ஓ.பன்னீர்செல்வம் மகன் உட்பட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து நீக்கம்!

ஓ.பன்னீர்செல்வம் மகன் உட்பட முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து நீக்கம்!

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை நீடித்து வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் கடந்த ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை. பொதுக்குழு நடைபெற்ற அன்று அவர் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்றிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் சென்றிருந்த போது அவரது ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போலிஸ்காரர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக அலுவலகமும் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது.    

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் அறிவிக்கப்பட்டது. அவரோடு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் இன்று இன்னும் பல ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். அந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சையது கான், கோவை செல்வராஜ், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத்(நாடாளுமன்ற உறுப்பினர்) மற்றும் வி.பி.ஜெயபிரதீப், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 18 முக்கிய நிர்வாகிகள் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.