மேலிடத்திலிருந்து பறந்த தகவல்...அடுத்தடுத்து ரெய்டு...குறிவைக்கப்படுகிறாரா ஈ.பி.எஸ்!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சிப் பிரச்சினை தீவிரமடைந்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ் ஆகியோரின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலிடத்திலிருந்து பறந்த தகவல்...அடுத்தடுத்து ரெய்டு...குறிவைக்கப்படுகிறாரா ஈ.பி.எஸ்!

கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சிப் பிரச்சினை தீவிரமடைந்து வரும் சூழலில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ் ஆகியோரின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளாகும் அதிமுகவை சேர்ந்த 7வது முன்னாள் அமைச்சர் காமராஜ். இதற்கு முன்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் சோதனைக்கு உள்ளாகினர்.

இரகசியத்தை உடைத்த தினகரன்

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளிக்க அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்குக், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் முதல் ஐந்து கோடி வரை தரப்படுவதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியிருந்தார்.

கோவை செல்வராஜின் ஊழல் குற்றச்சாட்டு

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அதிமுகவின் 17 முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படு எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு முனைத் தாக்குதலுக்குள்ளாகும் இ.பி.எஸ் 

தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது டெல்லி ஓ.பி.எஸ் தரப்புக்கு சற்று சாதகமாக உள்ளதாகத் தோன்றுகிறது. ஏனெனில் மூன்று நாட்களாக இந்திய அரசின் வருமான வரித் துறை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோரின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு மற்றும் அவர்கள் நடத்தும் நிறுவனங்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை உருவாவதை டெல்லி விரும்பவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.

இதே சமயத்தில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டது. தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டு வரும் சூழலில் இந்திய வருமான வரித் துறையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஒற்றைத் தலைமையாக வலுப்பெறுவதைத் தடுப்பதில் திமுக மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் ஈடுபடுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வருமான வரிச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டிருப்பது இ.பி.எஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.