முக்கிய தலைகளை தூக்கிய திமுக.,ஒரே எம்.எல்.ஏவை வைத்து ஆட்டம் காட்டும் பாஜக., பீதியில் அதிமுக.! 

முக்கிய தலைகளை தூக்கிய திமுக.,ஒரே எம்.எல்.ஏவை வைத்து ஆட்டம் காட்டும் பாஜக., பீதியில் அதிமுக.! 

ஈரோடு என்றாலே அடு அதிமுக தான் என்றே சொல்வார்கள். அந்த அளவு ஈரோடு மாவட்டத்தில் அதிமுக மிக வலிமையாக இருந்தது. ஆனால், அது எல்லாம் கடந்த கால வரலாறு என்று சொல்லும் விதமாக ஆகிவிடுமா என்று ரத்தத்தின் ரத்தங்கள் தற்போது கலங்கி வருகிறார்கள். 

கொங்கு எப்போதும் அதிமுக கோட்டை தான்,  அந்த கோட்டையின் ஆணிவேராக திகழ்ந்தது என்னவோ அது ஈரோடு தான். அதிலும் 2021ம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை ஈரோடு  மாவட்டத்தின் 8 தொகுதிகளையும் அதிமுகவே கைப்பற்றி வந்தது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து ஜெயலலிதா காலம் வரை எப்போதும் அதிமுகவை காப்பாற்றி வந்தது ஈரோடு தான். 

அதிமுகவின்  முக்கிய அமைச்சர்களான ஈரோடு  முத்துசாமி, கோபி  செங்கோட்டையன், தாராபுரம் 
 ஈஸ்வரமூர்த்தி, வெள்ளக்கோவில்  துரை ராமசாமி, காங்கேயம்  வீரப்பன் போன்றோர் அப்போது போட்ட விதை இப்போது வரை அதிமுகவை கரைசேர்த்து வருகிறது. எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அமைச்சரவையில் ஈரோட்டுக்கு ஒரு முக்கிய இடம் எப்போதும் இருக்கும். அதனால் தான் அங்கு திமுகவால் இதுவரை கொடிநாட்ட முடியாத நிலை இருந்தது.

ஆனால், அந்த காட்சிகள் எல்லாம் தற்போது மாறி வருகிறது என்று புலம்பிவருகிறார்கள் ஈரோடு மாவட்ட அதிமுகவினர். திமுக கூட்டணிக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஈரோட்டில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத நிலை இருந்தது. ஆனால் அது தற்போது மாறியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் வெற்றிபெற்றது திமுக கூட்டணி. அதிலும் ஈரோடு நகரின் இரண்டு தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. இது அதிமுக ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதோடு ஈரோடு அதிமுக உள்கட்சி மோதல்களிலும் சிக்கி தவிக்கிறது. மாவட்ட செயலாளர் ராமலிங்கத்துக்கும், புறநகர் மாவட்ட செயலர் கருப்பணனுக்கும் இடையே கடுமையான உள்கட்சி மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் செங்கோட்டையன், கருப்பணன், ராமலிங்கம் இவர்களை தவிர பெரிய அளவில் வேறு யாருமே அங்கு தலைநிமிர முடியவில்லை. இதனால் இவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் வேறு கட்சிக்கு செல்லும் நிலை இருக்கிறது. 

அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த முத்துசாமியும் திமுக பக்கம் போய் இப்போது அமைச்சராகியும் விட்டார். தோப்பு வெங்கடாசலமும் திமுக பக்கம் சென்று விட்டார். இவர்கள் மூலமாக அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைகளை இழுக்க திமுகவும் முயன்று அதில் வெற்றியும் பெற்று வருகிறது. 

இதைத் தவிர, பாஜகவினரும் அதிமுகவுக்கு போட்டியாக ஈரோட்டில் அரசியல் செய்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தின் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. இது பாஜகவினரை உற்சாகப்படுத்த இனி திமுகவுக்கு போட்டி நாங்கள் தான் என்று சொல்லி அரசியல் செய்து வருகிறார்கள். அதோடு பாஜக எம்,எல்,ஏவை முன்வைத்து கோரிக்கை மனு வாங்குதல், முக்கிய பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது என்று எதிர்க்கட்சியாக அதிமுக செய்யவேண்டியதை பாஜகவினர் செய்கிறார்கள். 

இப்படி இரண்டு பக்கத்திலிருந்தும் அதிமுகவுக்கு நெருக்கடி வர, எங்கே அதிமுக கோட்டை திமுக கோட்டையாகிவிடுமோ? என்று அதிமுகவினரே கவலைப்பட்டு வருகின்றனர். இனியாவது அதிமுக சுதாரிக்குமா? அல்லது தன் இருப்பை திமுகவுக்கு தாரை வார்த்து விடுமா என்று ரத்தத்தின் ரத்தங்களும் புலம்பி வருகிறார்கள்.