கொங்கு நாடு கோரிக்கை ; திமுகவே அடம்பிடித்தாலும் நடக்காது.! பாஜக பயப்படும் பின்னணி இதுதான்.!  

கொங்கு நாடு கோரிக்கை ; திமுகவே அடம்பிடித்தாலும் நடக்காது.! பாஜக பயப்படும் பின்னணி இதுதான்.!  

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், அண்மையில் ஒன்றிய இணையமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அவர் தனது விவர குறிப்பேட்டில் "கொங்கு நாடு, தமிழ்நாடு" என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், மத்திய அரசை 'ஒன்றிய அரசு' என்று அழைக்கும் திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே எல்.முருகன் இப்படி சொன்னார் என்று சொல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல பாஜக தலைவர்கள் கொங்கு மண்டலம் குறித்து கருத்தைப் பதிவிட்டனர். இதனால் கொங்கு மண்டலம் குறித்த பேச்சு இணையத்தை ஆக்கிரமித்தது. மேலும் சமூக வலைத்தளங்களில் கொங்கு நாட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து பதிவிட்டனர். நிலைமை இப்படியிருக்க, தமிழகத்தை பிரிக்க யார் முயன்றாலும், ஏன் திமுகவே முயன்றால் கூட அதற்கு பாஜக சம்மதிக்காது என்று சொல்லப்படுகிறது. 

அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.! தமிழகத்தை பொறுத்தவரை 'கொங்கு நாடு' பற்றி பாஜக பேசுவது கூட, தான் வலிமையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை வலுப்படுத்த மட்டுமே. ஒருவேளை உண்மையிலியே தமிழகத்தை பிரிக்க நினைத்தால் அது பாஜகவுக்கு இந்திய அளவில் நெருக்கடியை கொடுக்கும். 

ஏனென்றால், இந்தியா முழுக்க பல்வேறு தேசிய இனங்கள் தற்போது தனி மாநிலம் கேட்டு போராடி வருகின்றன. மோடியின் குஜராத்தில் கூட சௌராஷ்டிரா, கட்ச் போன்ற பகுதிகளில் தனி மாநில கோரிக்கை உயிரோட்டமாக இருக்கிறது. மேலும், மகாராஷ்டிரத்தில் விதர்பா, கர்நாடகத்தில் துளு, மேற்கு வங்கத்தில் கூர்காலாந்து போன்ற இடங்களில் தனி மாநில கோரிக்கை வலுவாக இருக்கிறது.  

தமிழகத்திலிருந்து கொங்கு பகுதியை தனியாக பிரித்தால், மேற்கூறிய இடங்கள் எல்லாம் தங்களையும் பிரித்து தனி மாநிலமாக்க கோரிக்கை விடுப்பார்கள். அதோடு அந்த இடங்களில் எல்லாம் பாஜக வலிமையாக இருக்கிறது. அந்த மாநிலங்களை தனி தனியே பிரித்தால், அரசியல் ரீதியாக பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். மேலும் பிராந்திய அளவில் சிறிய கட்சிகள் எழுச்சியடைந்து பாஜகவின் கொள்கைக்கே அது எதிராக திரும்பும். 

இவ்வளவு ஏன், தமிழகத்தை நிர்வாக ரீதியாக கூட பாஜக பிரிக்க விரும்பாது. ஏனெனில் தமிழகத்தை விட பெரிய மாநிலங்கள் இந்தியாவில் இருக்கின்றனர். இதை பிரித்தால் பிற மாநிலங்களையும் பிரிக்கவேண்டிய சூழல் உருவாகும். அதிலும் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை நான்காக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்பிருந்தே எழுந்து வருகிறது. அப்படி நான்காக பிரித்தால் அது சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், அப்னாதள் போன்ற கட்சிகளுக்கே சாதகமாக இருக்கும். அந்த கட்சிகளை நம்பியே பாஜக இருக்கும் சூழல் உருவாகும். 

இது போன்ற காரணங்களால் தமிழகத்தை பிரிக்க பாஜக ஒரு போதும் முன்வராது. ஒருவேளை கொங்கு நாடு கோரிக்கை வீரியமாகத் தொடங்கினால் கூட அதை பாஜகவே நேரடியாக எதிர்க்கும். இப்போது கொங்கு நாடு பற்றி பேசுவது, திமுகவின் 'ஒன்றிய அரசு' என்ற கோஷத்தை கூர்மழுங்க செய்யவே தவிர, தமிழகத்தை பிரிப்பதற்காக அல்ல.