பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் முதல் கையெழுத்து!

அதிமுகவின் கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் தான் முதன்மையான அதிகாரம் படைத்தவராக இருப்பார் எனக் கூறப்படுகிறது.

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் முதல் கையெழுத்து!

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதன் மீதான தீர்ப்பு இன்று காலை 9 மணி அளவில் வெளியானது. அதில் அதிமுக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று அதன் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பொதுக்குழு நடக்கும் அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். ஓ.பி.எஸ் அங்கு சென்ற போது அவரது ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பியோடினர்.

அதிமுக தலைமையகத்திற்குள் ஓ.பி.எஸ் இருந்த போது சில முக்கிய ஆவணங்களை அவரது ஆதரவாளர்கள் வாகனத்தில் ஏற்றுவது போன்ற காணொலிக் காட்சிகள் வெளியானது. அங்கு வந்த தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப் போவதாகத் தெரிவித்தனர். அவர்களிடம் அவகாசம் கேட்டு, சில நிமிடங்களில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அங்கிருந்து வெளியேறினர். அவர்கள் வெளியேறிய பிறகு வருவாய்த் துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதே பொதுக்குழுவால் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்தனர்.தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்குமிடையே நடக்கும் போட்டியால் அதிமுக பிளவுறும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள இ.பி.எஸ் தனது முதல் அறிவிப்பாக திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக நியமித்துள்ளார். அவருடைய கையெழுத்துடன் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுகவின் கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் தான் முதன்மையான அதிகாரம் படைத்தவராக இருப்பார் எனக் கூறப்படுகிறது.  இதனடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றவுடன் இடும் முதல் கையெழுத்து இது எனவும் கூறப்படுகிறது.