நேர்மையான அதிகாரிகளை காக்குமா அரசு?

நேர்மையான அதிகாரிகளை காக்குமா அரசு?

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறை தட்டிக் கேட்கும் நேர்மையான அதிகாரிகளுக்கு இதுதான் கூலியா என்ற கேள்வியும் அதிகாரிகள் மட்டத்தில் எழுந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். 56 வயதான இவர் தன் வேலைகளில் மிகவும் நேர்மையாக இருந்ததற்கு அடிக்கடி பணியிட மாற்றமே பரிசாய் கிடைத்து வந்தது. 

தொடர்ந்து ஆறேழு இடங்களுக்கு பணியிட மாறுதலாகி கடைசியாக வந்து சேர்ந்த இடம்தான் முறப்பநாடு. கடந்த சில காலமாக முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர் அங்கும் தன் நிலையில் இருந்து மாறவில்லை.  

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் நடத்துவதற்காக இடம் தேவைபட்போது இவரை தேடி வந்தது அரசு.
அப்போது அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களை கண்டறிந்து அதனை மீட்டு தருவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார் பிரான்சிஸ். அதே நேரம், இந்த நில ஆக்கிரமிப்பாளரால் முன்பே பிரான்சிஸ் தாக்கப் பட்டிருந்ததும் பழைய கதை.  

இந்நிலையில் முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து நாள்தோறும் மணல் அள்ளப்பட்டு லாரி லாரியாக வெளி மாவட்டங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ராமசுப்பு என்பவர் தலைமையில் நாள்தோறும் மணல் கடத்தி வரப்பட்ட நிலையில் பிற அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். 

ஆனால் கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுத்தாக வேண்டும் என வைராக்கியத்துடன் இருந்த பிரான்சிஸ், ராமசுப்புவை எதிர்த்து துணிந்து நின்றுள்ளார். இந்த மணல் கடத்தல் தொடர்பாக கடந்த வாரம் ராமசுப்பு தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரான்சிஸை கடுமையாக தாக்கியுள்ளார். 

இந்த நிலையில் மணல் கடத்தலையே தொழிலாக கொண்டுள்ள ராமசுப்பு, கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸை கொலை செய்வதற்கு 2 நாட்களாக நோட்டமிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் 25-ம் தேதியன்று காலை வழக்கம் போல பிரான்சிஸ் வேலைக்கு சென்றுள்ளார். 

அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லாததை அறிந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் பிரான்சிசை சரமாரியாக வெட்டி வீசியது. ரத்தம் கொட்டிய  நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து அறிந்த தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அரசு மருத்துவமனைக்கு சென்று பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மணல் கடத்தலை தட்டிக் கேட்டதால் கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதாக பேட்டி அளித்தார். 

மணல் கடத்தலை துணிச்சலுடன் எதிர்த்து மணல் மாபியாக்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து தமிழ்நாடு அரசு 1 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கியுள்ளது. மற்றும் பிரான்சிஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தென் தமிழகத்தில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இருந்து மணல் அள்ளப்பட்டு லாரிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இப்படியாக தமிழ்நாட்டின் கனிம வளங்கள் கடத்தப்படுவதை தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரிக்கு கிடைத்த பரிசு மரணம்தானா? 

உயிர் போன பின்பு வழங்கப்படும் நிவாரண உதவிகளைக் காட்டிலும் அரசு அதிகாரிகளை மிரட்டும் மணல் மாபியாக்களை அரசு தடுக்குமா தமிழ்நாடு அரசு? கனிமவளங்கள் காப்பாற்றப்படுமா? தமிழகத்தில் மீண்டும் இதே போன்றதொரு நிலை வராமல் நடவடிக்கை எடுக்கப்படுமா?