ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான வழக்கு....உச்சநீதிமன்றம் புதிய அறிவிப்பு!

ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிரான வழக்கு....உச்சநீதிமன்றம் புதிய அறிவிப்பு!

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்கு வரும் 20 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உத்தவ் தாக்கரே - ஷிண்டே மோதல்

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகத்தில் ஈடுபட்டார். முதலில் தன்னுடன் 12 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலகத்தை தொடங்கிய அவர், பிறகு சிவசேனாவில் உள்ள 55 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 உறுப்பினர்களை தன் பக்கம் கொண்டு வந்து விட்டார். இதனால் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் சிவசேனாவின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் ஷிண்டே அங்கீகரிக்கப்பட்டார்.

ஷிண்டேவுக்கு எதிராக வழக்கு

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித் தலைமைக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய  ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியும் , ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவிற்கு எதிராகவும், சிவசேனா கட்சிக் கொறடாவை சபாநாயகர் அங்கீகரித்ததற்கு எதிராகவும், சிவசேனா கட்சி சார்பில் ஏராளமான மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கு விசாரணை

இந்த மனுக்களை கடந்த 11 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த வழக்குகளை விசாரிக்க ஒரு அமர்வு அமைக்க கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறி வழக்கை ஒத்தி வைத்தார். இந்நிலையில் இது தொடர்பான  வழக்குகள் வரும் 20 ஆம் தேதி தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

இதனிடையே உத்தவ் தாக்கரே ஆதரவு எம் எல் ஏக்கள் 14 பேர் தங்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இந்த வழக்குகளோடு சேர்த்து விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி கூறினார்.