இலங்கையில் சுமூகமான ஆட்சி மாற்றம் அவசியம்...ஐ.நா செயலாளர்!

இலங்கையில் சுமூகமான ஆட்சி மாற்றம் அவசியம்...ஐ.நா செயலாளர்!

இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை சுமூகமாக மாற்றுவது மற்றும் நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண வலுவான அரசியல் கலந்துரையாடல்கள் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அண்டானியோ குட்ரஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அனைத்து விதமான வன்முறை செயல்களை கண்டிப்பதுடன் அமைதியை முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை, இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் உதவ தயாராக இருக்கின்றது எனவும் குட்ரஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதியும் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான உயர் அதிகாரியுமான ஹனா சிங்கர், சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ளக் கூடிய வகையிலான கலந்துரையாடல்கள் மூலம் உடனடியாக அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம் எனக் கூறியுள்ளார்.