புதிய கட்சியை தொடங்குகிறாரா குலாம் நபி ஆசாத்?

புதிய கட்சியை தொடங்குகிறாரா குலாம் நபி ஆசாத்?

ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து, காங்கிரஸில் இருந்து இன்று விலகிய குலாம் நபி ஆசாத், புதிய கட்சியைத் தொடங்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

காங்கிரஸிலிருந்து விலகல்

ஆசாத், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸில் ஒரு முக்கிய பதவியை நிராகரித்த சில நாட்களுக்குப் பிறகு, கட்சி வளர்ச்சிக்கான தனது பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி கட்சியை விட்டு விலகினார். ராகுல் காந்தியை குழந்தைத்தனமான நடத்தை கொண்டவர் என்றும் முதிர்ச்சியற்றவர் என்று குற்றம் சாட்டி ஐந்து பக்க விலகல் கடிதத்துடன் இன்று ராகுல் மற்றும் சோனியா காந்தியை கடுமையாக சாடினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக விலகல் கடிதம் வெளிவந்துள்ளது. புதிய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பது மீண்டும் தாமதமாகும் என்னும் சூழலுக்கு மத்தியில். காங்கிரஸ் உயர்மட்ட தலைமை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : மூத்த தலைவர்களை வெளியேற்றும் காங்கிரஸ்....இளைஞர்களை கொண்டு மீண்டும் கட்டமைக்கப்படுமா???

 காங்கிரஸை சீர்திருத்தக் கோரிய ஜி-23

குலாம் நபி ஆசாத் 1970 களில்  ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். முன்னாள் ஒன்றியஅமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், ஜம்மு காஷ்மீரில் அக்கட்சியின் முகமாகவும் இருந்தார். கடந்த ஆண்டு குலாம் நபி ஆசாத்தின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக் காலம் முடிவடைந்த பிறகு நடந்த பிரியாவிடை நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி அவரை மிகவும் புகழ்ந்து பேசினார்.

குலாம் நபி ஆசாத் பின்னர் ஜம்முவில் ஆற்றிய ஒரு உரையின் போது பிரதமர் மோடியைப் பாராட்டினார், மேலும் உயர் பதவியை அடைந்த பிறகும் தனது வேர்களை அவர் மறக்கவில்லை என மோடியை புகழ்ந்து பேசினார்.

குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் அணியான ஜி-23 தலைவர்கள் குழுவின் முன்னணி உறுப்பினராக இருந்தார். ஜி-23 அணியினர் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் கட்சியில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிட்த்தக்கது.

புதிய கட்சி தொடங்குகிறார்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் தனது சொந்த மண்ணில் கட்சியைத் தொடங்க விரும்புவதாகக் கூறப்படுகிறது."நான் ஜம்மு-காஷ்மீருக்குச் செல்வேன். அங்கு எனது சொந்தக் கட்சியை உருவாக்குவேன், ஒன்றிய அளவில் கட்சியை உருவாக்கும் சாத்தியக் கூறுகளை பின்னர் பார்ப்பேன்," என்று அவர் ஒரு ஊடகத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் தேர்தலுக்கு முன்னதாக ஆசாத் தனது இருப்பைக் காட்ட ஆர்வமாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.