அக்கா என்னை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றியதே அரசியல் நாடகம் தான்.! தனியார் நாளேடுக்கு சசிகலா அளித்த பேட்டி.! 

அக்கா என்னை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றியதே அரசியல் நாடகம் தான்.! தனியார் நாளேடுக்கு சசிகலா அளித்த பேட்டி.! 

அதிமுகவின் முன்னாள் தற்காலிக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியுமாக இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் சிறையிலிருந்து வெளியில் வந்த அவர் தற்போது ஆடியோக்களை வெளியிட்டு அரசியல் அரங்கில் பரபரப்பாகியுள்ளார். இந்நிலையில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். 

அதில் பேசிய அவர், "பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது விரைவில் குணமடைந்து தமிழகத்திற்கு திரும்பவேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. நான் திரும்பி வருவேன், துரோகிகள் அனைவரையும் தோற்க்கடித்து கட்சியை காப்பாற்றுவேன் என்று அக்காவின் நினைவிடத்தில் சத்தியம் செய்தேன். இப்பொழுதும் அதே எண்ணத்தில் தான் இருக்கிறேன்" எனக் கூறினார்.  

அதன்பின்னர் ஜெயலலிதாவுடன் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றிய கேள்விக்கு "எம்.ஜி.ஆர் இறந்தபின் அவரது உடல் வைக்கப்பட்ட இராணுவ ஊர்தியில் இருந்து அக்கா தள்ளிவிடப்பட்டு காயம் அடைந்தார். வீட்டிற்கு வந்து தனது அம்மாவின் படத்திற்கு முன் விழுந்து நான் தோற்றுவிட்டேன்  என்று அழுதார். அதைப் பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருந்தது. அப்போது அக்காவின் மன உளைச்சலை புரிந்துக்கொண்டேன். அன்று தான் அவருடனே அவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனது கணவருடன் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று ஜானகி அம்மாவை சந்தித்து பேசுகிறேன், கட்சியை ஒன்றிணைப்போம் என்று அக்காவிடம் கூறினேன். ஆனால் அக்கா போகவேண்டாம், நீ போய் சந்திப்பதன் மூலம் எதுவும் நடக்க போவதில்லை என்று சொன்னார். ஆனால் நான் பிடிவாதமாக, இல்லை நான் சென்று பார்க்கிறேன் என்று சொன்னேன். அக்காவோ உன் விருப்பப்படி செய் என்று சொல்லிவிட்டு சென்றார். அதன்படி மாலையில் ஜானகி அம்மாவை சந்தித்தோம். அதன்பின்னரே அவர் பின்வாங்குவதாக கூறினார், இதை தூர்தர்ஷனுக்கும் கூறினார்.

நாங்கள் வீட்டிற்கு வந்து அக்காவிடம் நடந்ததை சொன்னோம், பிறகு விரைவிலேயே அக்கா தலைமை பொறுப்பை ஏற்றார்" எனக் கூறினார்.  தொடர்ந்து பேசிய அவர், "போயஸ்கார்டனில் 33 ஆண்டுகளாக தங்கியிருந்த காலத்தில் ஒருபோதும் அக்காவின் சம்மதம் இல்லாமல் வெளியே சென்றது இல்லை. என்னை வீட்டில் காணவில்லை என்றால் உடனே என்னை தொடர்பு கொண்டு நான் எங்கிருக்கிறேன் என்று கேட்பார்" எனக் கூறினார். 

அதன்பின் ஜெயலலிதாவால் இரண்டு முறை வெளியேற்றப்பட்டதை பற்றிய செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், "அக்கா ஒரு நிமிடம் கூட நானில்லாமல் இருந்ததில்லை.வெளியேற்றம் வெளியுலகத்திற்கு மட்டுமே, ஆனால் தொடர்ந்து நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வோம். நான் 1997 ல் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இந்த செய்தி அக்காவை உலுக்கியது. உடனே மருத்துவமனைக்கு வந்து, பொறுமையின்றி விரைவாக என் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

2011 டிசம்பரில் மீண்டும் வெளியேற்றப்பட்டு  அவர் அறிவுறுத்தலின் பேரில் தான் டி. நகர் இல்லத்தில் இருந்தேன். இவையெல்லாம் திட்டமிடப்பட்டவை தான். அக்கா தினமும் என்னிடம் பேசுவார். அக்காவுடனான தொலைப்பேசி உறையாடல் இரவு 8மணிக்கு தொடங்கி நள்ளிரவில் தான் முடியும். அரசியல் பற்றி என்னுடன் பேசுவார். அந்த மன்னிப்பு கடிதம் அக்காவின் ஆலோசனையின் பேரில் தான் எழுதினேன். சோ மற்றும் அவருக்கு நெருக்கமான சில அதிகாரிகளின் எண்ணத்தை அறிந்து கொள்ளவே இந்த வெளியேற்ற நாடகம் நடந்தது. அதன்பின் போயஸ் கார்டன் திரும்பிய பிறகு ஒவ்வொரு நாளும் என்னுடன் செலவிட்டார்.சின்ன பிள்ளையை போல் என் மடியில் படுத்துக்கொள்வார்" எனத் தெரிவித்தார். 

அதன்பின் ஜெயலலிதாவின் இறுதி நாட்களைப் பற்றிய கேள்விக்கு "அக்கா ஓர் சிறந்த ஆன்மிகவாதி. ஒரு நாளும் பூஜை செய்வதையோ, கடவுளுக்கு நேரம் செலவிடுவதையோ அவர் தவிர்த்தது இல்லை. அப்போலோ மருத்துவமனையில் இருந்த போதுகூட அவரது ஐபேடில் சேமிக்கப்பட்ட அனைத்து சுலோகங்களும் அவர்களுக்காக நான் படிப்பேன். அவருக்கு எல்லாம் மனப்பாடமாகக் கூடத் தெரியும். 

செப்டம்பர் 22 அன்று கூட நன்றாகத்தான் பேசிக்கொண்டு இருந்தோம். அதன்பின் கழிவறைக்கு செல்லும் போது மயக்கம் வருவதாக கூறி என் மேல விழுந்தார்கள். நான் ஒரு கையில் அவர்களை பிடித்துக் கொண்டு மருத்துவர்கள் மற்றும் பாதுகாவலர்களை அழைத்தேன். அதன் பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம்.மருத்துவமனையில் நலமாகத்தான் இருந்தார். அடுத்த நாளில் காவிரி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால் கடைசியில் எங்களது வேண்டுதல்கள் எதுவும் அவர்களை மீட்கவில்லை. 

டிசம்பர் 4ம் தேதி அவர் தயிர்சாதம் மட்டுமே எடுத்துக்கொண்டார். டாக்டர்கள் சரியான இடைவெளியில் சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இரண்டு பன் மற்றும் காபி அவருக்கு அளிக்கப்பட்டது. அப்போது இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா வேண்டும் என்று கேட்டார்கள். அதை நானே என் கையால் போட்டுக்கொடுத்தேன்..

டிசம்பர் 19ம் தேதி அன்று கூட அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று இருந்தேன். அக்காவும்  கொடநாடு சென்று ஓய்வு எடுக்கலாம் எனக் கூறினார். ஆனால் நான் வீட்டிற்கு திரும்பி தங்கிவிட்டு செல்லலாம் என்றேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். அப்போ அவங்க சாப்பிட்டு நல்லாதான் இருந்தாங்க. டிவி பார்த்துக்கொண்டு இருக்கும் போது கீழே விழுந்தார்கள்.  நான் அக்கா அக்கா என்று கத்தினேன், அப்போது ஒரு டாக்டர் தினசரி மருந்துகளை எழுதிக்கொண்டு இருந்தார். உடனே அவர் ஓடிவந்து 
அக்காவின் கண்களை திறக்க முயற்சி செய்தார். ஆனால் திறக்க முடியவில்லை.  உடனே ஐசியுவிற்கு மாற்றப்பட்டார். அக்கா என்னைவிட்டு பிரிவார் என்று நான் ஒரு நாளும் நினைத்ததில்லை" எனக் கூறினார். 

அதன்பின்னர் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஏன் அரசியலிருந்து விலகுனீர்கள் என்ற கேள்விக்கு, "இரட்டைஇலை சின்னத்திற்கு எதிராக நான் எவ்வாறு பிரச்சாரம் செய்ய முடியும்?" எனக் கேள்வி எழுப்பினார்.