வரதட்சணை கொடுக்க மாட்டோம்! வாசகங்கள் மூலம் கேரள பெண்கள் புரட்சி!

கேரளா முதல் தமிழ்நாடு வரை வரதட்சணையால் தொடரும் தற்கொலைகள்

வரதட்சணை கொடுக்க மாட்டோம்! வாசகங்கள் மூலம் கேரள பெண்கள் புரட்சி!
வரதட்சணை.. கடந்த சில நாட்களாக இந்த வார்த்தை ஆபாச வார்த்தையாகவும், அறுவருக்கத்தக்க வார்த்தையாகவும் மாறியுள்ளது. காரணம் கேரளாவில் ஒரே நாளில் நடைபெற்ற 3 தற்கொலைகள்.
வரதட்சணை ஒன்றும் நமது சமுதாயத்தில் நடக்காத ஒன்றா? காலம் காலமாக நடந்து கொண்டு இருப்பது தானே? அதேபோல வரதட்சணையால் பெண்கள் தற்கொலை செய்துக் கொள்வதும் அவ்வப்போது கேள்விப்படும் ஒன்று தானே இதில் என்ன?
என்றால், இந்த முறை கேரளாவில் வரதட்சணையால் தற்கொலை செய்தது மருத்துவ மாணவி என்பது தான். ஆயுர்வேத மருத்துவ மாணவியான விஸ்மயாவுக்கும், ஆர்டிஓ-வாக பணி புரிந்து வந்த கிரண் குமாருக்கும் கேரளாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. வரதட்சணையாக 100 சவரன் நகை ஒரு ஏக்கர் நிலம், 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
குடும்ப வாழ்க்கைக்கு விளக்கேற்ற சென்ற பெண், மகிழ்ச்சியின் நுனியைக் கூட பற்றாமல் தன்னை மாய்த்துக் கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொடுத்த வரதட்சணை பத்தாது எனக் கூறி அணு அணுவாக சித்ரவதை செய்யப்பட்ட விஸ்மயா ஒரு நாள் கிரண் வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். 
 
விஸ்மயா தற்கொலை செய்துக் கொண்டதாக நாடகமாடிய கணவர் வீட்டாரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை துவக்கியது காவல்துறை. மரணத்திற்கு முன்பாக விஸ்மயா வாட்ஸ் அப் மூலம், அனுப்பப்பட்ட உடலில் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவியது.
கிரண்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், உடலில் ஏற்பட்ட காயங்களால் கடுமையாக தாக்கப்பட்டதால் விஸ்மயா உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனையில் விஷம் கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டது. 
அதே நாளில் திருவனந்தபுரத்தை சேர்ந்த அர்ச்சனா மற்றும் ஆலப்புழை வல்லிகுந்நு பகுதியை சேர்ந்த சுசித்ரா என அடுத்தடுத்து மூன்று மரணங்கள் வரதட்சணையால் நடைபெற்றது. 
 
இந்த நோய் தொடர்ந்து கொரோனாவைப் போல தமிழ்நாட்டிலும் பரவியது. சென்னை ஆவடி அருகே பட்டதாரிப் பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஒரு மாதத்திற்கு பிறகு அப்பெண் இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் கடிதத்தை மீட்ட காவல்துறையினர், அவரது கணவர், மாமியார்  உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விஸ்மயா இறப்பிற்கு பிறகு திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், வரதட்சணை கொடுமை சம்மந்தப்பட்ட புகார் அளிக்க 24 மணிநேரமும் செயல்படக் கூடிய வாட்ஸ் அப் எண்ணை அறிவித்து அதனை விசாரிக்க தனி காவல் அதிகாரியையும் நியமித்தார். நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில், அவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஆராட்டு திரைப்படத்தில் வரதட்சணைக்கு எதிரான காட்சிகளை பதிவிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கேரளாவை சேர்ந்த இளம் பெண்கள் சிலர் தங்களது வீட்டு வாசல்களில் வரதட்சணை கேட்டு யாரும் உள்ளே வர வேண்டாம் போன்ற வாசகங்களை எழுதி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு இந்தியா முழுவதிலும் பொதுமக்களும், இளம்பெண்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.