற்காக மலைப்பகுதிகளுக்கு பணிமாறுதல் கேட்டு வாங்கி வருபவர்கள் அதிகம். ஆனால் பணிமாறுதல் பெற்ற பிறகு எங்கு இருக்கிறார்கள் என்பது தான் இங்கு கேள்வியாக உள்ளது. மலைப்பகுதிகளில் வேலை செய்பவர்களுக்கு தங்குமிடம் உணவு ஆகியவை இலவசம் தான். அரிசி பருப்புகளை ஏற்கனவே அரசு வழங்கிவிடுகின்றன. மேலும் விடுதிக்கு தேவையான பொருட்களை வீடு தேடி வந்து கொடுக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் ஆசிரியர் சங்கங்கள் ஒன்று சேர்த்து தாங்களே விடுதிக்கு தேவையான பொருளை வாக்கி கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு வாங்கி தங்கள் வீட்டில் வைத்துக்கொள்கின்றனர். 

4. சில அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியாக வகுப்பிற்கு கூட வருவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இங்கு உள்ளன. ஆனால் நீங்கள் பள்ளி மாணவர்களை அக்கறையோடு அணுகுகிறீர்கள், அவர்களை குளிக்க வைப்பது. அவர்களுக்கு முடிவெட்டி விடுவது போன்ற உதவிகளையும் செய்து வருகிறீர்கள். இப்படி மற்ற ஆசிரியர்களிடம் இருந்து நீங்கள் வேறுபட்டு இருப்பதற்கு குறிப்பிட்ட காரணம் என்று ஏதேனும் இருக்கிறதா?

என்னை கல்வி முன்னேற்றி இருக்கிறது. கல்வி எனக்கு விழிப்புணர்வை கொடுத்துள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் டீச்சர் டிரெயினிங் படிக்கும் வரையில் எனக்கு மூடப்பழக்க வழக்கங்கள் இருந்தது. ஆனால் நான் டீச்சர் டிரெயினிங் படிக்க வந்த போது நிறைய புத்தகங்கள் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் கூட குறிப்பிட்ட ஒரு மத வழிபாட்டு முறையை மட்டுமே கடைபிடித்து வந்தேன். ஆனால் பள்ளிக்கு ஆசிரியாக வந்த பிறகு மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது தான் பகுத்தறிவு என்ற ஒரு விஷயம் முழுமையாக என்னை ஆட்கொண்டது. ஒரு ஆசிரியர் மதம், சாதி, பாலின பாகுபாடு அற்றவராக இருக்க வேண்டும். நான் சிறுவயதில் தீண்டாமை ஒரு பாவசெயல் என படித்தவள் தான் ஆனால் அதன் முழுமையான அர்த்தம் அப்போது  எனக்கு தெரியவில்லை. என் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கும் போது தான் என்னிடம் இருந்த அறியாமை முழுமையாக போனது. நான் ஒரு முழுமையான நபராக மாறியதே பள்ளிக் கூடத்தில் தான். No photo description available.


இந்த கல்வியானது நான் புரிந்து படித்து நல்ல மதிப்பெண் பெறுவது அனைத்தையும் தாண்டி என் சமுதாயத்திற்கு பயன்படும்போதுதான் நான் படித்த கல்வி உயிர்ப்போடு இருக்கிறது. நான் கற்பிக்கும்போது எனது கல்விக்கு ஒரு ஜீவன் கொடுத்ததுபோல இருந்தது. தொடர்ந்து கற்பிக்க கற்பிக்க என்னிடம் இருந்த அறியாமை எல்லாம் விலகி ஓட ஆரம்பித்துவிட்டது. யாரோ ஒருவர் எனது கல்வி உரிமைக்காக போராடவில்லை என்றால் இன்று நான் கல்வி கற்றிருக்க முடியாது. இந்த பூமியில் பிறக்கும் அனைவரும் ஒரு நாள் இறக்கதான் போகிறார்கள். ஆனால்,  நான் எந்த துறையில் இருக்கிறேன், யாருக்காக இருக்கிறேன், என்பதை உணர்ந்து நான் வேலை செய்ய ஆரம்பித்தேன்.  குழந்தைகளிடம் எப்படி  நீங்கள் இவ்வளவு நேரம் உழைக்கிறீர்கள்? என்று  எல்லாரும் கேட்கிறார்கள். நான் குழந்தைகளிடம் உழைப்பதில்லை நான் உறையாடிக்கொண்டிருக்கிறேன். அந்த குழந்தைகள் எனக்காக யோசிக்கிறார்கள். நான் குழந்தைகளுக்காக யோசிக்கிறேன். நாங்கள் பரஸ்பரமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். 


5. பள்ளி மாணவர்கள் அணியும் சீருடையை போன்றே நீங்களும் உடை அணிவதன் காரணம் என்ன? பள்ளி மாணவர்களை போல ஆசிரியர்களும் சீருடை அணிய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?

சீருடை என்பது சமத்துவத்திற்கான அடையாளம். பாலின வித்தியாசம் மட்டுமே சீருடை அடிப்படையில் இந்தியாவில் இருக்கிறது. அனைத்துப் பள்ளிகளிலுமே சீருடை பொதுமை படுத்தப்பட்டிருக்கிறது.  அதுவும் சில பள்ளிகளில் பாலின அடிப்படையில் கூட உடை வேறுபாடு  இல்லை என்ற அளவில் முன்னேறி இருக்கிறது.  சீருடை என்பது நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அல்லது எவ்வளவு சாதாரண ஆளாக இருந்தாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தால் சமம்தான் என்பதை உணர்த்தக் கூடியது. No photo description available.

குழந்தைகளை போல சீருடை அணிவது எனக்கு வசதியாக உள்ளது. இரண்டாவதாக எனது பொருளாதாரம் எனது துணிக்காக செலவு செய்யப்படுவது என்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பணத்தை என் குழந்தைகளின் கல்வி செலவிற்கு பயன்படுத்திக் கொள்கிறேன். இதுவே ஒரு புடவை எடுத்தால் அதற்கு ஒரு பிளவுஸ் தைக்க வேண்டும் அதற்கு 200 ரூபாய் ஆகும். அதற்கு ஒரு பாவாடை, ஃபால்ஸ் இவை எல்லாம் இருக்கிறது. இதையெல்லாம் நான் எடுக்காமல் விட்டால் வேறு யாரும் எடுக்காமல் போய்விடுவது கிடையாது. கோடிக்கணக்கான புடவைகள் குவிந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒரு மாதத்திற்கு 500 ரூபாய் என்பது எனக்கு தண்டச்செலவு. இது ஒரு வருடத்திற்கு 6000 ஆகும். இந்த பணம் இருந்தால் கல்லூரி படிக்கும் ஒரு பிள்ளைக்கு ஒரு பருவத்திற்கான கட்டணத்தை கட்டிவிடலாம். இப்படியே என்னை நான் பழக்கப்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். 

இந்த சீருடை எனக்கு வசதியாக இருக்கிறது. இது குழந்தைகளோடு பாட்டுபாடவோ நடனம் ஆடவோ மேலும் நெருக்கமாக இருக்க இந்த சீருடை எனக்கு வசதியாக இருந்தது. குழந்தைகளை ஓடிப்பிடிக்கும்போது புடவை சிக்கி எத்தனையோ முறை கீழே விழுந்திருக்கிறேன். அப்போது என் குழந்தைகள் கொடுத்த யோசனைதான் இந்த சீருடை. நீங்களும் எங்களைபோல சுடிதார் தைத்து போட்டுக்கொள்ளுங்கள் என அவர்கள்தான் என்னை ஊக்கப்படுத்தினர். May be an image of 3 people, people smiling and biryani

இதுபோல ஒட்டுமொத்த ஆசிரியர்களும் சீருடை அணியவேண்டும் என்று சொல்வதற்கான காரணம், ஆசிரியர்களுக்குள் எந்த சமத்துவமும் இருக்கக் கூடாதா என்பதுதான். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, இராணுவம் என எல்லோரும் சீருடைதான் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் எல்லோருமே சேவை துறையை சார்ந்தவர்கள்தான். அதுபோல ஆசிரியர் பணியும் சேவைதுறையை சார்ந்ததுதான். அதிகார மையத்தில் இருப்பவர்கள் தான் சீருடை அணியமாட்டார்கள். சேவை துறையில் இருப்பவர்கள் எல்லோரும் சீருடை அணியும் பட்சத்தில் ஆசிரியர்கள் மட்டும் ஏன் சீருடை அணிவத்தில் விதிவிலக்காக இருக்க வேண்டும். இவர்கள் மட்டும்  விதவிதமாக ஆடைகளையும் நகைகளையும்  அணிந்துகொண்டு குழந்தைகள் மட்டும் எதற்கும் ஆசைப்பட கூடாது எனக் கூறுவது  எந்த வகையில் நியாயமானது.No photo description available.

 

சீருடை என்பது குழந்தைகள் பள்ளிக்கு உள்ளே இருக்கும்போது சமத்துவமாகவும் வெளியே வரும்போது அடையாளமாகவும் இருக்கிறது. குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் போது ஏதேனும் தவறிழைத்தால் அவர்களை குற்றவாளியாக அடையாளப்படுத்த இது பயன்படுகிறது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் யாரும் எந்த தவறையும் இழைப்பதில்லையா? எனவே ஆசிரியர்களுக்கும் கண்டிப்பாக சீருடை வேண்டும். அதுவும் குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு வசதியாக இருக்க கூடிய ஆடை சுடிதார் தான். அதை விருப்பப்படும் பெண் ஆசிரியர்கள் சுடிதாரை அணிந்து வரலாம் என்ற ஆணை வழங்கிவிட்டால் போதும். தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகளிடம் பாட்டுபாடுவது நடனம் ஆடுவது அடிக்கடி அமர்ந்து எழுவது என நிறைய சிக்கல் உள்ளது. இதற்கெல்லாம் புடவை சரியாக இருக்காது. இதுபோல குழந்தை பெற்ற பெண் ஆசிரியர்களுக்கு அறுவை சிகிக்சை செய்யப்பட்ட இடத்தில்தான் பாவாடை முடிச்சு போட வேண்டிய நிலை வரும். வண்டியில் போய்வருபவர்களுக்கு இடுப்பு தெரியாமல் இருக்க இழுத்து விடவேண்டும். ஒருபக்கம் இடுப்பு தெரியாமல் இருக்க இழுத்து விட வேண்டும் மறுபக்கம் மார்பு தெரியாமல் இருக்க இழுத்து விட வேண்டும். இவையெல்லாம் எவ்வளவு அசெளகரியமான விஷயம். இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொன்னால் கண்டிப்பாக உறக்க குரல் கொடுத்துதான் ஆக வேண்டும்.


6. சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்த பொதுத்தேர்வில் மாநில முதலிடம் பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் பழக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளதே இதைப் பற்றி உங்கள் கருத்து எனன?

மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை பாகுபடுத்துவது மிகப்பெரிய வன்முறை. மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் மாணவர்களை புத்திசாலி என்பதும். தேர்வில் தோல்வியுறும் மாணவர்களை முட்டாள் என்றும் இந்த சமூகம் வைத்திருக்கும் பார்வையை முதலில் அடித்து நொறுக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் உதய சந்திரன் ஐஏஎஸ் கல்விசெயலராக இருந்த போது முதல் பள்ளிகளில் மதிப்பெண் பெரும் மாணவர்களை விளம்பரப்படுத்தக் கூடாது அறிவித்திருந்தார். அது எங்களை போன்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஜவ்வாது மலைவாழ் மக்களுக்கு படிப்பு வாசத்தை காட்டிய ஆசிரியர் மகாலட்சுமி!

முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை விளம்பரப் படுத்துவதால் அவர்கள் பரிசு பொருட்களை தேடிச்செல்லும் அதே நேரத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தூக்கு கயிறை தேடிச்செல்கின்றனர்.  எனவே இங்கே மதிப்பெண்கள் கொண்டாடப்பட கூடவே கூடாது.  தமிழ்நாட்டில் மீண்டும் முதல் மதிப்பெண்களை விளம்பரப்படுத்தும் போக்கு உருவாகி வருகிறது. தற்போதும் உதய சந்திரன் ஐஏஎஸ் கல்விதுறைக்கு இணை செயலராக இருக்கிறார். இதனை தமிழ்நாடு அரசு வன்மையாக கண்டிக்க வேண்டும்.  குழந்தைகளுக்குள்ளாக ஒரு போட்டியை உருவாக்கிவிட்டு அடுத்த தலைமுறையை நான் ஆரோக்கியமாக வளர்க்கிறேன் என்ற மனநிலையை இங்கு வளர்த்துவிட கூடாது. நீட் தேர்வினால் நடத்தப்படும் கொலைகளும் இதுவும் ஒன்றுதான். நீட் தேர்வினால் அவர்கள் அந்த அளவில் கொல்லப்பட்டால் நாம் இந்த அளவில் அந்த கொலைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்.  மதிப்பெண் அடிப்படையிலான கல்வி என்பதை மாற்றியமைக்க வேண்டும். தரப்படுத்துதல் என்ற வார்த்தையே குழந்தைகளிடமிருந்து அகற்றப்பட வேண்டும். 

7. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செயல்பாடு எப்படி உள்ளது?
 
அமைச்சரின் செயல்பாடு இன்னும் தீவிரமாகவும் ஆழமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இடையிடையே தேசிய கல்வி கொள்கையின் சாராம்சம் உள்ளே வந்துகொண்டிருக்கிறது. இதனை தடுக்க அவசரநிலை பிரகடனத்தின்போது பொது பட்டியலுக்கு கொண்டுசெல்லப்பட்ட கல்வி தொடர்பான அதிகாரத்தை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். அவர் அரசியலுக்கு புதியவர் கூடவே கல்வித்துறை அமைச்சர் என்ற பெரிய பொறுப்பையும் அவர் தலையில் தூக்கி வைத்திருக்கிறார்கள். இலட்சக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் அவர் கையில் உள்ளது. May be an image of 6 people, temple and dais

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் செங்கோட்டையன் பள்ளிக்கல்வி அமைச்சராகவும் உதயசந்திரன் கல்வி செயலராகவும் இருந்தபோது மாற்றத்தை கொண்டு வந்த ஆசிரியர்களை அழைத்து ஆலோசனை கேட்டனர். அதில் இவர்களைதான் அழைக்க வேண்டும் இவர்களை எல்லாம் அழைக்க கூடாது என சில அரசியலும் இருந்தது. ஆனாலும் குழந்தைகள் நலம், வகுப்பறைகள், கட்டமைப்பு ஆகியவை சார்ந்து என்னென்ன செய்யலாம் என்பது குறித்து அழைத்து பேசினார்கள். ஆனால் இந்த ஆட்சியில் அது தொய்வாக உள்ளது. பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்ற கல்வியாளர்களிடம் அமைச்சர் இன்னும் ஆழமாக உரையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  கல்வி தொடர்பாக இன்னும் நிறைய விஷயங்கள் அவர் ஆழமாக தெரிந்துகொண்டால் தான் இந்த அரசு முன்வைக்கும் கொள்கைகளான சமூகநீதி சமத்துவம் சார்ந்து முழுமையாக இயங்க முடியும்.May be an image of 6 people and wedding 

8. பெண்களுக்கும் ஆண்களுக்கம் தனித்தனி பள்ளிகள் அமைக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து?

இந்த முறை முற்றிலும் தவறானது. இப்போது இருக்கக் கூடிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பள்ளிகளை இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும். இந்த சமூகத்தில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் வாழ்வது கிடையாது. குழந்தைகள் பாலின பேதமற்று சகஜமாக வளரட்டுமே. ஹார்மோன் பிரச்சனை இருக்கத்தான் செய்யும் நாம் அனைவரும் அந்த வயதை கடந்துதானே வந்துள்ளோம். ஆசிரியர்கள் ஏதோ இளம் பருவத்தையும் காதலையும் கடந்து வராதவர்கள் போல குழந்தைகளை அணுகுவது தவறானது. முதலில் மாணவர்களுக்கு பாலின பேதமற்று பழக சொல்லிக்கொடுக்க வேண்டும். உணர்வுகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும் அதை விடுத்து மாணவர்களுக்கு உணர்ச்சியே இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நீ கேவலமானவன் என்று சொல்வதெல்லாம் தவறானது. May be an image of 6 people and text

தனித்தனியான பள்ளிகள் இருப்பது வன்முறை. இருபாலர் பள்ளி என்பதே சரியான நடைமுறையாக இருக்கும். இருபாலர் என்பதை விட முப்பாலர் என்பதே சரியாக இருக்கும். ஏனெனில் திருநர் குழந்தைகளும் தற்போது படிக்க ஆரம்பித்துள்ளனர். எனவே முப்பாலர் பள்ளிகளாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். No photo description available.

9.பழங்குடி சமுதாயத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை பற்றிய புரிதல் எந்த மட்டத்தில் உள்ளது. பழங்குடி மற்றும் பட்டியலின மாணவர்களிம் இட ஒதுக்கீடு பற்றி பிற மாணவர்களுக்கு போதுமான புரிதல் உள்ளதா?

பழங்குடி குழந்தைகளுக்கு இட ஒதுக்கீட்டை பற்றிய அடிப்படை புரிதலே சுத்தமாக இல்லை எனலாம். ஒரு ஆசிரியருக்கு  அந்த புரிதல் இருந்தால் மட்டுமே அதனை பழங்குடி மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க முடியும்.  முதலில் ஒரு குழந்தையின் கல்வி வெறும் சான்றிதழ், என்பதை கடந்து எதெற்கெல்லாம் பயன்படும் என்பதை ஆசிரியர்கள் தான் இந்த குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.  தன்னிலிருந்து தொடங்கி பொது சமூகம் வரையில் நகர்வது தான் கல்வி என்பதை அவர்களுக்கு கற்றுத் தரவேண்டும். இதற்கு இடையில் என்ன என்ன எல்லாம் இருக்கிறது. அதில் இட ஒதுக்கீட்டின் தேவை என்ன என்பதை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். May be an image of 3 people and people smiling

இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் 10 வது படித்த குழந்தைக்கும் என்ன வேலை வாய்ப்பு உள்ளது என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். வெறுமனே அந்த மாணவனை தேர்ச்சி மட்டும் பெற வைப்பது ஆசிரியரின் பணி அல்ல. இங்கு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு பாடத்தை பற்றியும் திறன் வளர்ப்பு பற்றியும் அறிவு இருக்க வேண்டியது கட்டாயம். ஆனால் பழங்குடியினர் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள்  இட ஒதுக்கீட்டை பற்றியும் திறன்களை வளர்த்துகொள்வது பற்றியும் சொல்லித் தருவதே இல்லை. முதலில் ஆசிரியர்களுக்கு இட ஒதுக்கீட்டை பற்றிய புரிதல் வேண்டும் பின்னர்தான்  அது மாணவர்களுக்கு வரும்.


10. மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட காணொளி ஒன்று சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு, இந்தியாவின் ஆன்மாவிற்கு, இந்தியாவின் பன்முக தன்மைக்கு, இந்தியாவின் இறையாண்மைக்கு இந்த சம்பவம் மிகப்பெரிய ஒரு கேடு. மிகப்பெரிய ஒரு  எவ்வளவோ கூனி குருகி போய் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு தண்டனைகள் மிக கடுமையாக கிடைக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமல்லாமல் வேடிக்க பார்த்தவர்களுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும். இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.  இவை கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அதுவும் இந்த காலக்கட்டத்தில், இணையத்தை எல்லாம் துண்டிக்க வைத்துவிட்டு,  ஆட்சி செய்துக்கொண்டிருக்க கூடிய இந்த காலக்கட்டத்தில நீதி கிடைப்பது மிகவும் சந்தேகம்தான். இருந்தாலும் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் விரைவாக தலையிட்டு நல்லதோர் நீதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.  எல்லையில் நின்று இந்தியாவை பாதுகாத்துக்கொண்டிருக்கிற  இராணுவ வீரரான பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரை போல நானும் நீதி கிடைக்கும் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

நேர்காணல் ச.பிரபாகரன்

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!