அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்!

அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்!

சமீபத்தில் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி குழுவின் 47ஆவது கூட்டம் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை அரிசி மாவு, கோதுமை மாவு, பருப்பு, பன்னீர், தேன் பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், உலர் பழங்கள்,பொரி, இறைச்சி உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. அஞ்சலக சேவைகள் உள்ளிட்டவற்றுக்கும் 5 சதவீத வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்காக உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களின் எதிர்ப்பு

இந்த வரி அறிவிப்புக்கு ஏழை, எளிய, நடுத்தர மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த வரி விதிப்பினால் உணவகங்களிலும் கூட விலை உயரும். அதை நம்பி இருக்கும் வருவாய் பிரிவினர் மட்டுமல்ல சிறு உணவகங்கள் நடத்துபவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

நிதி அமைச்சரின் மௌனம்

  தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்ட நிதி அமைச்சரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்தத் திட்டத்தை நிதி அமைச்சர் எதிர்க்காதது கண்டிக்கத்தக்கது.

திரும்பப்பெற வேண்டும்

அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் இந்த வரி விதிப்பை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதாகவும், ஜிஎஸ்டி கவுன்சிலிலும் தமிழ்நாடு அரசு இது குறித்து முறையிட வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.