பாஜக குறித்து மூச்சு விடக்கூடாது..! வாயைத் திறக்க கூடாது என அதிமுக தலைமை கட்டளை..!

கூட்டணி குறித்து வெளியிடத்தில் பேசக் கூடாது..!

பாஜக குறித்து மூச்சு விடக்கூடாது..! வாயைத் திறக்க கூடாது என அதிமுக தலைமை கட்டளை..!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா கட்சியை வழிநடத்திய போது பன்னீர்செல்வம் வசம் இருந்த முதலமைச்சர் பதவி எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு சசிகலா  சிறை சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தொடர்ந்து 4 வருடங்கள் தமிழ்நாட்டை ஆண்டனர். 

பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக. இருப்பினும் தோல்வியே மிஞ்சியது. இதுவும் ஒரு வகையில் எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு தான் என்றாலும் கூட, எதிர்ப்பார்க்கப்பட்ட தொகுதிகளிலும், முன்னாள் அமைச்சர்களும் கூட தோல்வியுற்றனர். இதற்கு காரணம் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் என பலரும் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் இதே குற்றச்சாட்டை வைத்தார். 

வானூர் ஒன்றிய அதிமுக சார்பில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான சி.வி.சண்முகம், பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை நாம் முழுமையாக இழந்ததாக தெரிவித்தார். 

கடந்த 10 ஆண்டு காலமாக மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு சென்ற காரணத்தினால், மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்ததாகவும், இந்த ஆட்சி வரவேண்டும் என்று வாக்களிக்கத் தயாராக இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், அதிமுகவின் கணக்கு சரியில்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்,  சிறுபான்மையினர் வாக்கு மற்றும் சில காரணங்களால் நாம் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்ததாகவும் கூறினார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ”உங்களால் தான் என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு” என்று தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா? என்ற கேள்வி மக்களிடமும், இரு கட்சியை சேர்ந்த நிர்வகிகளிடமும் இருந்து வந்தது. 

அதேபோல், பாஜக நிர்வாகி எஸ்.ஆர்.சேகர் தன் ட்விட்டர் பக்கத்தில், "சி.வி.சண்முகம் கருத்தை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஏற்கிறார்களா? என பதில் சொல்ல வேண்டும் எனவும், இல்லையெனில், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 87,403 ஓட்டுப் போட்ட மெஜாரிட்டி மக்களை அவமானப்படுத்திய சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இத்தகைய சலசலப்புக்கு மத்தியில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தல் முதல் சசிகலாவின் ஆட்டம் வரை அனைத்து குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற தவறுகள் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. 

அதுமட்டுமின்றி, கூட்டணி கட்சிகள் குறித்து பொது வெளியில் யாரும் பேச கூடாது எனவும், பொது வெளியில் விமர்சனம் வைக்க கூடாது,  கூட்டணி கட்சிகள் மீது கசப்பு இருந்தால் தாய் தலைமையிடம் தெரிவிக்க வேண்டுமே தவிர மாறாக பொது வெளியில் இதை பற்றி பேச கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அதிமுகவின் தோல்விக்கு பாஜகவின் கூட்டணிதான் காரணம் என்று சிவி.சண்முகம் கூறியிருந்த நிலையில், அதிமுக - பாஜக இடையே மோதல் இல்லை எனவும், அதிமுக பாஜக கூட்டணி எப்போதும் போல தொடரும் என அதிமுக தலைமை சார்பில் கூறப்பட்டது. இப்படி அதிமுகவினர் பாஜக குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும், அதற்கு தலைமை மறுப்பு தெரிவிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.