அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – திமுக எம்.பி. டி.ஆர். பாலு குற்றச்சாட்டு

அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – திமுக எம்.பி. டி.ஆர். பாலு குற்றச்சாட்டு

திராவிடர் குறித்து ஆளுநர் ஆர். என். ரவி கூறிய கருத்துக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கண்ட னம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு இதுவரை வந்து பணியாற்றிய ஆளுநர்கள் யாரும் இதுவரை இதுபோன்ற கருத்துகளைப் பொதுவெளியில் சொல்லி சர்ச்சைகளில் இறங்கியது இல்லை என்று சொல்லும் வண்ணம், இன்றைய ஆளுநர் செயல்பாடுகள் அமைந்துள்ளனதாக விமர்சித்துள்ளார். சனாதனம் குறித்து சில வாரங்களுக்கு முன்னால் அவர் சில கருத்துகளைக் கூறினார். அப்போதே அதற்கு உரிய விளக்கத்தை கழகத்தின் சார்பில் தான் அளித்ததாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில், ‘திராவிடர்’ குறித்து ஆளுநர் அடுத்த விவாதத்தை தொடங்கி வைத்திருப்பதாகவும் ‘திராவிடர்’ என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று ஆளுநர் சொல்லி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என விமர்சித்தார். ‘திராவிடம்’ என்பது இடப்பெயராக, இனப்பெயராக, மொழிப் பெயராக இருந்தது. வடக்கு தெற்கு என்ற பாகுபாடு இடப்பாகுபாடாக இருந்ததாக டி.ஆர். பாலு சுட்டிக்காட்டினார். ஆரியன்-திராவிடன் என்ற இனப்பாகுபாடாக இருந்தது. தமிழ் சமஸ்கிருதம் என்ற மொழிப்பாகுபாடாக இருந்தது. இப்படி காலம்காலமாக இருந்த இன இட மொழிப்பாகுபாட்டை முன்வைத்து தமிழர்கள் அரசியலை முன்னேற்றத்தை எழுச்சியை உருவாக்க முனைந்தது தான் திராவிட இயக்கம் எனக் கூறினார். கடந்த 100 ஆண்டு கால திராவிட இயக்கத்தின் வரலாறு என்பது இதில் தான் அடங்கி இருப்பதாக டி.ஆர். பாலு பெருமிதம் தெரிவித்தார். இது தான் திராவிட இயக்கம் எனக்கூறினார். இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய பீதி தான் ஆளுநர் பேச்சில் வெளிப்படுவதாக டி.ஆர். பாலு சுட்டுக்காட்டினார். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு கீழ் இன்று இந்தியா இல்லை எனவும் பாஜக ஆட்சியில் தான் இன்று இந்தியா இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதே வேற்றுமைகளை நீக்கும் செயல்கள் என்னென்ன என்று பார்த்து அதனை முன்னெடுப்பதற்கு தன் னால் முடிந்த காரியங்களை ஆளுநர் ஆர். என். ரவி செயல்படுத்தலாம் என அறிவுறுத்தினார். மற்றபடி கடந்த கால வரலாற்றுக்கு கற்பனை முலாம் பூசி, உண்மையான பிரச்சினைகளை திசை திருப்ப முன்வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். கவர்னர், கவர்னர்ஜெனரல் போன்ற பதவிகள் எல்லாம் கூட ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவை தான் என்பதையும் நினைவூட்டுவதோடு, தமிழ்நாடு ஆளுநர் தன் பதவியேற்பின்-போது, அரசியல் சட் டத்தின் மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கவேண்டும் என்றும் திமுக எம்.பி. டி.ஆர். பாலு கேட்டுக் கொண்டார்.